📅 Friday, 02 October 2026 IST | புரட்டாசி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema May 27, 2026 07:31 PM

சினிமா துறை மீது கோபம், ஜென்டில்மேன் படத்தை மறுத்த அர்ஜூன்; ஷங்கரின் முயற்சியால் வந்த சூப்பர் ஹிட்

சினிமா துறை மீது கோபம், ஜென்டில்மேன் படத்தை மறுத்த அர்ஜூன்; ஷங்கரின் முயற்சியால் வந்த சூப்பர் ஹிட்

தற்போதைய தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் வரிசையில் முன்னணியில் இருக்கும் ஷங்கர் இயக்கிய முதல் படமான ஜென்டில்மேன் திரைப்படத்தில் நடிக்க நடிகர் அர்ஜூன் மறுத்துள்ளார். இதற்கு சினிமாதுறை மீது உள்ள கோபம் தான் காரணம் என்று அவரே கூறியுள்ளார்.

80 காலகட்டத்தில் சினிமாவில் அறிமுகமாகி ரசிகைகளின் காதல் மன்னனாக திகழ்ந்த நடிகர் அர்ஜுன், கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மற்றும் இந்தி ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் அதிகமான சண்டைக் காட்சித் திரைப்படங்களில் நடித்ததால், இவருக்கு 'ஆக்ஷ்ன் கிங்' எனும் பட்டம் ரசிகர்களால் வழங்கப்பட்டது.

அதுமட்டுமின்றி இவர் கராத்தே சண்டைக் கலையில் பிளாக் பெல்ட் பெற்றுள்ளார். கன்னட சினிமா உலகில் அறிமுகமான அர்ஜுன் தமிழில் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர் என்று பன்முக திறமையாளராக கலக்கிக் கொண்டிருக்கிறார். அர்ஜுன் நடிப்பில் வெளியான 'ஜென்டில்மேன்’, ’ஜெய்ஹிந்த்’, ’கர்ணா’, ’முதல்வன்’, ’ரிதம்' போன்ற படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக அமைந்தன.

ஒரு கட்டத்தில் சினிமாவில் இவருக்கான வாயப்பு குறைய தொடங்கியபோது தன்னை வைத்து படம் எடுக்க யாரும் முன்வராததால் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராக மாறிய அர்ஜூன், 1992-ம் ஆண்டு வெளியான சேவகன் படத்தின் மூலம் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக மாறி ஹீரோவாகவும் நடித்திருந்தார். இந்த படம் பெரிய வெற்றியை பெற்றிருந்தாலும், படம் தயாரிப்பு, ரிலீஸ், விநியோகம் செய்ய அர்ஜூன் கடுமையாக சிரமத்தை சந்தித்துள்ளார். அப்போது அவருக்கு சினிமா துறையில் இருந்து எந்த உதவியும் வரவில்லை.

தொடர்ந்து 1993-ம் ஆண்டு பிரதாப் என்ற படத்தை இயக்கி தயாரித்து ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படமும் பெரிய வெற்றிப்படமாக அமைந்ததை தொடர்ந்து அவருக்கு கதை சொல்ல, பல இயக்குனர்கள் படை எடுத்தனர். ஆனாலும், தான் சிரமத்தில் இருக்கும்போது யாரும் உதவிக்கு வரவில்லை, இப்போது நான் ஹிட் கொடுத்துவிட்டேன். இனிமேல் எனக்கு நீங்கள் தேவையில்லை என்று யோசித்த அர்ஜூன், அனைத்து படங்களையும் மறுத்துள்ளார். அப்போது தான் இயக்குனர் ஷங்கர் இவரை பார்த்து கதை சொல்ல வந்துள்ளார்.

Gentleman படம் பண்ணமாட்டேன்னு சொன்னேன் முதல்ல - The SS Podcast Ft. Actor Arjun Sarja pic.twitter.com/0tOX1eAklH

ஷங்கர் அடிக்கடி வருவதை பார்த்த அர்ஜூன், கதையை கேட்டுவிட்டு வேண்டாம் என்று சொல்லிவிடலாம் என யோசித்து அர்ஜூன் கதையை கேட்டுள்ளார். ஷங்கர் கதை சொல்ல சொல்ல, அதில் மூழ்கிப்போன அர்ஜூன் இறுதியில் மறுப்பு சொல்ல முடியாமல், அந்த படத்தை ஒப்புக்கொண்டுள்ளார். அந்த படம் தான் ஷங்கர் இயக்கத்தில் வெளியான முதல் திரைப்படம் ஜென்டில்மேன். இந்த தகவலை அர்ஜூனே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.