பாரா ஒலிம்பிக்: உடற்குறைகளைத் தாண்டி திறமைகளைப் போற்றுவோம்
அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயம் என்பது வெறும் அரசாங்கத்தின் கொள்கைகளால் மட்டும் உருவாவதில்லை; மாற்றுத்திறனைத் தாண்டி அவர்களின் திறமைகளை அங்கீகரித்து சம வாய்ப்பளிக்கும் அன்றாட தேர்வுகளாலேயே அது கட்டமைக்கப்படுகிறது, என்று பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
நாட்டின் முதலாவது உடற்குறையுள்ளோருக்கான (பாரா) ஒலிம்பிக் தின விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசிய அவர், அனைவரையும் உள்ளடக்கிய, சம வாய்ப்புகள் நிறைந்த சிறந்த சிங்கப்பூரைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார்.
சனிக்கிழமை (ஆகஸ்ட் 29) நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு உற்சாகமாகப் பங்கேற்றனர்.
உடற்குறையுள்ளோருக்கான சிங்கப்பூர் தேசிய மன்றம் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில், 3 கிலோமீட்டர் பாரா ஒலிம்பிக் நடைபயணத்தையும் பிரதமர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
சிங்கப்பூரின் 20 பாரா விளையாட்டு வீரர்களுடன் இணைந்து மாற்றுத்திறனாளிகள், குடும்பங்கள், மாணவர்கள் பல்வேறு சமூக அமைப்புகளைச் சேர்ந்த 3,000க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் வோங், சிங்கப்பூர் பாரா விளையாட்டு வீரர்களின் ஒழுக்கம், துணிச்சல் மற்றும் தளராத விடாமுயற்சியைப் பெரிதும் பாராட்டினார்.
“இன்று நமது உடற்குறையுள்ள விளையாட்டு வீரர்களின் அசைக்க முடியாத மனஉறுதியைக் கொண்டாடும் சிறப்புமிக்க நாளாகும். ஒவ்வொருவரும் தங்கள் முழு திறனை வெளிப்படுத்தவும், முன்னேற்றத்தின் உச்சத்தை அடையவும் சம வாய்ப்பளிக்க வேண்டும் என்பதை பாரா ஒலிம்பிக் இயக்கம் நமக்கு ஆழமாக உணர்த்துகிறது,” என்று அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கம் உடற்குறையுள்ளோர், மூத்தோர் குடும்பங்களுக்குத் தொடர்ந்து பல தளங்களில் ஆதரவு வழங்கிவருவதை சுட்டிய திரு வோங், உடற்குறையுள்ள மாணவர்களின் பள்ளிப் பருவத்திலிருந்து வேலைக்கு மாறும் கட்டத்திற்கான கூடுதல் உதவிகள் மற்றும் பரவலான வேலைவாய்ப்புகளை உருவாக்குவது குறித்த முக்கியப் பரிந்துரைகளை, சமுதாய, குடும்ப மேம்பாட்டு மூத்த துணை அமைச்சர் கோ பெய் மிங் தலைமையிலான பணிக்குழு விரைவில் வெளியிடும் என்றும் பிரதமர் உறுதி அளித்தார்.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
வரும் அக்டோபர் 18 முதல் 24 வரை ஜப்பானின் ஐஷி-நகோயாவில் நடைபெறவுள்ள ஆசிய பாரா போட்டிகளில் பங்கேற்கும் சிங்கப்பூர் அணியினருக்கு வாழ்த்து தெரிவித்து வழி அனுப்பும் களமாகவும் இந்நிகழ்ச்சி அமைந்தது.
உடற்குறையுள்ளோருக்கான சிங்கப்பூர் தேசிய மன்றத்தின் தலைவர் டியோ-கோ சோக் மியாங், “பல்வேறு பின்னணிகளைக் கொண்ட மக்கள் பாரா வீரர்களுடன் கைகோர்த்து நிற்பது ஒரு வலுவான செய்தியைச் சமூகத்திற்கு அனுப்புகிறது. அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயத்தை உருவாக்குவது மாற்றுத்திறனாளிகளின் பொறுப்பு மட்டுமல்ல; ஒரே சமூகமாக நாம் அனைவரும் இணைந்து கட்டியெழுப்ப வேண்டிய கடமையாகும்,” என்றார்.