📅 Wednesday, 29 July 2026 IST | ஆடி 13, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News July 26, 2026 05:33 PM

சிவகாசி பட்டாசு வெடிவிபத்தில் இருவர் உயிரிழப்பு

சிவகாசி பட்டாசு வெடிவிபத்தில் இருவர் உயிரிழப்பு

சிவகாசி: பட்டாசு வெடி விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் சிவகாசியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அங்குள்ள செங்கமலப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 26) நிகழ்ந்த இந்த விபத்தில் படுகாயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

செங்கமலப்பட்டியைச் சேர்ந்த ராம்பிரசாத் (35 வயது), ராமச்சந்திரன் ((37 வயது) இருவரும் தங்களது விவசாய நிலத்தில் அனுமதியின்றிச் சட்டவிரோதமாகப் பட்டாசு உற்பத்தி செய்து வந்துள்ளனர். இதற்காக தகரத்தால் ஆன கூடம் ஒன்றை அமைத்துள்ளனர்.

இந்நிலையில், அந்தத் தகரக்கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை நான்கு பேர் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டிருந்ததாகத் தெரிகிறது.

ஏறக்குறைய காலை 8.15 மணி அளவில் வெடிவிபத்து ஏற்பட்டதையடுத்துக் காவல்துறையினரும் தீயணைப்புத் துறையினரும் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

வெடிவிபத்தால் ஏற்பட்ட அதிர்வை 10 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு உணர முடிந்ததாகப் பொதுமக்கள் தெரிவித்தனர்.

தகரக்கூடத்துக்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் உள்ளிட்ட வாகனங்கள் சேதமடைந்தன. மேலும், அருகேயுள்ள மூன்று வீடுகளின் சன்னல் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்ததாகவும் இறந்தவர்களின் உடல் பாகங்கள் ஐம்பது மீட்டர் தொலைவு வரை சிதறிக்கிடந்ததால் இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.