சோபாவுக்காக விலை போனேனா? விசிக திருமாவளவன் ஆதங்கம்
வேலுார்: ''சோபாவிற்காக விலை போய்விட்டதாக என்னை அற்பத்தனமாக விமர்சிக்கிறார்கள்,'' என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வேதனை தெரிவித்துள்ளார்.
வேலுாரில் கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் அவர் பேசியதாவது: ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து துணை சபாநாயகர், எட்டு அமைச்சர் என வந்திருப்பது, தமிழக அரசியல் வரலாற்றில் இதுவே முதல்முறை.
கடந்த 2015ல் நாங்கள் விதைத்த 'கூட்டணி ஆட்சி' என்ற கருத்தில் உருவானது தான், மக்கள் நல கூட்டணி. 2016 தேர்தலில் தி.மு.க.,வால் ஆட்சியை கைப்பற்ற முடியாமல் போனது. அப்போது, 'மக்கள் நல கூட்டணியை உருவாக்கி தி.மு.க.,வை ஆட்சிக்கு வர விடாமல் திருமாவளவன் தடுத்துவிட்டார்' என, பழி சுமத்தினர்.
இப்போது, தி.மு.க., தலைவர் ஸ்டாலினின் இசைவு பெற்று தான் வெளியே வந்து, த.வெ.க., அரசை ஆதரித்துள்ளோம்.
தி.மு.க., தோல்விக்கு யார் யார் காரணம் என்பதை ஆராய்வதை விட, த.வெ.க., வெற்றிக்கு எது காரணம் என ஆராய வேண்டும். இந்த தேர்தலில், மதம், சாதி, கூட்டணி பலம் என எதையும் மக்கள் ஏற்கவில்லை.
இப்படி ஒரு மாற்றத்தை உருவாக்கிய மக்களின் உளவியலை பற்றி பேசாமல், 'திருமாவளவன் ஏன் திடீரென அங்கு போனார், சோபா ஏன் வந்தது, பதவிக்காக போய்விட்டார்' என அற்பத்தனமாக பேசி கொண்டிருக்கின்றனர்.
சொல்லப்போனால், த.வெ.க.,வும் நாங்களும் இன்னமும் கூட்டணி பேச்சு வார்த்தையை தொடங்கவில்லை.
2026 தேர்தலுக்கு பின், அ.தி.மு.க.,வின் நிலை கவலைக்குரியதாக மாறும் என, தேர்தலுக்கு முன்பே பல முறை சுட்டிக்காட்டினேன். நான் கூறியது இன்று நடந்துவிட்டது. இவ்வாறு திருமாவளவன் பேசினார்.