சட்டசபை நிகழ்ச்சிகள் ஒளிபரப்பில் 'ரீல்ஸ்'களை தடுக்க வருகிறது மாற்றம்
சென்னை: சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்யும்போது சில நிமிடங்கள் தாமதமாக ஒளிபரப்ப திட்டமிடப்பட்டு உள்ளது.
தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் முடிந்து துறை வாரியாக மானிய கோரிக்கை விவாதம் நடந்து வருகிறது. துறைவாரியாக நடக்கும் மானிய கோரிக்கை விவாதங்களில், எம்.எல்.ஏ.,க்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.
அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் எழுப்பும் கேள்விகளுக்கு, அமைச்சர்கள் நேரடியாக பதில் தராமல் அரசியல் ரீதியாக பேசுவதால் சபையில் சலசலப்பு எழுகிறது.
சபை காலை 9:30 மணிக்கு துவங்கி மாலை முடியும் வரை நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அதை பல்வேறு 'யு டியூப் சேனல்'கள் நேரடி ஒளிபரப்பு செய்து வருகின்றன. இவற்றை பொது மக்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.
சர்ச்சைக்குரிய வார்த்தைகளை சபைக்குறிப்பில் இருந்து சபாநாயகர் நீக்குவதாக அறிவிக்கிறார். ஆனால் அவை நேரடி ஒளிபரப்பில் மட்டுமின்றி, 'ரீல்ஸ்' ஆக வெளியிடப்பட்டு விடுகின்றன. இதனால் தேவையற்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே சபாநாயகர் நீக்கும் வார்த்தைகளை நேரடி ஒளிபரப்பில் இடம்பெறாமல் செய்ய வேண்டும் என தி.மு.க., தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சபை நிகழ்வுகளின் நேரடி ஒளிபரப்பை 5 முதல் 15 நிமிடங்கள் வரை தாமதமாக ஒளிபரப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான சோதனை முயற்சிகள் நடந்து வருகின்றன. நடப்பு வாரத்திலேயே, இந்த நடவடிக்கை செயல்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளதாக சட்டசபை செயலக வட்டாரத்தில் கூறப்படுகிறது.
தி.மு.க., - அ.தி.மு.க., ஆட்சி காலங்களில், காலை 9:30 மணிக்கு துவங்கும் சட்டசபை, பிற்பகல் 2:00 மணி வரை நடக்கும். அவசியமுள்ள நாட்களில் கூடுதலாக ஒரு மணி நேரம் சபை நடக்கும். ஆனால், தற்போது இரவு 7:00 மணியை தாண்டியும் சட்டசபை கூட்டம் நடக்கிறது. கடந்த 25ம் தேதி இரவு 7:15 மணி வரை இடைவேளையின்றி, 10 மணி நேரம் சபை கூட்டம் நடந்தது.இதனால், மூத்த எம்.எல்.ஏ.,க்கள், உடல் நலக் குறைபாடுள்ள எம்.எல்.ஏ.,க்கள் பலரும் சோர்ந்து போயினர். இதை நேரடி ஒளிபரப்பில் பார்த்த பொது மக்களும், 'கின்னஸ் சாதனைக்கு சட்டசபை கூட்டம் நடத்தப்படுகிறதா' என விமர்சித்தனர்.