📅 Friday, 02 October 2026 IST | புரட்டாசி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil May 28, 2026 02:00 AM

சிங்கப்பூர் சிறைத் துறை அதிகாரிகள் அதிபரின் தனிப்பட்ட உதவியாளர்களாகப் பதவியேற்பு

சிங்கப்பூர் சிறைத் துறை அதிகாரிகள் அதிபரின் தனிப்பட்ட உதவியாளர்களாகப் பதவியேற்பு

அதிபரின் கௌரவ தனிப்பட்ட உதவியாளர்களாக இதுவரை சிங்கப்பூர் ஆயுதப் படை, சிங்கப்பூர்க் காவல்துறை, சிங்கப்பூர்க் குடிமை தற்காப்புப் படை அதிகாரிகள் பொறுப்பேற்று வந்த நிலையில் இவ்வாண்டு சிறைத் துறை அதிகாரிகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த ஆண்டு புதிதாகப் பதவியேற்ற 18 அதிகாரிகளில் இருவர் சிறைத் துறை அதிகாரிகள் ஆவர்.

திங்கட்கிழமை (மே 25) தற்காப்பு அமைச்சு வளாகத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் அவர்கள் உட்பட மொத்தம் 113 அதிகாரிகள் அதிபரின் கௌரவ தனிப்பட்ட உதவியாளர்களாகப் பொறுப்பேற்றனர்.

“சிறைத் துறை அதிகாரிகளின் தேர்வு அவர்கள் நமது சமூகத்தில் கொண்டிருக்கும் முக்கியப் பங்கைப் பிரதிபலிக்கிறது,” என்று கூறினார் அதிபர் தர்மன் சண்முகரத்னம்.

அவர்களின் பணி, பாதுகாப்பையும் ஒழுங்குமுறையையும் தாண்டி, மறுவாழ்வு, மறுஒருங்கிணைப்பு, ஒவ்வொரு மனிதனுக்கும் இரண்டாவது வாய்ப்பு வழங்கப்படவேண்டும் என்ற நம்பிக்கை ஆகியவற்றையும் உள்ளடக்கும் என்று அவர் கூறினார்.

“பெரும்பாலான நேரங்களில் மக்கள் கவனிக்கத் தவறும் கடினமான பணியை அவர்கள் செய்துவருகிறார்கள்,” என்று திரு தர்மன் சொன்னார்.

முன்னாள் கைதிகளின் வாழ்வை மெருகேற்றுவது, அவர்கள் மீண்டும் சமூகத்தில் ஒன்றிணைவது போன்ற முக்கியக் கடமைகளைக் கண்ணியமாக நிறைவேற்றிவரும் சிறைத் துறையினரை அங்கீகரித்தார் அவர்.

இஸ்தானாவில் நடைபெறும் முக்கியத் தூதரக நிகழ்வுகளை முன்னின்று நடத்துவதும் வெளிநாட்டுத் தலைவர்களை உபசரிப்பதும் அதிபரின் தனிப்பட்ட உதவியாளர்களின் முக்கியக் கடமைகளாகும்.

அவற்றோடு, அதிபரின் உள்நாட்டு, வெளிநாட்டுப் பயணங்களின்போது அவருடன் இருந்து உதவுவது, அவசரக் காலங்களில் அதிபரின் பாதுகாப்பை உறுதிசெய்வது ஆகியவையும் அவர்களின் பொறுப்புகளில் அடங்கும்.

இவ்வாண்டு புதிதாகப் பொறுப்பேற்றவர்களில் காவல்துறையைச் சேர்ந்த டிஎஸ்பி (தேசிய சேவை) முகம்மது அசார் ஹஜ் முகம்மதும் ஒருவர்.

“செய்தியை முதலில் கேட்டவுடன் பெருமை, பொறுப்புணர்வு, பயம் என அனைத்து உணர்வுகளையும் ஒரே நேரத்தில் உணர்ந்தேன்,” என்றார் அவர்.

அந்தப் பொறுப்பை மிகுந்த நன்றியுடனும் பணிவுடனும் ஏற்பதாக அசார் கூறினார்.

“பொதுச் சேவை என் வாழ்வில் ஒரு முக்கிய அங்கம் எனக் கூறலாம். அதற்கு என் குடும்பத்தினரின் ஆதரவு மிகவும் பக்கபலமாக இருந்துள்ளது. இந்தப் புதிய பயணத்திலும் அவர்கள் என்னுடன் துணை நிற்பார்கள் என நான் நம்புகிறேன்,” என்று சொன்னார் அசார்.

இந்தப் புதிய பொறுப்பின்வழி மற்ற அதிகாரிகளுடன் நட்புறவை வளர்க்க ஆவலாக உள்ளதாகவும் அவர் கூறினார்.

சிங்கப்பூர்த் தமிழ் பண்பாட்டு மையத்துடன் அவர் பல ஆண்டுகளாகத் தொண்டூழியம் செய்துவருவது குறிப்பிடத்தக்கது.