சிங்கப்பூரில் தீபாவளி: புகைமூட்டத்தையும் மீறி கொண்டாட்டம்
சிங்கப்பூரில் கடுமையான புகைமூட்டம் தொடர்ந்தாலும் லிட்டில் இந்தியாவில் பண்டிகைக் கால உணர்வு களைகட்டத் தொடங்கியுள்ளது.
இந்திய மரபுடைமை நிலையத்தில் சனிக்கிழமை (அக்டோபர் 17), தீபாவளிப் பொது வரவேற்பு நிகழ்ச்சி தொடங்கியது.
கடந்த கால, தற்கால தீபாவளி மரபுகளையும் மகிழ்ச்சியையும் சுட்டிக்காட்டும் வகையில் அடுத்த நான்கு வார இறுதிகளில் கொண்டாட்டங்கள் தொடரும்.
கடும் புகைமூட்டத்தின் காரணமாக, வழக்கமாக வெளிப்புறத்தில் நடக்கும் ஆடல்-பாடல் அங்கங்கள் நிலையத்தினுள் இடம்பெற்றன.
இதனால் மக்கள் வருகையும் குறைந்துள்ளது என்று கருதுவதாகத் தெரிவித்தார் சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்றத்தின் உறுப்பினர் பவித்ரா, 19.
“உள்ளரங்கச் சூழல் மிகவும் சிறப்பாக உள்ளது,” என்றார் அவர்.
பாரம்பரியப் பட்டுச்சேலை கட்டும் வாய்ப்பு, கைவினை நடவடிக்கைகள், கிளி ஜோசியம், தீபாவளிச் சந்தை, ஆடல்-பாடல், விளையாட்டு அங்கங்கள் போன்றவை இந்தியர்களை மட்டுமன்றி பிற இன மக்களையும் வரவேற்றன.
புகைமூட்டம் கூட்டத்தைப் பாதிக்காது என்று சிலர் நம்புகின்றனர்.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
தன் பிள்ளைகள், நண்பர்களுடன் மரபுடைமை நிலையத்துக்கு ஒவ்வோர் ஆண்டும் வரும் சத்தியா, 37, இம்முறை நிலவும் புகைமூட்டம் தன்னைப் பாதிக்கவில்லை என்று தெரிவித்தார்.
“பண்டிகைக்காலக் குதூகலம் இப்போதுதான் தொடங்கியிருக்கிறது,” என்றார் அவர்.
இருப்பினும் புகைமூட்டத்தினால் உட்புறங்களில் கூடுவது நல்லது என்று கூறினார் சுகந்தி, 57.
“புகைமூட்டத்தைப் பற்றிய கவலையின்றிக் கொண்டாட்டங்களை அனுபவிக்க விரும்பும் குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் உட்புறத்தில் இருப்பது மிகவும் உதவியாக இருக்கும்,” என்றார் அவர்.
இந்திய மரபுடைமை நிலையத்தின் தீபாவளிக் கொண்டாட்டங்கள் அக்டோபர் 17ஆம் தேதி முதல் தீபாவளி நாள் (நவம்பர் 8) வரை மக்களை வரவேற்கும்.
ஒவ்வொரு சனிக்கிழமையும் இந்திய மரபுடைமை நிலையம் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மேல் விவரங்களுக்கு https://www.indianheritage.gov.sg/en/whats-on/programmes/deepavali-2026 என்ற இணையப்பக்கத்தை நாடலாம்.