சிங்கப்பூரில் 2,000 தொழில்நுட்ப வேலைகள் மற்றும் பயிற்சி வாய்ப்புகள்
சிங்கப்பூரில் புதிய பட்டதாரிகளுக்கும் பணியிடை மாற்றத்திற்குத் திட்டமிடும் தொழில்முறைப் பணியாளர்களுக்கும் தொழில்நுட்பத் துறையில் கிட்டத்தட்ட 2,000 வேலை, பயிற்சி வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
அக்செஞ்சர், என்சிஎஸ், மைக்ரோசாஃப்ட் போன்ற முன்னணித் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து அரசாங்கம் முன்னெடுக்கும் விரிவாக்கப்பட்ட திட்டம் இதனைச் சாத்தியமாக்கியுள்ளது.
தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்தின் (ஐஎம்டிஏ) தலைமையிலான புதிய பங்காளித்துவங்களின்கீழ், இந்த வேலை, பயிற்சி வாய்ப்புகள் 20க்கும் அதிகமான நிறுவனங்களில் செயற்கை நுண்ணறிவு, இணையப் பாதுகாப்பு, தரவு, மென்பொருள் ஆகிய துறைகளில் அமைந்திருக்கும். மென்பொருள் பொறியாளர், பாதுகாப்புப் பகுப்பாய்வாளர், தரவு அறிவியலாளர் போன்ற பொறுப்புகள் இவற்றில் அடங்கும்.
இந்தத் துறைகளில் சிங்கப்பூரின் மனிதவளத் தேவை தொடர்ந்து அதிகரிப்பதாகத் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ தெரிவித்தார். சிங்கப்பூர்க் கணினிச் சங்கம் ஏற்பாடு செய்த ‘டெக்3 ஃபோரம் 2026’ மாநாட்டில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 20) அவர் உரையாற்றினார். ‘நிறுவனம் வழிநடத்தும் பயிற்சித் திட்டத்தை’ அவர் அப்போது அறிவித்தார்.
இந்தத் திட்டம், வழக்கமாகத் தொழில்முறை வல்லுநர்கள் மின்னிலக்கத் திறன்களைப் பெற்று தொழில்நுட்பப் பணிக்கு மாற உதவும் ‘டெக்ஸ்கில்ஸ் ஆக்சிலரேட்டர்’ (TechSkills Accelerator) திட்டத்தின் விரிவாக்கப்பட்ட அங்கமாகும்.
தொழில்நுட்ப, வர்த்தகத் தலைவர்கள் ஏறக்குறைய 800 பேர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் டியோ, செயற்கை நுண்ணறிவால் கணினி நிரலாக்கம் அடிப்படை அம்சமாகிவிட்டது என்று சுட்டினார். அதனால் பகுத்தறிந்து, சூழலுக்கு ஏற்ப முடிவெடுக்கும் மனிதத் திறனை மேம்படுத்துவதில் தொழில்நுட்ப, வர்த்தகத் துறை வல்லுநர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
“சூழ்நிலைகள், மனித உறவுகள், தனிப்பட்ட செயல்பாடுகளைப் புரிந்துகொள்வதுடன், இதன் விளைவுகள் சமுதாயத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்துமா என்பதை முன்கூட்டியே உணர்ந்து அதைத் தடுக்கும் ஆற்றல் மனித அனுபவத்தால் மட்டுமே சாத்தியம்,” என்றும் அவர் கூறினார்.
மேலும், “கணினி நிரல்களை உருவாக்குவதிலும் பகுப்பாய்வு செய்வதிலும் செயற்கை நுண்ணறிவு மேம்பட்டு வரும் சூழலில், எந்தப் பிரச்சினைக்குத் தீர்வு தேவை, எது வெற்றி பெறும், விஷயங்களை எவ்வாறு முன்னோக்கி எடுத்துச் செல்வது என்பதைத் தீர்மானிக்கும் மனித அறிவிற்கான மதிப்பு மேலும் உயரும்,” என்றார் திருமதி டியோ.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
இத்தகைய அனுபவ ரீதியிலான புரிதல் புதிதாகப் பட்டம் பெற்றவர்களுக்கும் பணியிடைமாற்றத்தை விரும்புவோர்க்கும் தொடக்கத்தில் சவாலாக இருக்கலாம் என்றும், அந்தச் சவால்களைக் களைவதே ஆணையத்தின் இந்த விரிவாக்கப்பட்ட திட்டத்தின் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இத்திட்டத்திற்குத் தேர்வாகும் விண்ணப்பதார்கள் நிதி, சுகாதாரப் பராமரிப்பு, தளவாடத் துறைகளில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தக் கற்றுக்கொள்வர். புதிய 2,000 தொழில்நுட்ப வாய்ப்புகள் குறித்த விவரங்களை அறிய விரும்புவோர் ஆணையத்தின் இணையத்தளத்தை நாடலாம்.
தேசிய அளவில் ஊழியர்கள் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் முயற்சியின் பகுதியாக, சட்ட ஆராய்ச்சி, வழக்குப் பகுப்பாய்வு போன்ற அன்றாடப் பணிகளுக்குச் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த சட்டத் தொழில்முறையாளர்கள் 11,000 பேர், இரண்டு புதிய ‘ஏஐ’ பயிற்சிகள் மூலம் அறிந்துகொள்வர் என்றும் தெரிவிக்கப்பட்டது.