📅 Thursday, 03 September 2026 IST | ஆவணி 18, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 03, 2026 07:05 AM

சிங்கப்பூரின் நல்லிணக்கத்தை முனைப்புடன் புதுப்பிப்பது அவசியம்

சிங்கப்பூரின் நல்லிணக்கத்தை முனைப்புடன் புதுப்பிப்பது அவசியம்

சிங்கப்பூரில் நிலவும் நல்லிணக்கத்தை முனைப்புடன் புதுப்பிக்க வேண்டும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் அழைப்பு விடுத்திருக்கிறார்.

சிங்கப்பூரின் பல்வேறு கலாசாரங்கள், பாரம்பரியங்கள், நம்பிக்கைகள் ஆகியவற்றுக்கு இடையிலான நல்லிணக்கம் இயல்பாக ஏற்பட்டுவிடவில்லை என்பதை அவர் சுட்டினார். சீனப் புத்தாண்டுச் செய்தியில் பிரதமர் வோங் அவ்வாறு தெரிவித்தார். ஏற்கெனவே பதிவுசெய்யப்பட்ட அது, திங்கட்கிழமை (பிப்ரவரி 16) வெளியிடப்பட்டது. இம்முறை சீனப் புத்தாண்டு, மு‌‌ஸ்லிம்களின் புனித ரமலான் மாதத்தின் தொடக்கத்துடன் இணைந்து வருவதை அவர் குறிப்பிட்டார். சிங்கப்பூரின் பல்லினக் கலாசாரத்தை நினைவுபடுத்தும் வகையில் அது அமைந்திருப்பதாகத் திரு வோங் சொன்னார்.

“பரஸ்பர மரியாதை, நம்பிக்கை, புரிந்துணர்வு ஆகியவற்றின் மூலம் பல தலைமுறைகளாகப் பொறுமையுடன் அந்த நல்லிணக்கம் உருவாக்கப்பட்டுள்ளது”, என்றார் திரு வோங். அத்தகைய விழுமியங்களைக் கட்டிக்காத்துத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். சீனப் புத்தாண்டு, பொதுவாக 15 நாள் கொண்டாடப்படும். இவ்வாண்டு அது, செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 17) தொடங்குகிறது. ரமலான் மாதம், வரும் வியாழக்கிழமை (பிப்ரவரி 19) ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிங்கப்பூரில் நல்லிணக்கத்தை வலுப்படுத்த வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு தலைமுறைக்கும் இருப்பதாகப் பிரதமர் கூறினார். சிங்கப்பூரர்கள் மற்றவர்களுடன் எவ்வாறு வாழ்கின்றனர், எப்படித் தொடர்புகொள்கின்றனர், அடுத்தவரை எவ்வாறு நடத்துகின்றனர் என்பதைப் பொறுத்து அது அமையும் என்றார் அவர். “நமது நல்லிணக்கத்தை மெத்தனமாக எடுத்துக்கொள்ளக்கூடாது,” என்று திரு வோங் தெரிவித்தார்.

சிங்கப்பூரர்கள், பொதுவெளியை விரிவுபடுத்த வேண்டும்; பிணைப்புகளை ஆழப்படுத்த வேண்டும்; வேற்றுமையை வலிமையின் ஓர் ஆதாரமாகக் கொண்டாட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். சீனப் புத்தாண்டு என்பது குடும்பங்கள் ஒன்றுகூடுவதற்கும் உறவுகளைப் புதுப்பித்துக்கொள்வதற்குமான காலம் என்று பிரதமர் குறிப்பிட்டார். சிங்கப்பூர்ச் சமுதாயத்தின் அடித்தளம் குடும்பங்களே என்றார் அவர்.

அதனால்தான் குடும்பங்களுக்கு ஆதரவளிப்பதை அரசாங்கம் தொடர்ந்து முன்னுரிமையாகக் கொண்டுள்ளது என்று திரு வோங் சொன்னார். அதன் அடிப்படையிலேயே வரவுசெலவுத் திட்டம் 2026ல், சிடிசி பற்றுச்சீட்டுகள் உட்பட குடும்பத்தினருக்கு உதவும் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டதை அவர் சுட்டினார். இளையோர், பெற்றோர், மூத்தோர் எனச் சமூகத்தின் பல்வேறு தரப்பினருக்கும் கைகொடுக்கும் திட்டங்களில் அரசாங்கம் தொடர்ந்து கவனம் செலுத்துவதாகவும் பிரதமர் வோங் குறிப்பிட்டார். சீன நாள்காட்டியில் நெருப்புக் குதிரை, மாற்றத்தையும் இயக்கத்தையும் குறிக்கிறது என்றார் திரு வோங். உலகில் அரசியல் நிலவரம் மாறிவருகிறது என்பதையும் தொழில்நுட்பம் நமது வாழ்க்கையை மறுவடிவமைக்கிறது என்பதையும் நெருப்புக் குதிரை ஆண்டு நினைவூட்டுவதாக அவர் சொன்னார். அந்த மாற்றங்கள் நிச்சயமற்ற சூழலையும் பதற்றத்தையும் ஏற்படுத்தக்கூடும் என்பதைத் திரு வோங் ஒப்புக்கொண்டார். ஆனால் அதே நேரம், நெருப்புக் குதிரை என்பது மீள்திறனையும் உணர்வின் வலிமையையும் பிரதிபலிப்பதை அவர் சுட்டிக்காட்டினார். “புத்தாண்டை நம்பிக்கையோடு எதிர்கொண்டால் சவால்களை வாய்ப்புகளாக மாற்றி ஒரே மக்களாக நம்மால் தொடர்ந்து முன்னேற முடியும்,” என்றார் பிரதமர் வோங்.