சிங்கப்பூர்: வெளிநாட்டு வாகன ஓட்டிகளிடம் $639,000 அபராதம் வசூல்
சிங்கப்பூரின் நிலச் சோதனைச்சாவடிகளில் செப்டம்பர் 28 முதல் 30ஆம் தேதி வரை நடத்தப்பட்ட சிறப்புச் சோதனையில், வெளிநாட்டு வாகன ஓட்டிகள் 265 பேர் பிடிபட்டனர். அவர்கள் செலுத்தத் தவறிய 639,000 வெள்ளிக்கும் அதிகமான அபராதத் தொகை வசூலிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
போக்குவரத்துக் காவல்துறை தலைமையேற்ற இந்தச் சோதனை நடவடிக்கையில் குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையம், வீடமைப்பு வளர்ச்சிக் கழகம், நிலப் போக்குவரத்து ஆணையம், தேசியச் சுற்றுப்புற அமைப்பு, நகரச் சீரமைப்பு ஆணையம் ஆகிய ஐந்து அமைப்புகளின் அதிகாரிகளும் இணைந்து செயல்பட்டனர்.
அபராதங்களைச் செலுத்தத் தவறும் வெளிநாட்டு வாகன ஓட்டிகள் சிங்கப்பூருக்குள் நுழையத் தடை விதிக்கப்படலாம் என்று இந்த ஆறு அரசாங்க அமைப்புகளும் வியாழக்கிழமை (அக்டோபர் 8) வெளியிட்ட கூட்டறிக்கையில் எச்சரித்துள்ளன.
அனைத்து வாகன ஓட்டிகளும் வேகக் கட்டுப்பாடு, போக்குவரத்துச் சமிக்ஞை விளக்குகள், மின்னியல் சாலைக் கட்டணம், வாகனப் புகை வெளியேற்ற வரம்புகள் ஆகிய சாலைப் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றி நடக்க வேண்டும் என்று அதிகாரிகள் வலியுறுத்தினர்.
நவம்பர் 2ஆம் தேதி முதல், அபராதத் தொகையைச் செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ள வெளிநாட்டு வாகனங்கள் நிலப் போக்குவரத்து ஆணையத்திடம் வாகன நுழைவு அனுமதிச் சீட்டைப் பெறவோ புதுப்பிக்கவோ முடியாது.
எனவே, வாகன ஓட்டிகள் ‘ஏஎக்ஸ்எஸ்’ (AXS) முனையங்கள், செயலி, இணையத்தளம் அல்லது சம்பந்தப்பட்ட அரசாங்க அமைப்புகளின் சேவை முகப்புகள் வாயிலாகத் தங்கள் அபராதங்களை உடனடியாகச் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.