📅 Sunday, 18 October 2026 IST | ஐப்பசி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News October 18, 2026 08:01 AM

சிறார் இலக்கியம்: இடைவெளிகளே நம் வாய்ப்புகள்!

சிறார் இலக்கியம்: இடைவெளிகளே நம் வாய்ப்புகள்!

தமிழ்​நாடு பள்​ளிக் கல்​வித் துறை​யின் ‘வாசிப்பு இயக்​கம்’ 2023இல் 53 சிறு நூல்​களோடு தொடங்​கி, 2024இல் மேலும் 71 நூல்​களை அரசுப் பள்​ளி​களுக்கு அனுப்​பியது. 2021இல் உரு​வான தமிழ்​நாடு சிறார் எழுத்​தாளர்​கள் கலைஞர்​கள் சங்​கம் இன்று 39 கிளை​களோடு இயங்​கு​கிறது. பாரதி புத்​த​கால​யத்​தின் ‘புக்ஸ் ஃபார் சில்ட்​ரன்’, ஹெர் ஸ்டோரிஸின் ‘விங்​ஸ்’, சென்​னை​யின் ‘துலி​கா’ போன்ற பதிப்​பகங்​கள் சிறார் இலக்கியத்துக்கான புதிய படைப்​பாளி​களை உருவாக்கு​கின்​றன. 1972இல் சிவ​காசி​யில் தொடங்​கிய முத்து காமிக்​ஸ், இன்​றும் லயன் முத்​து​வாக வாசகர்​களை ஈர்க்​கிறது. ‘குழந்​தைக் கவிஞர்’ அழ. வள்​ளியப்பா ஊன்​றிய விதை இன்று பெரு​மர​மாக வளர்ந்து நிற்​கிறது. இனி கேள்வி ஒன்​று​தான்​... இந்த அடித்​தளத்​தின் மேல் எதைக் கட்டலாம்?

தின​மும் பத்து நிமிடம்

வாசிப்பு இயக்க நூல்​கள் ‘நுழை, நட, ஓடு, பற’ என நான்கு நிலைகளாக அமைந்​திருக்​கின்​றன. எல்​லாச் சிறார் நூல்​களின் அட்​டை​யிலும் இந்த நிலைகளைக் குறித்தால், பெற்​றோருக்​குத் தேர்வு எளி​தாகும்.

ஜப்​பானின் ஆயிரக்​கணக்​கான பள்​ளி​களில் வகுப்பு தொடங்​கும் முன் ‘அசா தொகு’ எனும் காலை வாசிப்பு நடக்​கிறது. நான்கே விதி​கள்: எல்​லாரும் வாசிக்க வேண்​டும், தின​மும் வாசிக்க வேண்​டும், பிடித்​ததை வாசிக்​கலாம், வாசித்​தால் மட்​டும் போதும். செலவே இல்​லாத இந்த யோசனையை நாமும் நாளையே தொடங்​கலாம்.

படப் புத்தக வயதைத் தாண்​டியதும் பல குழந்​தைகள் தமிழ் வாசிப்​பையே விட்​டு​விடு​கிறார்​கள். நட்​பு, தேர்​வுப் பதற்​றம், உடல் மாற்​றம், சமூக ஊடகம் எனப்பதின்​வய​தினரின் உண்​மை​யான உலகைப் பேசும், அறி​வுரை சொல்​லாததமிழ் நாவல்​கள் மிகக் குறைவு. விளிம்புநிலை, பழங்​குடி​யினக் குழந்​தைகளும், பெண் குழந்​தைகளும், சிறு​பான்​மைச்சமூகக் குழந்​தைகளும், ஒற்​றைப் பெற்​றோரின் குழந்தைகளும், மாற்​றுத்​திறன் கொண்ட குழந்​தைகளும் கதைகளின் நடு​வில் நாயகர்களாக நிற்க வேண்​டும். தன்​னைப் போன்ற ஒரு​வரைப் புத்​தகத்​தில் காணும் குழந்​தை​தான் வாழ்​நாள் வாசக​ராகிறார்.