📅 Friday, 11 September 2026 IST | ஆவணி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil September 11, 2026 05:41 PM

சிறையும் சீர்திருத்தப் பயிற்சியும் கட்டாயத் தண்டனை அல்ல: உயர் நீதிமன்றம்

சிறையும் சீர்திருத்தப் பயிற்சியும் கட்டாயத் தண்டனை அல்ல: உயர் நீதிமன்றம்

மோசடி தொடர்பான குற்றங்களில் தண்டிக்கப்படும் இளையர்களுக்கு, சிறை அல்லது சீர்திருத்தப் பயிற்சி போன்ற தண்டனைகள் விதிக்கப்படுவதை வழக்கமாக்கிக்கொள்ளக்கூடாது என்று சிங்கப்பூர் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அந்தத் தண்டனைகளைப் பரிந்துரைப்பது, இளம் குற்றவாளிகளுக்குத் தண்டனை விதிப்பதில் மறுவாழ்வுக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என 2024ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நடைமுறைகளுக்கு முரணானது என்றும் அது குறிப்பிட்டுள்ளது.

இளங்குற்றவாளிகளின் முதிர்ச்சியின்மை, அவர்களின் எதிர்கால நல்வாழ்வுக்கான சாத்தியக்கூறுகள் மற்றும் இயன்றவரை அவர்களைச் சீர்திருத்துவதில் காட்டப்படும் முக்கியத்துவம் ஆகியவற்றை நீதிமன்றங்கள் நீண்டகாலமாக அங்கீகரித்து வருகின்றன.

எனவே, இத்தகைய தண்டனை முறை மிகவும் பொருத்தமற்றது என்று உயர் நீதிமன்றம் குறிப்பிட்டது.

தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன், நீதிபதி ஆங் செங் ஹாக், நீதிபதி ஹூ ஷியாவ் பெங் ஆகிய மூவர் அடங்கிய நீதிபதிகள் அமர்வு வியாழக்கிழமை (செப்டம்பர் 10) இந்தத் தீர்ப்பை வழங்கியது.

மோசடிகளில் சம்பந்தப்பட்ட ஏழு இளையர்கள் செய்திருந்த மேல்முறையீடுகளை விசாரித்த பின்னர் நீதிபதிகள் இந்தத் தீர்ப்பை வெளியிட்டனர்.

அவர்களில் அறுவர், குற்றம் செய்தபோது 21 வயதுக்கும் குறைந்தவர்கள். வங்கிக் கணக்குகளைத் தொடங்குவது, தங்கள் மின்னணு வங்கித் தரவுகளை மோசடிக்காரர்களிடம் ஒப்படைப்பது போன்ற மோசடி தொடர்பான பல்வேறு குற்றங்களில் அவர்கள் தண்டிக்கப்பட்டனர்.

ஒரு வழக்கில், மோசடிக்காரர்களிடம் இரண்டு வங்கிக் கணக்குகளை ஒப்படைத்தபோது 16 வயதாக இருந்த பெண் குற்றவாளிக்கு 7 நாள்கள் குறுகிய காலத் தடுப்புக்காவல் உத்தரவு, 60 மணி நேரச் சமூக சேவை, மூன்று மாதங்கள் நாள்தோறும் அறிக்கை சமர்ப்பிக்கும் உத்தரவு ஆகியவை விதிக்கப்பட்டன.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

அந்தத் தண்டனைகள் போதுமானதாக இல்லை என்று கூறி, அரசுத்தரப்பு சீர்திருத்தப் பயிற்சி கோரி மேல்முறையீடு செய்தது. அந்த மேல்முறையீட்டை வியாழக்கிழமை நீதிமன்றம் ரத்து செய்தது.

அதேவேளை, சீர்திருத்தப் பயிற்சி விதிக்கப்பட்டிருந்த நான்கு குற்றவாளிகளின் மேல்முறையீட்டை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அந்தத் தண்டனைக்குப் பதிலாக ஓராண்டு முதல் 18 மாதங்கள் வரையிலான நன்னடத்தைக் கண்காணிப்புத் தண்டனையை விதித்து உத்தரவிட்டனர்.

குற்றங்களில் ஈடுபட்டபோது அந்த நால்வரும் 16 முதல் 19 வயதுக்கு உட்பட்டவர்களாக இருந்தனர்.