சிங்கப்பூர் பூல்ஸ் உட்பட $275,000 சூதாட்ட அபராதம்
விதிமுறைகளை மீறியதற்காக சிங்கப்பூர் பூல்ஸ், மெரினா பே சேண்ட்ஸ் (எம்பிஎஸ்), ரிசோர்ட்ஸ் வேர்ல்ட் செந்தோசா (ஆர்டபிள்யூஎஸ்) ஆகிய நிறுவனங்களுக்கு சூதாட்ட ஒழுங்குமுறை ஆணையம் (ஜிஆர்ஏ) மொத்தம் $275,000 அபராதம் விதித்துள்ளது.
அக்டோபர் 6ஆம் தேதி வெளியிடப்பட்ட அதன் வருடாந்தர அறிக்கையில், சூதாட்டக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின்கீழ் உரிம நிபந்தனைகளை மீறி தங்களைத் தாங்களே சூதாட்டத்திலிருந்து விலக்கிக்கொண்ட ஒருவரைத் தவறுதலாக பந்தயப் பிடிப்புக்கு அனுமதித்ததாக ஜிஆர்ஏ தெரிவித்துள்ளது.
எம்பிஎஸ், ஆர்டபிள்யூஎஸ் ஆகிய நிறுவனங்கள் சூதாட்டக் கட்டுப்பாட்டு (விளம்பரம்) விதிகளை மீறியுள்ளன.
சிங்கப்பூர் பூல்ஸ், எம்பிஎஸ் ஆகிய நிறுவனங்களுக்குத் தலா $100,000 அபராதமும், ஆர்டபிள்யூஎஸ் நிறுவனத்திற்கு $75,000 அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த அபராதங்கள் இந்த அமைப்புகள் ஒவ்வொன்றும் செய்த பல்வேறு விதிமீறல்களுக்காக விதிக்கப்பட்டதாகும்.
சிங்கப்பூர் பூல்ஸின் விதிமீறலை, அந்நிறுவனமே கண்டுபிடித்ததாக ஜிஆர்ஏ செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
மாதந்தோறும் ஆய்வு செய்தபோது தங்களைத் தாங்களே விலக்கிக் கொண்ட ஒருவரின் கணக்கு நிறுத்தப்படாமல் அந்த நபர் பந்தயப்பிடிப்பில் ஈடுபட அனுமதிக்கப்பட்டது தெரியவந்தது.
ஜிஆர்ஏ நடத்திய மேல்விசாரணையில் சிங்கப்பூர் பூல்ஸின் அமைப்பில் ஏற்பட்ட சிக்கலே காரணம் என்பது தெரியவந்தது.
தேசிய சூதாட்ட பிரச்சினைகள் மன்றத்தின் இணையத்தளம் மூலமாக ஒருவர் சூதாட்ட நடவடிக்கைகளிலிருந்து தம்மை விலக்கி வைத்துக் கொள்ள விண்ணப்பிக்கலாம். அந்நபர் கேட்டுக் கொண்டதற்கு ஏற்ப அவர், சூதாட்ட வளாகத்திற்குள் நுழைவதையோ அல்லது சிங்கப்பூர் பூல்ஸில் கணக்குகளைத் தொடங்குவதையோ தடுக்க முடியும்.