📅 Tuesday, 28 July 2026 IST | ஆடி 12, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News July 27, 2026 09:33 AM

சிவகாசி பட்டாசு விபத்து: உயிரிழப்பு 5 ஆக உயர்வு

சிவகாசி பட்டாசு விபத்து: உயிரிழப்பு 5 ஆக உயர்வு

சிவகாசி பட்டாசு விபத்து: உயிரிழப்பு 5 ஆக உயர்வு

விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராமச்சந்திரன் என்பவர் இன்று அதிகாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Published : July 27, 2026 at 9:21 AM IST

விருதுநகர்: சிவகாசி அருகே சட்டவிரோத பட்டாசு குடோன் விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பகுதியில் ராம் பிரகாஷ் என்பவர் தகர செட் அமைத்து சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று (ஜூலை 26) காலையில் அந்த பட்டாசு குடோனில் 5 தொழிலாளர்கள் வழக்கம்போல் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்துள்ளனர்.

அப்போது, எதிர்பாராத விதமாக அந்த குடோனில் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறத் தொடங்கியது. அதில், பட்டாசு தயாரிக்க அமைக்கப்பட்டிருந்த தகர செட்டுகள் முழுவதும் வெடித்து தரைமட்டமானது.

தகவல் அறிந்த சிவகாசி தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆனால், இந்த விபத்தில் உரிமையாளர் ராம் பிரகாஷ்(32) இன்னாசி முத்து(44) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.

நீண்ட நேரம் போராடி தீயை அணைத்த தீயணைப்புத் துறையினர், பணிபுரிந்த மூன்று தொழிலாளர்களை தேடு பணியில் ஈடுபட்டனர். அப்போது, ராமச்சந்திரன் என்பவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தொடர்ந்து, ஐயப்பராஜா(37) பாண்டித்துரை(35) ஆகிய இருவரையும் தேடும் பணி நடைபெற்றது.

சிலமணி நேரங்களுக்குப் பிறகு, அவர்களது உடல் பாகங்களும் சிதறிய நிலையில் மீட்கப்பட்டது. அதனால், நேற்று மொத்தம் 4 தொழிலாளர்கள் உயிரிழந்தது உறுதிசெய்யப்பட்டது.

உயிரிழந்த நபர்களின் விவரம்

இதுபோன்ற சூழலில், படுகாயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராமச்சந்திரன்(39) என்பவர் இன்று (ஜூலை 27) அதிகாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையின் முடிவில்தான் விபத்திற்கான முழு காரணம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரித்தது எப்படி? இதுகுறித்து காவல்துறையினர் ஆய்வு செய்யவில்லையா என்றும் அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதுபோன்ற சட்டவிரோத பட்டாசு தயாரிப்புகளால் அப்பாவி தொழிலாளர்கள் உயிரிழக்கும் நிலை தொடர்ந்து வருகிறது. எனவே, கிராம நிர்வாக அலுவலர் மற்றும் காவல் துறையினருக்கு இதுபோன்ற சட்டவிரோத பட்டாசுகள் தயாரிப்பது எப்படி தெரியாமல் போனது? என்று பட்டாசு தொழிற்சங்கத்தினரும் கேள்வியெழுப்பியுள்ளனர்.

மேலும், இதுகுறித்து உயரதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி, இனிவரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.