சிங்கப்பூர் சுற்றுலா துறையில் இந்தியர்களின் ஆதிக்கம்..! 6 மாதங்களில் 6 லட்சம் பேர் பயணம்
சிங்கப்பூர் சுற்றுலா துறையில் இந்தியர்களின் ஆதிக்கம்..! 6 மாதங்களில் 6 லட்சம் பேர் பயணம்
சிங்கப்பூரின் சுற்றுலாத் துறைக்கு இந்தியா எப்போதுமே ஒரு முக்கியச் சந்தையாகத் தொடர்ந்து திகழ்ந்து வருகிறது. அந்த வகையில் 2026-ஆம் ஆண்டின் முதல் பாதியில் சுமார் 6 லட்சத்திற்கும் அதிகமான இந்தியப் பயணிகள் சிங்கப்பூருக்கு சென்றுள்ளனர்.
நடப்பாண்டு ஜனவரி முதல் ஜூன் வரையிலான கால கட்டத்தில் சிங்கப்பூருக்கு வருகை தந்த இந்தியர்களின் எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டியுள்ளதாக சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் (STB) தகவல் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள STB-யின் மண்டல இயக்குநர் மார்கஸ் டான், சமீப காலங்களில் பயணத் துறை எதிர்கொண்ட உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் இந்தியாவின் இந்தச் சீரான செயல்பாடு மிகவும் குறிப்பிடத்தக்கது.
இந்தியப் பயணிகள், விமான நிறுவன பார்ட்னர்கள் மற்றும் பயணத் துறை சார்ந்தவர்களுடன் பல ஆண்டுகளாக நாங்கள் வளர்த்தெடுத்துள்ள வலுவான உறவுகளுக்கு இது ஒரு சான்று என குறிப்பிட்டு உள்ளார். அதே போல STB-யின் சமீயபடிய தரவுகளின்படி, 2026-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 374 மில்லியன் சிங்கப்பூர் டாலர் செலவழித்ததன் மூலம், சிங்கப்பூரில் அதிக செலவு செய்த வெளிநாட்டு பயணிகளிலும் இந்தியர்களே முதலிடம் பிடித்தனர்.
மொத்தத்தில் இந்த ஆண்டின் முதல் பாதியில் 8.19 மில்லியன் பயணிகள் சிங்கப்பூருக்கு வருகை தந்துள்ளதாக STB குறிப்பிட்டு உள்ளது. பிராந்திய ரீதியிலான பயண சவால்கள் மற்றும் ஹோட்டல் அறை வாடகைகள் உயர்வு காரணமாக சிங்கப்பூரின் ஒட்டுமொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகை 2% குறைந்த போதிலும், இந்தியப் பயணிகளின் வருகை வலுவாகவே இருப்பது இதன் மூலம் தெரிய வந்துள்ளது.