📅 Tuesday, 13 October 2026 IST | புரட்டாசி 27, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil October 13, 2026 03:04 AM

சிங்கப்பூரில் நடுத்தர வயதுப் பெண்களிடம் அதிகரிக்கும் மனக்கவலை

சிங்கப்பூரில் நடுத்தர வயதுப் பெண்களிடம் அதிகரிக்கும் மனக்கவலை

சிங்கப்பூரில் நடுத்தர வயதுப் பெண்கள் மூவரில் ஒருவர்க்கு கவலைக்கான அறிகுறிகளும் ஐவரில் ஒருவருக்கு மனச்சோர்வுக்கான அறிகுறிகளும் இருப்பதாகப் புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

ஜேம்ஸ் குக் பல்கலைக்கழகமும் சிங்கப்பூர் மகளிர் அமைப்புகள் மன்றமும் இணைந்து நடத்திய ஆய்வின் முடிவுகள் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 6) வெளியிடப்பட்டன.

40 முதல் 59 வயதுக்குட்பட்ட சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள் 500 பேரிடம் 2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

ஆய்வில் பங்கேற்ற பெண்களில் பாதிப் பேர் தங்கள் வாழ்நாளில் ஏதேனும் ஒரு கட்டத்தில் மனநலப் பிரச்சினையை எதிர்கொண்டதாகக் குறிப்பிட்டனர்.

அவ்வாறு மனநலப் பிரச்சினையை எதிர்கொண்ட பெண்களில் 54.3 விழுக்காட்டினர் வேலையிட நெருக்கடியையும் 51.3 விழுக்காட்டினர் குடும்பப் பிரச்சினைகளையும் தங்களின் மன உளைச்சலுக்கான முக்கியக் காரணங்களாகச் சுட்டினர். அத்துடன், காதலில் நேர்ந்த சிக்கல்கள், தீர்க்கப்படாத அதிர்ச்சிகள், பராமரிப்புப் பொறுப்புகள் ஆகியவையும் மன உளைச்சலை ஏற்படுத்தும் பிற காரணங்களாகக் குறிப்பிடப்பட்டன.

அதிக மன உளைச்சலுக்கு ஆளான பெண்கள், மனநலச் சேவைகள் கட்டுப்படியாகாதவை என்றும் எளிதில் அணுக முடியாதவை என்றும் கருதுவதால் தொழில்முறை உதவி நாடத் தயங்குகின்றனர்.

மேலும், கிட்டத்தட்ட 75 விழுக்காட்டுப் பெண்கள் தங்களுக்கு மனநலக் கோளாறு ஏற்பட்டால் மற்றவர்களுக்குச் சுமையாகிவிடுவோம் என்று அஞ்சுவதாகத் தெரிவித்தனர். நடுத்தர வயதுப் பெண்கள் தங்களைவிட தங்களைச் சார்ந்திருக்கும் குடும்பத்தினர்க்கே அதிக முன்னுரிமை அளிப்பதை இது காட்டுகிறது.

ஏறக்குறைய 75.9 விழுக்காட்டினர் மனநல வல்லுநர்களிடம் உதவி பெற விரும்புவதாகக் கூறினாலும், 58.4 விழுக்காட்டினர் பெண்களுக்கான சிறப்பு மனநலச் சேவைகள் குறித்து அறிந்திருக்கவில்லை. அத்துடன், 53 விழுக்காட்டினர் மனநலச் சேவைகளின் கட்டணம் மிக அதிகமாக இருப்பதாகக் கருதுகின்றனர்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

தொலைபேசி உதவி எண்களைப் பயன்படுத்துவதைவிட நேரில் கிடைக்கும் உறவுசார் ஆதரவையே அவர்கள் அதிகம் விரும்புகின்றனர். வேலையிடங்களில் சக ஆண் ஊழியர்களின் ஆதரவு கிட்டியதாகக் கூறிய பெண்கள் அதிகம் மனநிறைவைப் பதிவுசெய்ததாக ஆய்வு சுட்டிக்காட்டியது.

எனவே, குடும்பங்கள், வேலையிடங்கள், சமூகங்களில் மனநல உதவி நாடுவதை இயல்புநிலையாக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் வலியுறுத்தினர்.

இந்த ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் மகளிர் நலத்திற்கான கொள்கைகளையும் விழிப்புணர்வு முயற்சிகளையும் மேம்படுத்தப்போவதாகச் சிங்கப்பூர் மகளிர் அமைப்புகள் மன்றம் தெரிவித்துள்ளது.