📅 Friday, 25 September 2026 IST | புரட்டாசி 9, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil September 25, 2026 02:03 PM

சிங்கப்பூர் சில்லுத் துறையை ஊக்குவிக்க புதிய தேசியத் திட்டம்

சிங்கப்பூர் சில்லுத் துறையை ஊக்குவிக்க புதிய தேசியத் திட்டம்

எஸ்ஜி செமிகண்டக்டர் என்ற புதிய விளம்பரப்படுத்துதல் திட்டத்தின்கிழ் சிங்கப்பூர் அதன் கணினி சில்லுத் துறையை உலகிற்கு விளம்பரப்படுத்தவுள்ளது.

மேலும் உயர்தர ஆய்வையும் உற்பத்தியையும் ஈர்க்க சிங்கப்பூர் எண்ணம் கொண்டுள்ளது. இந்நிலையில் தேசிய அளவிலான எஸ்ஜி செமிகண்டக்டர் திட்டம் தொடங்கப்படுகிறது.

உலகளாவிய சில்லு நிறுவனங்களான அப்லைட் மட்டீரியல்ஸ், குளோபல்ஃபவுண்ட்ரீஸ் ஆகியவற்றுடன் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிலையில் இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அமைச்சரின் அறிவிப்பு

புதிய திட்டம் குறித்து வர்த்தக, தொழில் அமைச்சர் (எரிசக்தி, தொழில்துறை) டான் சீ லெங் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 25) அறிவித்தார். எஸ்ஜி செமிகண்டக்டர், தொழில்துறைப் பங்காளித்துவங்களிலும் சிங்கப்பூரின் பகுதி மின்கடத்தித் துறையை முன்னேற்றுவதிலும் நமது ஒன்றுபட்ட அணுகுமுறையை எடுத்துக்காட்டும் ஒன்றிணைந்த தேசிய அடையாளத்தைப் பிரதிபலிக்கும் என்று டாக்டர் டான் குறிப்பிட்டார்.

நாட்டின் சில்லு ஆய்வு, உற்பத்தி, உள்கட்டமைப்பு, திறனாளர்கள் ஆகிய அம்சங்களை ஒன்றான, ஒருங்கிணைந்த பகுதி மின்கடத்தித் தளமாக அனைத்துலக முதலீட்டாளர்களிடம் எடுத்துக்காட்டுவது நோக்கம் என்று அறிவியல், தொழில்நுட்ப, ஆய்வு அமைப்பு விவரித்தது. அறிவியல், தொழில்நுட்ப, ஆய்வு அமைப்பும் பொருளியல் வளர்ச்சிக் கழகமும் உருவாக்கிய எஸ்ஜி செமிகண்டக்டர் முதலில் அரசாங்கத் துறையின் ஆய்வு, வளர்ச்சியை விளம்பரப்படுத்தப் பயன்படுத்தப்படும்.

உலகில் சிங்கப்பூரின் நிலை

உலகளவில் சில்லுகளில் 10ல் ஒன்றையும் பகுதி மின்கடத்தி உற்பத்திப் பொருள்களில் ஐந்தில் ஒரு பங்கையும் சிங்கப்பூர் உற்பத்தி செய்கிறது என்று டாக்டர் டான் தமது உரையில் தெரிவித்தார். அதேவேளை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒட்டுமொத்த உற்பத்தித் துறை கிட்டத்தட்ட 20 விழுக்காட்டுப் பங்கு வகிப்பதாகவும் அவர் தெரிவித்தார். இருந்தாலும் மெத்தனமாக இருந்துவிட முடியாது என்றும் அவர் சுட்டினார்.

“உலகளவில் சிங்கப்பூரின் பகுதி மின்கடத்திக் கட்டமைப்பை நாம் உயர்த்திவரும் வேளையில், நம்முடன் உற்பத்தி செய்யுங்கள், அடுத்தத் தலைமுறை பகுதி மின்கடத்திப் புத்தாக்க முயற்சிகளை சிங்கப்பூரிலிருந்து உலகிற்குக் கொண்டு செல்வோம்,” என்றார் டாக்டர் டான். சிங்கப்பூர் பகுதி மின்கடத்திச் சங்க மாநாட்டின் ஓர் அங்காமாக ஆண்டுதோறும் நடைபெற்றுவரும் இனோவேட் டுகெதர் நிகழ்ச்சியில் தொழில்துறைத் தலைவர்களிடம் அவர் உரையாற்றினார்.

இனோவேட் டுகெதர் நிகழ்ச்சியை அறிவியல், தொழில்நுட்ப, ஆய்வு அமைப்பு நடத்திவருகிறது.