📅 Saturday, 01 August 2026 IST | ஆடி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News August 01, 2026 09:32 PM

சியூட்டா புலம்பெயர்தல் நெருக்கடி: உதவிக்கரம் நீட்டிய காடிஸ்

சியூட்டா புலம்பெயர்தல் நெருக்கடி: உதவிக்கரம் நீட்டிய காடிஸ்

சியூட்டா புலம்பெயர்தல் நெருக்கடி: உதவிக்கரம் நீட்டிய காடிஸ்-சியூட்டா மறைமாவட்டம்

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

ஸ்பெயினின் தன்னாட்சி நகரமான சியூட்டா ஒரு கடுமையான புலம்பெயர்தல் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், காடிஸ் மற்றும் சியூட்டா மறைமாவட்டம் அவ்வாறு புலம்பெயர்பவர்களுக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளது. 24 மணி நேரத்திற்குள் ஏறத்தாழ 60,000 புலம் பெயர்ந்தோர் மொராக்கோவிலிருந்து இந்த நகரத்திற்குள் நுழைந்துள்ளனர். இந்த எண்ணிக்கை சியூட்டாவின் மக்கள் தொகையில் ஏறத்தாழ 70 விழுக்காடு ஆகும். அதே வேளையில் இந்த ஆபத்தான கடற்பயணத்தின் போது குறைந்தது 34 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆப்பிரிக்காவின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ள சியூட்டா நகரம், நீண்டகாலமாக ஐரோப்பாவிற்குள் நுழைய முற்படும் புலம்பெயர்ந்தவர்களுக்கு ஒரு முக்கிய நுழைவாயிலாக இருந்து வருகிறது.

ஆயிரக்கணக்கானோர் எல்லை வேலிகளில் ஏறியோ அல்லது நீந்தியோ கரையை அடைந்துள்ளதால், இந்த திடீர் வருகை புலம்பெயர்ந்தோர் வரவேற்பு மையங்களை திணறடித்துள்ளது. அவ்வாறு வந்தவர்களில் பலர் துணையில்லாத சிறார்கள் என்பதால், மனிதாபிமான கவலைகள் மேலும் அதிகரித்துள்ளன.

இதற்குப் பதிலளிக்கும் வகையில், சியூட்டா அதிகாரிகள் உடனடியாக தேசிய அளவிலான ஆதரவைக் கோரியுள்ள வேளையில், பாதுகாப்பை பலப்படுத்தவும் ஊர்க்காவல்படையினருக்கு உதவவும் ஸ்பெயின் அரசு ஆயுதப் படைகளை நிலைநிறுத்தியுள்ளது.

இது குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்திய சியூட்டா மறைமாவட்டம், அவசர மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக, சியூட்டாவில் உள்ள அனைத்து பங்குகளின் வார இறுதிக் காணிக்கைகளும் புனித அந்தோனியார் புலம்பெயர்ந்தோர் உதவி மையம் மூலம் புலம்பெயர்ந்தோருக்கான மறைமாவட்ட அலுவலகத்திற்கு நன்கொடையாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

அரசு அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதாகவும், இந்த நெருக்கடி தீவிரமடையும் நிலையில் தங்களிடம் உள்ள அனைத்து வளங்களையும் வழங்க தயாராக இருப்பதாகவும் மறைமாவட்டம் தெரிவித்துள்ளது.

கிறிஸ்தவ நம்பிக்கையாளர்கள் மற்றும் நல்மனம் கொண்ட அனைவரின் தாராள ஆதரவுக்கு நன்றி தெரிவித்த மறைமாவட்டம், தற்போதைய மனிதாபிமான நெருக்கடியில் பாதிக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்தோர், மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள பொது அதிகாரிகள் மற்றும் அமைதி, நீதி, நம்பிக்கை ஆகியவற்றை நிலைநிறுத்த பாடுபடும் அனைவருக்காக சிறப்பாக இறைவேண்டல் செய்யுமாறு கிறிஸ்தவ சமூகங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.