📅 Monday, 17 August 2026 IST | ஆவணி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil July 17, 2026 02:30 PM

சிங்கப்பூர்த் தமிழ் நாடகக் குழுக்கள் ஒன்றிணைந்து படைக்கும் நாடகவிழா

சிங்கப்பூர்த் தமிழ் நாடகக் குழுக்கள் ஒன்றிணைந்து படைக்கும் நாடகவிழா

நாடகக் கலைமீதான ஆர்வத்தை விதைக்கும் நோக்கில், சிங்கப்பூர்த் தமிழ் நாடகக் குழுக்கள், அனைத்துலகத் தமிழ் நாடகக் குழுக்களுடன் ஒன்றிணைந்து செயல்பட இருக்கின்றன.

அக்கனவை நோக்கிய முதற்படியே இவ்வாண்டு சிங்கப்பூரில் நடக்கவிருக்கும் ‘நாடகமிக்’ அனைத்துலகத் தமிழ் நாடகத் திருவிழா.

‘அகம்’, ‘பிளாக்ஸ்பைஸ்’, ‘திங்க் டிரையாங்கிள்’, ‘ஏகேடி’, ‘அதிபதி’ ஆகிய ஐந்து உள்ளூர்த் தமிழ் நாடகக் குழுக்கள் முதன்முறையாக இவ்விழாவிற்காகக் கைகோத்துள்ளன.

அவர்களுடன் நியூசிலாந்தின் ‘இந்தியன் இன்க்ஸ்’, இங்கிலாந்தின் ‘ரசா’, சென்னையின் ‘டம்மீஸ் டிராமா’, ‘லிட்டில் தியேட்டர்’, ‘திரீ என்டர்டெய்ன்ஸ்’ ஆகிய குழுக்களும் விழாவில் இணைகின்றன.

இவ்விழாவை ‘அகம்’ நாடகக்குழு ஒருங்கிணைத்து வழிநடத்துகிறது. வரும் ஆகஸ்ட் 20லிருந்து 30 வரை நடைபெறவிருக்கும் விழாவில் மொத்தம் எட்டு மேடை நாடகங்கள், ஆறு பயிலரங்குகள், ஒரு கருத்தரங்கு ஆகியவை இடம்பெற்றுள்ளன.

உலகத் தரத்தில் உள்ளூர்ப் படைப்புகள்

“இதுவரை நாங்கள் ஆராய்ந்ததில், தமிழ் நாடகங்களுக்கு வட்டார அளவிலான விழாக்கள் மட்டுமே இருப்பதாகத் தெரியவந்தது. உலகளாவிய தமிழ் நாடக விழாவிற்குச் சிங்கப்பூர் ஏதுவான, சிறப்பான தளமாக இருக்குமென எங்கள் குழு நம்பியது,” என்று ‘அகம்’ நாடகக் குழுவின் தலைவர் கணேஷ் சுப்ரமணியம் கூறினார்.

“சிங்கப்பூர்த் தமிழ் படைப்புகளும் உலகத்தரம் வாய்ந்தவை என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம். ஆகையால், பல அனைத்துலக விருதுகளை வென்ற ‘இந்தியன் இன்க்ஸ்’ குழுவின் ‘குரு ஆஃப் சாய்’, ‘ரசா’ குழுவின் ‘ஹூஸ் சாரி நவ்?’ போன்ற படைப்புகளுடன் நமது உள்ளூர் நாடகங்களையும் விழாவில் மேடையேற்றவுள்ளோம்,” என்று அவர் சொன்னார்.

ஒப்பீட்டுத் தளமாக இல்லாமல், சிங்கப்பூர்த் திறனாளர்களின் திறமையை வெளிக்கொணரும் உன்னதத் தளமாக இவ்விழா விளங்குமென அவர் குறிப்பிட்டார்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

பலதரப்பட்ட பார்வையாளர்களை ஈர்க்கும் வண்ணம் விழா அமைய வேண்டுமென்பதால் விழாவின் படைப்புகளும் மாறுபட்டவையாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

‘திரீ என்டர்டெய்ன்ஸ்’ குழுவின் எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களின் வாழ்க்கை வரலாறு நாடகமான ‘காற்றினிலே ஒரு கீதம்’ முதல் ‘அகம்’ குழுவின் பறைச்சாத்திர உளவியல் நாடகமான ‘கைவரிசை’ வரை அனைவருக்கும் பிடித்தமான படைப்புகள் ரசிகர்களுக்குக் காத்திருப்பதாக திரு கணேஷ் உறுதியளித்தார்.

எதிர்காலத்திற்கான விதை

அடுத்த தலைமுறையினரிடம் நாடகங்கள்மீது ஆர்வத்தைப் பிறக்கச்செய்வதும் விழாவின் முக்கிய நோக்கமெனத் திரு கணேஷ் குறிப்பிட்டார்.

“இக்கால இளையர்களுக்கு ஊக்கமும் முனைப்பும் கடந்தகாலச் சாதனைகள்வழி வருவதில்லை. எதிர்கால முன்னேற்றங்களின் சாத்தியங்களே அவர்களுக்கு உற்சாகம் அளிக்கின்றன.

“அதனாலேயே, ‘சாத்தியங்கள்’ என்ற கருப்பொருளுடன் விழா வடிவமைக்கப்பட்டுள்ளது. இளையர்களுக்கு உற்சாகமும் வியப்பும் அளிக்கும் வகையில் இவ்விழா நிச்சயம் அமையும்,” என்றார் அவர்.

சவால்களைக் கடந்த பயணம்

சாத்தியங்களை மையமாகக் கொண்ட இவ்விழா இதற்கு முன்பு பலமுறை, பல்வேறு முயற்சிகளுக்குப் பின்பு சாத்தியப்படாமல் போனதென்று வருந்தினார் திரு கணேஷ்.

இத்தகைய விழாவை ஏற்பாடு செய்வதில் அரங்குகளுக்கான வாடகைக் கட்டணம் அதிக பொருட்செலவை ஏற்படுத்துவதாகக் குறிப்பிட்ட அவர், தற்போது ‘அகம்’ குழுவிற்கான சொந்த அரங்கு இருப்பது செயல்முறைகளை எளிதாக்கியுள்ளதாகக் கூறினார்.

“எங்களுக்கான அரங்கு ஒன்று இருப்பதால், பிற குழுக்களின்மீது நிதிச் சுமையைச் சுமத்தாமல், அவர்களைப் படைப்புகளின்மீது மட்டும் கவனம் செலுத்த ஊக்குவிக்க முடிகிறது.

“பொருட்செலவிற்கான பொறுப்புகளை நாங்கள் ஏற்றுக்கொண்டு குழுக்கள் தரமான படைப்புகளை வழங்க நல்லதொரு சூழலை அமைத்துத் தர முடிவதில் மகிழ்ச்சி,” என்று அவர் சொன்னார்.

நாடகக் குழுக்களின் நம்பிக்கை

‘நாடகமிக்’ விழாவின்வழி சிங்கப்பூரிலும் திறமையான நடிகர்கள் உள்ளனர் என்பதை உலகிற்கு உணர்த்த முடியுமென ‘அதிபதி’ நாடகக்குழு நம்புகிறது.

இவ்விழா நிறைய பார்வையாளர்களை ஈர்த்தால், உள்ளூர் நாடகக் குழுக்கள் தங்களது படைப்புகளின் எண்ணிக்கையை உயர்த்தும் வாய்ப்பும் அதிகரிக்கும் என்று அக்குழு தெரிவித்தது.

இந்த விழா சிறந்ததொரு வாய்ப்பை வழங்கும் வேளையில் நல்லதொரு சவாலையும் வழங்குவதாக ‘திங்க் டிரையாங்கிள்’ நாடகக்குழு சொன்னது.

“விழாவில் எங்கள் நாடகத்தைப் பெரியதொரு மேடையில் படைக்கும் சிறந்த வாய்ப்பு கிடைக்கும் அதே சமயத்தில் விழாவின் மற்ற படைப்புகளிலிருந்து மாறுபட்ட நாடகத்தைப் படைக்கும் சவாலும் உள்ளது. ஆனால், அச்சவால் நாடகத்தின் தரத்தை உயர்த்த ஊக்குவிப்பாக அமைகிறது,” என்று அக்குழு பகிர்ந்துகொண்டது.

கலையின் வளர்ச்சிக்காகவும் மொழியின் உயர்வுக்காகவும் சிங்கப்பூர் தமிழ் நாடகக் குழுக்கள் ஒன்றிணையும் சங்கமமாக இவ்விழாவைக் கருதுகிறது ‘பிளாக்ஸ்பைஸ்’ குழு.

இனிவரும் ஆண்டுகளிலும் இந்த விழாவிற்கான ஆதரவு அரசாங்க, சமூக அமைப்புகளிடமிருந்து தொடர வேண்டுமென அக்குழு கோருகிறது.

விழாவின்வழி இளையர்களிடையே தமிழ்ப் பண்பாட்டை வேரூன்றச் செய்ய முடியுமென ‘ஏகேடி’ நாடகக்குழு கூறியது.

தெருக்கூத்து போன்றவற்றைப் பழங்காலக் கலைகளாகக் கருதாமல் தொடர்ந்து அவற்றைக் கற்பதன் முக்கியத்துவத்தை இளையர்களுக்கு அக்குழு கடத்த முயல்கிறது.

கலைஞர்களின் பெருங்கனவு

விழாவின் படைப்புகளைக் கண்டுகளிக்கும் பார்வையாளர்கள், ‘தமிழ் நாடகங்கள் இந்த அளவிற்குச் சிறப்பாக இருக்குமென நாங்கள் எதிர்பார்க்கவில்லை’ என்ற உணர்வுடன் திரும்பினால் அதுவே விழாவின் மாபெரும் வெற்றியெனத் திரு கணேஷ் கருதுகிறார்.

‘நாடகமிக்’ விழா எதிர்காலத்தில் எடின்பர்க் நகரில் நடைபெறும் புகழ்பெற்ற நாடக விழாவின் அளவிற்குப் கருதப்பட வேண்டும் என்பதே அவரின் அவா.

“எவ்வாறு சுற்றுப்பயணிகள் லண்டனுக்குச் செல்லும்போது தவறாமல் ஒரு நாடகத்தையாவது பார்த்து விடுகிறார்களோ, அதேபோல ஒரு நாள், சிங்கப்பூருக்கு வருவோரும் இங்கு குறைந்தது ஒரு நாடகத்தையாவது பார்த்துவிட வேண்டும் என்று எண்ணும் அளவிற்கு நம் மேடை நாடகத்துறை உயர வேண்டுமென விரும்புகிறேன்,” என்று அவர் சொன்னார்.