📅 Friday, 04 September 2026 IST | ஆவணி 19, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 04, 2026 02:03 PM

சொத்து தகராறு வழக்கு....ஆஜரானார் அமைச்சர் மரிய வில்சன்!

சொத்து தகராறு வழக்கு....ஆஜரானார் அமைச்சர் மரிய வில்சன்!

சொத்து தகராறு வழக்கு....ஆஜரானார் அமைச்சர் மரிய வில்சன்!

சொத்து தகராறில் சகோதரரைத் தாக்கிய வழக்கில், இன்று புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் அமைச்சர் மரிய வில்சன் நேரில் ஆஜரானார்.

கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி, புதுச்சேரி இளையநகர் பகுதியில் உள்ள மரிய வில்சனின் சகோதரர் மரிய குலோத்தின் வீட்டில் தாக்குதல் சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து, மரிய குலோத் மற்றும் அவரது மனைவி கெரோலின் கிளாட் ஆகியோரை தாக்கியதாக மரிய வில்சன் மீது புகார் அளிக்கப்பட்டது.

குடும்ப சொத்து தொடர்பான பிரச்சினையின் பின்னணியில் இந்த சம்பவம் நடைபெற்றதாக புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக லாஸ்பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த வழக்கு புதுச்சேரி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், மரிய வில்சன் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதனை எதிர்த்து அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இதற்கிடையே, இருதரப்பினருக்கும் இடையே சமரசம் ஏற்படுத்தும் முயற்சியாக வழக்கு சமரச தீர்வு மையத்திற்கு அனுப்பப்பட்டது. அங்கு நான்கு முறை பேச்சுவார்த்தை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இருதரப்பினருக்கும் இடையே உடன்பாடு ஏற்படவில்லை.

இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருவதால் அமைச்சர் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என அவரது தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார்.

மேலும், அமைச்சர் சார்பில் அவரது தந்தை நீதிமன்றத்தில் ஆஜராகத் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதி, அமைச்சர் என்பதால் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருக்க முடியாது எனக் குறிப்பிட்டார்.

“அமைச்சர் என்பதால் சட்டத்திற்கு மேலானவர் என்று அர்த்தம் கிடையாது” என நீதிபதி தெரிவித்ததுடன், புதுச்சேரிக்கு சென்று நீதிமன்றத்தில் ஆஜராவதில் என்ன சிரமம் என்றும் கேள்வி எழுப்பினார்.

உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையைத் தொடர்ந்து, அமைச்சர் மரிய வில்சன் தரப்பு தனது மனுவை வாபஸ் பெற்றது. மேலும், புதுச்சேரியில் நடைபெறும் வழக்கு விசாரணையின்போது அமைச்சர் நேரில் ஆஜராவதாக உறுதியளிக்கப்பட்டது.

இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்தது.

புதுச்சேரியில் நேரில் ஆஜர் ஆகாததற்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. மேலும் புதுச்சேரியில் நேரில் ஆஜாராகும் படி வலியுறுத்திய நிலையில் அமைச்சர் மரிய வில்சன் மனுவை வாபஸ் பெற்றார்.

தற்போது சகோதரரை தாக்கிய வழக்கில் புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்காக அமைச்சர் மரிய வில்சன் நேரில் ஆஜாராகியுள்ளார்.