📅 Friday, 11 September 2026 IST | ஆவணி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News September 11, 2026 02:31 PM

கவிதை: எட்டயபுரத்தின் எரிமலை!

கவிதை: எட்டயபுரத்தின் எரிமலை!

எட்டயபுரத்து மண்ணில்

எழுந்த ஒரு சூரியன் நீ!

இருளின் நெஞ்சைத் துளைத்தெறிந்த

இனிய தமிழின் பேரொளி நீ!

காலத்தின் காற்றில்

கலைந்துபோகாத கவிதை நீ;

கட்டுண்ட மனங்களில்

கனவுகளை விதைத்தவன் நீ!

“அச்சமில்லை” என்ற

அமுத மொழியைத் தந்தாய்;

அடிமை விலங்குகளை

அறுத்தெறியச் சொன்னாய்!

மண்ணின் மடியில் பிறந்தாலும்

மனிதம் முழுவதும் உன் தேசம்;

தமிழ் உன் மூச்சாகி,

சுதந்திரம் உன் வேதமாகியது!

சாதியின் சுவர்களை

சாய்த்திட வேண்டும் என்றாய்;

மனிதன் மனிதனாக

மதிக்கப்பட வேண்டும் என்றாய்!

பெண்ணின் கண்களில்

புதுமை விடிய வேண்டும் என்றாய்;

அவள் கல்வி கற்க வேண்டும்,

அவள் சுதந்திரமாக நடக்க வேண்டும் என்றாய்!

கண்ணம்மாவின் காதலிலும்

குயிலின் குரலிலும்

கண்ணீரின் ஈரத்திலும்

கனவின் சிறகுகளிலும்

உன் கவிதை இன்றும் வாழ்கிறது!

நீ சென்ற பாதையில்

நெருப்புப் பூக்கள் பூத்தன;

நீ பாடிய பாடல்கள்

புதிய தலைமுறையின் நரம்புகளில்

இன்றும் துடிக்கின்றன!

காலம் உன் உடலை

மண்ணோடு சேர்த்துவிட்டாலும்,

உன் வார்த்தைகளை

மரணம் வெல்ல முடியவில்லை!

ஒவ்வொரு செப்டம்பர் பதினொன்றும்

உன் நினைவு மட்டும் அல்ல;

உன் கனவுகளை நனவாக்க

நமக்கு அளிக்கப்பட்ட

ஒரு புதிய உறுதிமொழி!

தமிழன்னையின் மடியில்

தவழ்ந்திடும் ஒவ்வொரு சொல்லிலும்

உன் பாதச்சுவடு தெரிகிறது.

தென்றலாய் வரும் தமிழிலும்

தீயாய் எழும் சிந்தனையிலும்

உன் உயிர்த் துடிப்பு உரசுகிறது

பள்ளிக் குழந்தையின் கையில்

புத்தகம் மலரும் போதும்

பெண்ணின் பாதங்கள்

புதிய பாதையில்

நடக்கும் போதும்

சாதி மத வேறுபாடின்றி

கரங்கள் ஒன்றுசேரும் போதும்

உன் கனவின் விதைகள்

முளைத்துக் கொண்டிருக்கின்றன..

வறுமையின் இருளிலும்

வாழ்வின் நம்பிக்கையைப் பாடியவன் நீ!!

துன்பத்தின் நடுவிலும்

துணிவைத் தேடியவன் நீ!

குயிலின் இனிய குரலில்

இயற்கையின் அழகை கண்டாய்

கடலின் பேரலையில்

சுதந்திரத்தின்

வேகத்தைக் கண்டாய்!

குழந்தையின் சிரிப்பில்

எதிர்கால உலகைக் கண்டாய்!!

வெறும் எழுத்துக்களின்

அணிவகுப்பு அல்ல

விழித்தெழச் சொல்லும்

விடியலின் முரசு!!

உன் வார்த்தைகள்

காகிதத்தில் உறங்கவில்லை..

காலத்தின் நரம்புகளில்

கனலாய் ஓடுகின்றன..

உன்னை நினைவுகூர்வது

ஒரு நாளின் கடமையல்ல!!!

உன் மீசையின் முறுக்கில்

மானத்தின் நெருப்பு இருந்தது

உன் விழியின் ஒளியில்

விடுதலையின் விடியல் இருந்தது!!!

தமிழ் இருக்கும் வரை

உன் குரல் இருக்கும்

சுதந்திரம் இருக்கும் வரை

உன் கனவு இருக்கும்

மனிதம் இருக்கும் வரை

நீ என்றும் வாழ்வாய்!!

- பிருந்தா நடராஜன்

முக்காலமும் உணர்ந்த

முண்டாசுக் கவி

பாரதியாரின்

பிறந்தநாள் இன்று!

பெண்ணியம், சுதந்திரம்,

நாட்டுப்பற்று, கல்வி, சமத்துவம்

போன்றவை பற்றி

நாட்டு மக்கள் அனைவரும்

அறிந்து கொள்ள வேண்டிய கருத்துக்களை

தனது கவிதைகள் மூலம் வலியுறுத்திய

வரலாற்றுக் கவிஞன் அவன்

அடுப்பூதும் பெண்களுக்கு

கல்வி எதற்கு என்றிருந்த காலத்தில்,

வீட்டிற்குள் மட்டுமே இருக்க வேண்டியவர்கள்

அல்ல பெண்கள்.

கல்வி கற்று சமூகத்தில் முக்கிய பொறுப்புகளை

ஏற்கவும் நிர்வாகத்தில் பங்கேற்கவும் தகுதியானவர்கள்

பெண்கள் என்றார் பாரதியார்.

இக் கருத்தை வலியுறுத்த,

"பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும்

பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்" என்ற

கவிதையை பாட்டாகப் பாடினார்.

அக் கவிஞனின் கனவு

பிற்காலத்தில் நனவானது உண்மை.

புதுமைப் பெண் என்றால் அது

"நிமிர்ந்த நன்னடை

நேர் கொண்ட பார்வை...."

"அச்சமில்லை அச்சமில்லை

அச்சமென்பது இல்லையே"

என்ற கவிதைகள் மூலம் பாடிக் காட்டினார்.

அக் கவிதைகள், பெண்கள் பயமற்ற வகையில், தன்னம்பிக்கை கொண்டு வாழ வேண்டும் என்று வலியுறுத்தின. சுதந்திரம் மற்றும் சமத்துவ உணர்வோடு, தரமான கல்வி பெற்ற பெண்களை

"பெண்கள் வாழ்கென்று கூத்திடுவோமடா!" என்ற பாடல் மூலம் பாராட்டவும் செய்த பண்புற்ற கவிஞர் நம் பாரதியார்.

அனைவருக்கும் பொதுவானது

அறிவு மற்றும் கல்வி...

ஆண் பெண் பேதமின்றி

அனைவரும் பெற்றிட வேண்டும் அதை!

"அறிவை வளர்த்திட வேண்டும் -

மக்கள் அத்தனை பேரும் ஒன்றாக" என

முழங்கிடச் செய்தது இவ்வெண்ணம்.

திகழ்ந்ததும் இதுவே.

சுதந்திர இந்தியாவைக் கனவில் கண்டு

மகிழ்ச்சி பொங்க

"ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே" என

கூத்தாடிய கவிஞன் அவன்

"வந்தே மாதரம் என்போம் - எங்கள்

மாநிலத் தாயை வணங்குதும் என்போம்"

"எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி

இருந்ததும் இந்நாடே"

"செந்தமிழ் நாடெனும் போதினிலே"

"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல்

இனிதாவது எங்கும் காணோம்"

"பாரத தேசமென்று பெயர் சொல்லுவார்"

"பாரத சமுதாயம் வாழ்கவே"

இக் கவிதை வரிகள் கூறுகின்றனவே அவரின்

நாட்டுப் பற்று, மொழிப் பற்று, தாய் நாட்டின் பெருமை,

ஒருமைப்பாடு என அனைத்து சிறப்பம்சங்களையும்!

சமத்துவம், சகோதரத்துவம், சமூக நீதி ஆகியவற்றின்

அடிப்படையில் அமைந்த இந்திய சமூகம்,

நீண்ட நெடுங்காலம் வாழ வேண்டும்

என்கிற தன் ஆவலை வெளிப்படுத்த

பாடல் மூலம் பறை சாற்றுகிறார் பாரதியார்!

மனிதரில் சாதி உயர்வு தாழ்வு

பார்ப்பது தவறு என்றெண்ணிய பாரதியார்

அக் கருத்தை சிறு வயதிலிருந்தே

குழந்தைகள் மனதில் பதிவு செய்ய எண்ணினார்.

அதன் விளைவாய் உதித்ததிந்த

பாப்பா பாட்டு.

"சாதிகள் இல்லையடி பாப்பா; குலத்

தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்."

"காக்கை குருவி எங்கள் சாதி;

நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்"

மனிதர்களிடம் மட்டுமின்றி

இயற்கை மற்றும் பிற உயிர்களிடமும்

அவர் கொண்ட காதலை வெளிப் படுத்துகிறது!

ஒரு மனிதர் மற்றொருவரின்

உரிமையையும் உணவையும் பறிக்கும்

அநீதி கண்டு வெகுண்டெழுந்த பாரதியார்

"மனிதர் உணவை மனிதர் பறிக்கும்

வழக்கம் இனியுண்டோ?"

"தனியொருவனுக்கு உணவில்லையெனில்

ஜெகத்தினை அழித்திடுவோம்"

என்ற பாடல் வரிகளைப் பாடி மனித நேயத்தை நிலை நிறுத்தியுள்ளார்.

தேசப் பற்று, பெண்கள் விடுதலை, தன்னம்பிக்கை, கல்வி, சமத்துவம் போன்ற பல நற் குணங்களை தன்னகத்தே கொண்டது மட்டுமின்றி அவற்றை பிறருக்கும் போதிக்கும் வகையில் பல கவிதைகளை படைத்து எதிர் கால சந்ததியினருக்காக விட்டுச் சென்ற அற்புத கவிஞரை அவரின் பிறந்த நாளில் நினைவு கூர்ந்து போற்றுவது நம் அனைவரின் கடமை.

- ஜெயகாந்தி மகாதேவன்