📅 Friday, 04 September 2026 IST | ஆவணி 19, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil September 04, 2026 01:03 AM

சிங்கப்பூர் எஃப்

சிங்கப்பூர் எஃப்

சிங்கப்பூர் வாங்கியுள்ள 20 எஃப்-35 வகை போர் விமானங்களின் மொத்த ஒப்பந்த மதிப்பு US$4.06 பில்லியன் (S$5.17 பில்லியன்) என்று அமெரிக்கத் தற்காப்பு அமைச்சின் அறிக்கை தெரிவிக்கிறது.

ஒப்பந்தத்தின் மொத்தப் பெறுமானம் அதிகாரபூர்வமாக வெளிப்படுத்தப்பட்டிருப்பது இதுவே முதன்முறை.

அவற்றில் எட்டு விமானங்கள் தெங்கா விமானப் படைத்தளத்திலும் எஞ்சிய 12 விமானங்கள் அமெரிக்காவிலும் தளம் அமைக்கப்படவுள்ளன.

சிங்கப்பூர் குடியரசு ஆகாயப்படைக்கான முதல் எஃப்-35 விமானம் 2026 இறுதியில் அமெரிக்க விமானப் படைத்தளம் ஒன்றுக்கு விநியோகிக்கப்படும். அவை 2029ல்தான் சிங்கப்பூருக்குக் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எஃப்-35பி வகையைச் சேர்ந்த 12 விமானங்கள், அமெரிக்காவின் அர்கான்சாஸ் மாநிலத்தில் உள்ள எபிங் ஆகாய தேசிய படைத்தளத்தில் நிரந்தரமாக நிறுத்தப்படும்.

சிங்கப்பூர் குடியரசு ஆகாயப்படையின் எஃப்-35 போர் விமானப் பயிற்சிகள் அங்கு நடைபெறும். குறுகிய ஓடுபாதைகளில் இயங்கக்கூடிய இவை, ஹெலிகாப்டர் போல செங்குத்தாகப் பறக்கவும் தரையிறங்கவும் கூடியவை.

நிலப்பரப்பு குறைவாக உள்ள சிங்கப்பூருக்கு அவை அதிக நீக்குப்போக்கை வழங்கும் என்று அப்போதைய தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் தெரிவித்திருந்தார்.

எஞ்சிய எட்டு எஃப்-35ஏ விமானங்கள் தெங்கா ஆகாயப் படைத்தளத்தில் நிறுத்தப்படும். அவை 8,160 கிலோ எடையுள்ள ஆயுதச் சுமையை ஏந்திச் செல்லும் திறன் கொண்டவை. மேலும், அதிக எரிபொருள் கொள்ளளவுடன் 2,200 கிலோமீட்டர் தூரம் வரை தொடர்ச்சியாகப் பறக்கக்கூடியவை.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

எஃப்-35ஏ விமானங்களுக்கான முதன்மைச் செயல்பாட்டுத் தளத்தின் வடிவமைப்புப் பணிகளைச் சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சு ஏற்கெனவே தொடங்கியுள்ளது.

2029 அமெரிக்க நிதியாண்டின் நான்காம் காலாண்டிற்குள் அது முழுமையாகச் செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிங்கப்பூரின் பழைய எஃப்-16 போர் விமானங்களுக்குப் பதிலாக எஃப்-35 விமானங்கள் வாங்கப்படுகின்றன.

இதுகுறித்த முழு விவரங்கள் இறுதி செய்யப்பட்ட பிறகு முறைப்படி பகிரப்படும் எனத் தற்காப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.