📅 Friday, 28 August 2026 IST | ஆவணி 12, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil August 28, 2026 03:04 AM

சிங்கப்பூர்: வெப்பமண்டலத் தரவு நிலையங்களுக்கான திரவியக் குளிரூட்டுத் தரநிலை

சிங்கப்பூர்: வெப்பமண்டலத் தரவு நிலையங்களுக்கான திரவியக் குளிரூட்டுத் தரநிலை

வெப்பமண்டலங்களில் திரவியம் மூலம் குளிரூட்டுவதற்கான (liquid cooling) புதிய தரநிலையை தகவல்தொடர்பு, ஊடக மேம்பாட்டு ஆணையமும் என்டர்பிரைஸ்எஸ்ஜி அமைப்பும் உருவாக்கியுள்ளன.

சிங்கப்பூர்த் தரங்கள் மன்றம் வாயிலாக அவை இதனைச் செய்துள்ளன. உலகளவில் இதுபோன்ற தரநிலை முதன்முறையாக உருவாக்கப்பட்டுள்ளது.

உள்ளூரில் தரவு நிலையங்களை நடத்தும் நிறுவனங்கள், ஆலோசகர்கள், கல்விமான் ஆய்வாளர்கள் உள்ளிட்ட தரப்பினரைக் கொண்ட செயற்குழு இந்தத் தரநிலையை உருவாக்கியுள்ளது. இது, வெப்ப மண்டலங்களில் உள்ள தரவு நிலையங்களில் திரவியம் மூலம் குளிருட்டும் முறைகளை வடிவமைத்து செயலாற்றலை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்வதற்கான வழிகாட்டுதல் குறிப்புகளை அளிக்கிறது.

தகவல்தொடர்பு, ஊடக மேம்பாட்டு ஆணையமும் என்டர்பிரைஸ்எஸ்ஜியும் இணைந்து வெளியிட்ட செய்தி அறிக்கையில் இத்தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

மின்னிலக்கச் சேவைகள், செயல்பாடுகள், பரிவர்த்தனைகள் ஆகியவற்றுக்கு ஆதரவளித்து சிங்கப்பூரின் மின்னிலக்கப் பொருளியலுக்குத் தரவு நிலையங்கள் அடித்தளமாக விளங்குவதாக அந்தச் செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு போன்ற கணினி முறைகளை அதிகம் பயன்படுத்தும் நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றால் கணினிச் செயல்பாடுகள் அதிகரிக்கும்போது தரவு நிலையங்கள் நீடித்த நிலைத்தன்மையுடன் வளர்ச்சியடைய அவை மேலும் ஆக்ககரமான முறையில் எரிசக்தியையும் நீரையும் பயன்படுத்தவேண்டும் என்றும் செய்தி அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் உள்ள பெரும்பாலான தரவு நிலையங்கள், தங்களின் ‘சர்வர்’களிலிருந்து வெளியாகும் வெப்பத்தை அகற்ற காற்றைக் கொண்டு குளிரூட்டும் வசதியைப் பயன்படுத்துகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்றைக் கொண்டு குளிரூட்டும் பாரம்பரிய முறைகளைக் காட்டிலும், திரவியம் மூலம் குளிரூட்டும் முறைகள் தரவு நிலையங்களில் எரிசக்திப் பயன்பாட்டை 30 விழுக்காட்டுக்கும் மேல் குறைக்கும் என்றும் விவரிக்கப்பட்டுள்ளது.