📅 Friday, 25 September 2026 IST | புரட்டாசி 9, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports August 10, 2026 05:04 PM

சர்பராஸ் கான் 17 கிலோ உடல் எடையை குறைத்தது எப்படி? காஷ்மீரில் தீவிர பயிற்சி

சர்பராஸ் கான் 17 கிலோ உடல் எடையை குறைத்தது எப்படி? காஷ்மீரில் தீவிர பயிற்சி

சர்பராஸ் கான் 17 கிலோ உடல் எடையை குறைத்தது எப்படி? காஷ்மீரில் தீவிர பயிற்சி

மும்பை: சாய் சுதர்சன் காயம் காரணமாக விலகியதைத் தொடர்ந்து, இலங்கைத் தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியில் சர்பராஸ் கான் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். இதன் மூலம் சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இந்திய அணிக்குத் திரும்பியுள்ளார்.

அணிக்குத் தேர்வு செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு, சர்பராஸ் கான் தனது சமூக ஊடகப் பக்கத்தில், "நான் இதில் பொருந்தாமல் போகலாம், ஆனால் என்னிடம் உள்ள அனைத்தையும் வைத்து போராடுவேன்" என்று ஒரு சூசகமான பதிவைப் பகிர்ந்திருந்தார். இது அவரது அப்போதைய மனநிலையை உணர்த்துவதாக அமைந்தது. இது அவரது உறுதியை வெளிப்படுத்திய அதே வேளையில், அவருக்கு முன்னால் இருந்த சவால்களையும் ஒப்புக்கொள்வதாக இருந்தது.

சாய் சுதர்சனுக்கு ஏற்பட்ட காயம், கடந்த இரண்டு ஆண்டுகளாக சர்பராஸ் காத்திருந்த கதவைத் திறந்துவிட்டுள்ளது. ஆகஸ்ட் 15 அன்று தொடங்கவுள்ள இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் சர்பராஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த அழைப்பு அவருக்கு மிகச் சரியான நேரத்தில் வந்துள்ளது. அணியில் "பொருந்துவதற்காக" சர்பராஸ் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளார். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் அவர் சுமார் 17 கிலோ உடல் எடையைக் குறைத்துள்ளார். ரஞ்சி கோப்பையில் முச்சதம் அடித்திருந்தாலும், சர்வதேச கிரிக்கெட்டிற்கு அவர் அதிக எடையுடன் இருக்கிறார் என்ற விமர்சனம் நீண்ட காலமாக இருந்து வந்தது.

ஆனால் தற்போது உடல் எடையைக் குறைத்து உடற்தகுதியை மேம்படுத்தியுள்ள சர்பராஸ், தனது டி20 ஆட்டத்திலும் பெரும் முன்னேற்றத்தைக் காட்டியுள்ளார். உடல் பயிற்சி, ரன்னிங் மற்றும் உணவு கட்டுப்பாட்டு உடன் இதனை அவர் நிகழ்த்தி காட்டினார். மும்பையில் பெய்த பருவமழை காரணமாக வெளியில் பயிற்சி செய்ய முடியாத சூழல் ஏற்பட்டதால், சர்பராஸ் காஷ்மீரில் உள்ள ஷேர்-இ-காஷ்மீர் மைதானத்தில் மணிக்கணக்கில் தனது பேட்டிங் திறனை மேம்படுத்த உழைத்தார்.

இந்திய அணியில் அவரது முந்தைய அனுபவம் கடினமாக இருந்ததால், இந்த உழைப்பு அவருக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. 2024-ல் நியூசிலாந்திற்கு எதிரான தொடரில் நான்கு இன்னிங்ஸ்களில் சோபிக்கத் தவறியதால் அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார். அந்தத் தொடரில் ஒட்டுமொத்த அணியுமே தடுமாறிய நிலையில், 28 வயதான சர்பராஸ் மட்டும் நீக்கப்பட்டது கடினமான முடிவாக இருந்தது.

அதன் பின்னர் இங்கிலாந்து சென்ற அவர், இந்தியா ஏ அணிக்காக விளையாடி 92 ரன்கள் எடுத்தார். மேலும் உள்நாட்டுப் பயிற்சிப் போட்டி ஒன்றிலும் சதம் விளாசினார். இருப்பினும், சீனியர் அணியில் இடம் பெறுவது தள்ளியே போனது.சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவிடம் இந்திய அணி சந்தித்த தோல்வி, சர்பராஸ் கானை மீண்டும் தேர்வு செய்ய வேண்டிய தேவையை உருவாக்கியது.