📅 Sunday, 18 October 2026 IST | ஐப்பசி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News October 18, 2026 09:01 AM

கோலிவுட்டில் அசத்தக் காத்திருக்கும் ‘ராப் பொறியாளர்’ தமிழ் ஆதவன்

கோலிவுட்டில் அசத்தக் காத்திருக்கும் ‘ராப் பொறியாளர்’ தமிழ் ஆதவன்

இன்றைய தமிழ்த் திரையுலகம் இளம் திறமையாளர்களின் புதுமையான யோசனைகளாலும் துள்ளலான படைப்புகளாலும் புதிய பரிமாணத்தை வெளிப்படுத்தி வருகிறது.

அந்த வரிசையில், வேதியியல் பொறியியல் பட்டப்படிப்பை முடித்துவிட்டு, தன் வரிகளாலும் குரலாலும் திரையிசை ரசிகர்களைச் சுண்டியிழுத்து வருகிறார் 21 வயதே நிரம்பிய ‘ராப் பொறியாளர்’ தமிழ் ஆதவன்.

கடலூரில் தொடங்கி அண்ணா நகர் பூங்காவின் தெருவோர ராப் தளங்கள் வழியாக விரிவடைந்த இந்த இளையரின் இசைப்பயணம், இன்று கோலிவுட்டின் உச்ச நட்சத்திரங்களின் படங்களைச் சென்றடைந்துள்ளது.

பொதுவாக ராப் பாடல்கள் என்றாலே ஆங்கில வார்த்தைகளின் ஆதிக்கம் அதிகமிருக்கும் என்ற பிம்பத்தை உடைத்தெறிவதே தமிழ் ஆதவனின் தனித்துவமான அடையாளம்.

“ராப் இசையில் எனக்குத் தமிழ் மொழி மீதான காதலை வெளிப்படுத்துவதே விருப்பம்,” என்று கூறும் இவர், தான் படித்த பொறியியல் பாடங்களில் வரும் அறிவியல், கணிதச் சொற்களைப் பாடல்களில் சுவாரசியமாகப் புகுத்துகிறார்.

‘மீசைய முறுக்கு-2’ படத்தில் இவர் எழுதிய, ‘அந்த கோஹினூரு வைரத்த உஷார் பண்ண யூஸ் பண்ணுவேன் பிதாகரஸ் தியரத்த’ என்ற பாடல் வரிகள் பட்டிதொட்டியெங்கும் பரவி, இசையமைப்பாளர் ‘தேனிசைத் தென்றல்’ தேவாவின் பாராட்டையும் பெற்றுத்தந்துள்ளது.

இளம் சுயாதீனக் கலைஞராகத் தன் தாத்தாவின் நினைவாக உருவாக்கிய தனிப் பாடலே இவரை அடையாளம் காட்டியது.

தொடர்ந்து, இசையமைப்பாளர் சாய் அபயங்கரின் இசையில் ‘பத்தா’ திரைப்படத்திற்காக ‘சீன் டபக் டம் டம்’, ‘ஊரோட ஒத்த டான்’ உட்பட நான்கு பாடல்களை உருவாக்கி கவனத்தை ஈர்த்தார்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

அதன் உச்சகட்டமாக, அனிருத்தின் இசையில் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் ‘வேற மாறி’, ‘புட்டப்பு கேங்’ ஆகிய இரு பாடல்களைப் பாடியதுடன், இப்படத்தின் நேரலை இசை நிகழ்ச்சியிலும் பங்கேற்றுப் பாடினார்.

மேடையில் அனிருத் இவரை அணைத்து, ‘தமிழ் ப்ரோ, நீங்க ஒரு மேதாவி, இன்னும் பத்து ஆண்டுகளில் வேறு ஓர் உயரத்தில் இருப்பீங்க’ எனக் கூறிய தருணத்தை தன் வாழ்நாளின் மிகப்பெரிய அங்கீகாரமாகக் கருதுகிறார் தமிழ் ஆதவன்.

அசல் கோலார், பால் டப்பா போன்ற இளம் கலைஞர்களின் வரிசையில், தமிழ் ராப் உலகிற்குப் புதிய பரிமாணத்தைக் கொண்டுவந்துள்ள தமிழ் ஆதவன், அடுத்து முழுநேரத் திரைப்பட இசையமைப்பாளராக உருவெடுக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார்.