📅 Saturday, 17 October 2026 IST | புரட்டாசி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil October 17, 2026 03:03 PM

சிங்கப்பூர் அதிபரின் இறுதி அஞ்சலியில் ஒலிக்கப்பட்ட தேவா பாடல்

சிங்கப்பூர் அதிபரின் இறுதி அஞ்சலியில் ஒலிக்கப்பட்ட தேவா பாடல்

மறைந்த இசையமைப்பாளர் தேவாவிற்கு உலக முழுக்க ரசிகர்கள் இருக்கிறார்கள். பக்தி, கிளாசிக்கல், வெஸ்டர்ன், மெலோடி, நாட்டுப்புறம், கானா என பல்வேறு விதமான பாடல்களை தந்துள்ளார். அவரது இசைக்கு ஒரு நாட்டு அதிபரே ரசிகராக இருந்துள்ளார். அவர் தான் மறைந்த சிங்கப்பூர் அதிபர் எஸ்ஆர் நாதன்.

இந்தியா வம்சாளியை சேர்ந்த தமிழரான இவர் சிங்கப்பூரின் அதிபராக இருந்தார். செல்லப்பன் ராமநாதன் எனும் இவர் சுருக்கமாக எஸ்.ஆர்.நாதன் என அழைக்கப்பட்டார். சிங்கப்பூரின் ஆறாவது அதிபராகப் பணியாற்றிய புகழ்பெற்ற தமிழ் வம்சாவளி அரசியல்வாதி ஆவார். 1999 முதல் 2011 வரை சிங்கப்பூர் வரலாற்றிலேயே மிக நீண்ட காலம் அதிபராக பதவி வகித்தவர் என்ற பெருமைக்குரியவர். இவருக்கு தேவாவின் பாடல்கள் பிடிக்கும். தான் இறந்த பின்னர் தேவா இசையமைத்த ‛தஞ்சாவூர் மண்ணெடுத்து...' பாடலை ஒலிக்க வேண்டும் என தனது ஆசையை வெளிப்படுத்தி இருந்தார்.

2016ல் தனது 92வது வயதில் நாதன் காலமானார். இவரது ஆசைப்படியே சேரன் இயக்கத்தில் முரளி, மீனா உள்ளிட்டோர் நடித்து, தேவா இசையமைப்பில் வெளியான ‛பொற்காலம்' படத்தில் இடம்பெற்ற ‛தஞ்சாவூர் மண்ணெடுத்து...' பாடல் உலகத் தலைவர்கள் முன்னிலையில் நடைபெற்ற சிங்கப்பூர் அரசின் இறுதிச்சடங்கு நிகழ்வில் ஒலிக்கப்பட்டது.

மற்றொரு நாட்டு அதிபரின் இறுதி அஞ்சலியில் தமிழ் இசையமைப்பாளரின் பாடல் ஒலிக்கப்பட்டது. இந்த பெருமை வேறு எந்த இசை கலைஞருக்கும் கிடைத்திருக்குமா என தெரியவில்லை. அந்தளவுக்கு தனது இசையால் ரசிகர்களை கவர்ந்த தேவாவின் மறைவு நிச்சயம் தமிழ் திரையிசை துறைக்கு பேரிழப்பு தான்.