📅 Sunday, 06 September 2026 IST | ஆவணி 21, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports September 06, 2026 07:04 PM

சிங்கப்பூரின் புதிய வாசிப்புத் திட்டம்: தினமும் 15 நிமிடங்கள்

சிங்கப்பூரின் புதிய வாசிப்புத் திட்டம்: தினமும் 15 நிமிடங்கள்

சிங்கப்பூரர்களைத் தினமும் 15 நிமிடங்களுக்கு நூல் வாசிக்க ஊக்குவிக்கும் தேசிய நூலக வாரியத்தின் ‘ரீட்எஸ்ஜி’ (ReadSG) இயக்கத்தை அதிபர் தர்மன் சண்முகரத்னம் தொடங்கி வைத்துள்ளார்.

தேசிய நூலக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 6) நடந்தேறிய தொடக்க விழாவில் அதிபருடன் அவரின் துணைவியார் ஜேன் இட்டோகி, தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ, தகவல், மின்னிலக்க மேம்பாட்டு; சுகாதார துணை அமைச்சர் ரஹாயு மஹ்ஸாம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஐந்தாண்டுகளுக்கு நீடிக்கவுள்ள இந்த இயக்கம், செப்டம்பர் 6ஆம் தேதியிலிருந்து டிசம்பர் 31ஆம் தேதி வரை சோதிக்கப்பட்டு, மக்களிடமிருந்து பெறப்படும் கருத்துகளைக் கொண்டு மெருகேற்றப்படும்.

“பழக்கங்கள் எப்போதும் மெதுவாகத்தான் ஏற்படும். ஆகையால், பலதரப்பட்ட சிங்கப்பூரர்களிடையே இப்பழக்கம் ஏற்பட காலம் எடுக்கலாம்.

“ஐந்தாண்டுகளில் நமது வாசிப்புப் பழக்கங்களில் முன்னேற்றங்கள் இருக்குமென நம்புகிறேன்,” என்று ‘ரீட்எஸ்ஜி’ இயக்கதின் புரவலரான திரு தர்மன் கூறினார்.

மக்களுக்கு எண்ணற்ற தகவல்கள் எளிதாகக் கிடைக்கும்போதிலும், வாசிப்பில் ஆழமான கவனம் செலுத்துவது குறைந்து வருவதாகக் குறிப்பிட்ட தேசிய நூலக வாரியத்தின் தலைமை நிர்வாகி மெலிசா தாம், இந்தச் சூழலில் இந்த இயக்கம் அறிமுகமாகியிருப்பதாகச் சுட்டினார்.

“இன்று நாம் நொடிப் பொழுதில் அனைத்தையும் கைப்பேசியில் பார்த்துவிடுகிறோம், படித்துவிடுகிறோம். எது குறித்து வேண்டுமானாலும் காணொளிகளைப் பார்த்தோ செய்தியின் சாராம்சத்தைப் பெற்றோ விஷயத்தைத் தெரிந்துகொள்ள முடிகிறது.

“ஆனால், விரிவாகவும் ஆழமாகவும் வாசிப்பது திறனாய்வுச் சிந்தனை, புத்தாக்கம், பரிவு, கவனம் போன்ற திறன்களை வளர்க்க உதவும்,” என்றார் அவர்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

சிறிய, தொடர்ச்சியான முயற்சிகள் வாயிலாகவே பழக்கங்கள் ஏற்படுவதால் ஒரு நாளைக்கு 15 நிமிடம் என்ற வாசிப்பு நேரம் தொடக்கமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் செயலாளர் பிரேமா மகாலிங்கம், இந்த இயக்கம் இளையர்களிடையே தமிழைக் கொண்டு சேர்க்க உதவுமென நம்புகிறார்.

“உடல்நலனுக்கு எப்படி உடற்பயிற்சியோ, மனநலனுக்கு நூல் வாசிப்பு அவசியம். இளையர்களுக்கு வாசிப்பை விளையாட்டு வடிவில் அறிமுகப்படுத்துவது அவர்களுக்குச் சுவாரசியமாக அமையும்.

“அத்தகைய அம்சங்களை இந்த இயக்கம் கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது. தமிழ் நூல் வாசிப்பை இளையர்களிடையே அதிகரிக்கவும் இது உதவும்,” என்றார் அவர்.

இந்த இயக்கத்திகீழ், தங்கள் தினசரி வாசிப்பு நேரத்தை ‘கருத்துச் சேகரிப்பு’ (CrowdTaskSG) தளத்தில் பதிவிடுவோருக்கு மின்னிலக்கப் பரிசுகள் பெறும் வாய்ப்புண்டு.

2027 செப்டம்பருக்குள் இந்த இயக்கம் 150,000 பேரை ஈர்க்கும் இலக்கை தேசிய நூலக வாரியம் கொண்டுள்ளது.