📅 Sunday, 16 August 2026 IST | ஆடி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News August 16, 2026 07:31 PM

சிங்கப்பூரில் திருமணங்கள் 6.2% சரிவு; மணமுறிவுகள் குறைவு

சிங்கப்பூரில் திருமணங்கள் 6.2% சரிவு; மணமுறிவுகள் குறைவு

சிங்கப்பூரில் கடந்த 2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025ல் திருமணங்களின் எண்ணிக்கை 6.2 விழுக்காடு குறைந்துள்ளது. அதேவேளையில், மணமான தம்பதியரிடையே பிணைப்பு அதிகரித்து திருமணங்களின் நிலைத்தன்மையும் உயர்ந்துள்ளது.

இங்கு கடந்த 2025ஆம் ஆண்டில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான தம்பதியரே திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். பெருந்தொற்று பாதிப்பு ஏற்பட்ட 2020ஆம் ஆண்டைத் தவிர்த்தால், கடந்த சில பத்தாண்டுகளில் பதிவான மிகக் குறைந்த திருமண எண்ணிக்கை இது என்பது கவனிக்கத்தக்கது.

சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு வெள்ளிக்கிழமை (ஜூலை 10) வெளியிட்ட குடும்பப் போக்குகள் குறித்த இந்த ஆண்டிற்கான அறிக்கையில் இத்தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

கடந்த 2025ஆம் ஆண்டில் மொத்தம் 24,688 திருமணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 2024ஆம் ஆண்டுடன் ஒப்புநோக்க இது 6.2 விழுக்காடு சரிவு என்பதும் அறிக்கை சுட்டிய புள்ளிவிவரங்கள்.

பெருந்தொற்றுக்குப் பிந்தைய காலப்பகுதியில், கடந்த 2022ஆம் ஆண்டில் 29,389 திருமணங்கள் என்ற எண்ணிக்கை அளவை தொட்ட பிறகு, தொடர்ந்து மூன்றாவது ஆண்டாகத் திருமணங்களின் எண்ணிக்கை சரிவைக் கண்டுள்ளது.

குறிப்பாக, முதல் முறையாகச் சிங்கப்பூர்த் தம்பதியரின் திருமண உறவின் தரம் குறித்தும் இந்த அறிக்கையில் ஆராயப்பட்டுள்ளது.

இதற்கிடையே மணவிலக்கு பெறும் தம்பதிகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. கடந்த 2025ஆம் ஆண்டில் மொத்தம் 7,242 திருமணங்கள் மணமுறிவு அல்லது ரத்து செய்தல் மூலம் முடிவுக்கு வந்துள்ளன.

2024ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 7,382 ஆக இருந்தது. அவ்வகையில் இந்த எண்ணிக்கைகளை ஒப்பிடும்போது மணவிலக்கு பெற்றோர் எண்ணிக்கை 1.9 விழுக்காடாகச் சரிந்துள்ளது.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

கடந்த 2025ஆம் ஆண்டில் பதிவான மணமுறிவுகளில், ஐந்து முதல் ஒன்பது ஆண்டுகள் வரை திருமண வாழ்க்கையில் இணைந்திருந்த தம்பதிகளே அதிகபட்சமாக 27.6 விழுக்காடு வரை இடம்வகித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அறிக்கை சுட்டிய மற்றுமொரு விஷயம், அண்மையத் திருமணங்களில் மண வாழ்க்கையின் மீள்திறன் நீண்டகால அடிப்படையில் மேம்பட்டுள்ளது என்பதாகும்.

தங்களது 10வது திருமண ஆண்டு நிறைவுக்கு முன்பாக மணமுறிவு செய்துகொண்ட தம்பதிகளின் விகிதம், 2005ஆம் ஆண்டு திருமணம் புரிந்தோருக்கிடையே 17.0 விழுக்காடாக இருந்த நிலையில், 2014ஆம் ஆண்டு அதே தரப்பினர் மத்தியில் அந்த எண்ணிக்கை 13.5 விழுக்காடாகக் குறைந்துள்ளது.

பொதுவாகத் திருமணமான 5 முதல் 10 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலமே மணம் புரிந்தோருக்குச் சவாலானது என்பதால், அந்த ஆரம்பக் கட்டத்தில் தம்பதிகளுக்கு உரிய ஆதரவை வழங்குவது அவசியம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

வலுவாக செழிப்புறும் திருமண உறவுகள்

இதற்கிடையே, திருமணங்களின் எண்ணிக்கை குறைந்தாலும், திருமணமான சிங்கப்பூரர்களில் பெரும்பாலானோர் தங்களது உறவு திருப்திகரமாக இருப்பதாகக் கூறியுள்ளனர்.

ஆய்வில் பங்கேற்றவர்களில் 94.9 விழுக்காட்டினர் தங்களது திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாய் இருப்பதாகத் தெரிவித்துள்ளதாக அறிக்கை கூறியது.

மேலும் 92.8 விழுக்காட்டினர் தங்களது உறவு சுமுகமாகச் செல்வதாகக் குறிப்பிட்டுள்ளனர். கிட்டத்தட்ட 78.3 விழுக்காட்டினர் தங்களது துணையிடம் அடிக்கடி மனம் விட்டுப் பேசுவதாகவும், 88.3 விழுக்காட்டினர் பிரிந்து செல்வது குறித்து எப்போதும் யோசித்ததே இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

திருமணங்கள் எவ்வாறு அமைகின்றன என்பதைப் பற்றிய புரிதலை ஆழப்படுத்தவும், திருமணம், குடும்பத் திட்டங்கள், கொள்கைகளை வகுப்பதற்கான ஆழமான புரிதலைப் பெறவும், 2025ஆம் ஆண்டு குடும்பங்கள் சார்ந்த ஆய்வில் முதன்முறையாக திருமணத் தரம் குறித்த அளவீடுகளைச் சேர்த்துள்ளதாக அமைச்சு சொன்னது.

மேலும் முஸ்லிம் திருமணங்களின் எண்ணிக்கையும் 2025ல் குறைந்துள்ளது. இது 2024ல் 5,184 ஆக இருந்து 2025ல் 5,006 ஆகக் குறைந்தது.

சிவில் மற்றும் முஸ்லிம் திருமணங்கள் இரண்டிலுமே, மற்ற வயதுப் பிரிவினருடன் ஒப்பிடுகையில் 25 முதல் 34 வயதுடைய மணமகன், மணமகள்களை உள்ளடக்கிய திருமணங்களில் பெரிய அளவில் சரிவு ஏற்பட்டுள்ளது.

முன்பு திருமணம் செய்துகொண்டவர்களுடன் ஒப்புநோக்க, அண்மைய ஆண்டுகளில் திருமணம் செய்துகொண்ட தம்பதியினர் தொடர்ந்து அதிக மீள்திறன், நிலைத்தன்மையைப் பேணி வருவதாகவும் அறிக்கை உறுதிப்படுத்தியது.