சிறைச்சுவரைத் தாண்டிய அன்பு
சிங்கப்பூர்ப் போதைப்பொருள் தடுப்புச் சங்கத்தின் இந்து சமய வழிகாட்டுதல் திட்டத்தில் தனது தொண்டூழியத்தைத் தொடங்கியபோது, உடனிருந்த கைதி ஒருவர் ஒத்துழைக்காத சம்பவத்தைத் திரு துஷ்யந்த், 44, நினைவுகூர்ந்தார்.
பக்தி சாதனா எனும் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக சக கைதிகளுக்கு வணக்கம் செலுத்துமாறு கேட்டபோது, அவர் தன் சொந்தத் தாய்க்கே வணக்கம் செலுத்துவதில்லை என்று கூறி மறுத்ததாக அவர் தெரிவித்தார்.
“அவரது முடிவை நான் மதித்தேன். அதேவேளையில், மற்றவர்கள் தொடர்ந்து அவரைப் பார்த்து வணங்கத் தொடங்கியதில் அவர் மிகவும் நெகிழ்ந்துபோனார்,” என்றார் திரு துஷ்யந்த்.
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அந்தக் கைதி இப்போது இந்தப் பக்தி சாதனா நடவடிக்கையை வழிநடத்துகிறார்.
“நான் எடுத்த முயற்சிகள் பலனளிப்பதைப் பார்ப்பது எனக்கு ஒரு சாதனை உணர்வைத் தருகிறது,” என்று அவர் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
ஒருவர் உடல்ரீதியாகச் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு மீண்டும் சமுதாயத்துக்குள் வரலாம். ஆனால், தான் வெளியே வந்துவிட்டோம் என்பதை அவர் மனத்தளவில் ஏற்றுக்கொள்வதற்கு நேரம் எடுக்கும்.
எனவே, மீண்டும் சமூகத்தில் இணைவது சவாலாக இருக்கலாம் என்று திரு துஷ்யந்த் சுட்டிக்காட்டினார்.
“இந்தக் கைதிகளின் கைகளைப் பிடித்து அவர்கள் எதிர்கொள்ளும் சவாலிலிருந்து அவர்களை மீட்டு வந்தால்தான் ஒரு சமூகம் முன்னேற முடியும் என்று நினைக்கிறேன்,” என்றார் அவர்.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
திரு துஷ்யந்தைப் போலவே, ரோமன் கத்தோலிக்கச் சிறைச்சாலைத் தொண்டூழியத்தின் வழி கைதிகளுக்குச் சேவை செய்வதில் 28 ஆண்டுகளை அர்ப்பணித்துள்ளார் திரு ஜான் ஜோசப் ஃபெனலோன், 71.
சமயரீதியான ஆலோசனையின் மூலம் கைதிகள் தங்கள் வாழ்க்கையை எப்படி மாற்றிக்கொள்ளலாம் என்பதை உணர்ந்துகொள்கிறார்கள் என்று திரு ஜான் கூறினார்.
“மாற்றத்திற்கான சக்தியை இறைவன் அளிப்பார் என்று அவர்களுக்கு என் ஆலோசனைகள் வழி தெரியப்படுத்துகிறேன்,” என்றார் அவர்.
உடல்நலத்தில் சவால்கள் நேரிட்டபோதிலும் அவர் கைதிகளுக்குத் தொடர்ந்து உறுதுணையாக இருந்து வருகிறார்.
திரு ஜான் அளித்த ஆலோசனையால் முன்னாள் கைதிகள் இன்றும் அவருக்கு நன்றி தெரிவிக்க தேவாலயத்துக்கு வருவதுண்டு.
“அது என் கடமை என்று நான் வழக்கமாக அவர்களிடம் சொல்வேன்,” என்றார் அவர்.
திரு துஷ்யந்த், திரு ஜான் உட்பட சிங்கப்பூர்ச் சிறைச்சாலைத் தொண்டூழியர்கள் 420 பேர் தங்கள் நீண்டகாலச் சேவைக்காக வெள்ளிக்கிழமை (ஜூலை 24) கௌரவிக்கப்பட்டனர்.
20வது ஆண்டாக நடைபெற்ற சிங்கப்பூர்ச் சிறைச்சாலைத் தொண்டூழியர் விருது நிகழ்ச்சியில் உள்துறை, சமுதாய, குடும்ப மேம்பாட்டுத் துணையமைச்சர் கோ பெய் மிங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.
2023ஆம் ஆண்டில் விடுதலையானவர்களைப் பொறுத்தவரை, இரண்டு ஆண்டுகளில் மீண்டும் குற்றத்தில் ஈடுபட்ட விகிதம் 21.9 விழுக்காடாக உள்ளது.
இது உலகிலேயே மிகக் குறைவானதாகும் என்று சுட்டிக்காட்டினார் திரு கோ.
அத்துடன், கடந்த மாத நிலவரப்படி, சிறைச்சாலையின் பல்வேறு திட்டங்களில் ஏறத்தாழ 4,600 தொண்டூழியர்கள் பதிவு செய்துள்ளனர் என்று அவர் பாராட்டினார்.
“மறுவாழ்வு என்பது அனைவரையும் சார்ந்த ஒரு கூட்டு முயற்சி. சமூகத்தில் மீண்டும் இணைவதற்கான கைதிகளின் பயணம் சிறையில் இருக்கும்போதே தொடங்குகிறது,” என்று திரு கோ வலியுறுத்தினார்.