சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின் களமிறங்கிய முதல் போட்டியிலே சதம்.. ஸ்டோக்ஸ் அபாரம்
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின் களமிறங்கிய முதல் போட்டியிலே சதம்.. ஸ்டோக்ஸ் அபாரம்
டர்ஹாம்: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற சில நாட்களிலேயே, பென் ஸ்டோக்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் தனது அபார திறமையை மீண்டும் நிரூபித்துள்ளார். ஓய்வு பெற்ற பிறகு, தனது முதல் போட்டியில் விளையாடிய ஸ்டோக்ஸ், ஆட்டமிழக்காமல் 108 ரன்கள் குவித்து, ஒருநாள் உள்ளூர் தொடரில் அசத்தினார். இதனால் டெர்பிஷைர் அணிக்கு எதிரான போட்டியில் டர்ஹாம் அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற ஸ்டோக்ஸ் முக்கிய காரணமாக இருந்தார்.
டர்ஹாம் அணிக்காக 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்டோக்ஸ் விளையாடிய முதல் 50 ஓவர் போட்டி இதுவாகும். இந்த இன்னிங்ஸுக்கு முன்னதாக, அவர் 9 ஓவர்கள் வீசி 38 ரன்கள் மட்டுமே வழங்கினார்.257 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய டர்ஹாம் அணி, 98 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அப்போது களமிறங்கிய ஸ்டோக்ஸ், 123 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 108 ரன்கள் குவித்து அணியை மீட்டெடுத்தார். இதன் மூலம் டர்ஹாம் அணி 49.1 ஓவர்களில் 257/5 ரன்கள் எடுத்து, 5 பந்துகள் மீதமிருந்த நிலையில் வெற்றியைப் பதிவு செய்தது.போட்டியின் பெரும்பகுதியில் தசைப்பிடிப்பு வலியால் அவதிப்பட்ட போதிலும், ஸ்டோக்ஸ் இறுதிவரை களத்தில் நின்று தனது சதத்தை பூர்த்தி செய்து டர்ஹாம் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
அவருக்கு ஆதரவாக வில் ரோட்ஸ் 45 ரன்களும், காலின் அக்கர்மேன் 28 ரன்களும் எடுக்க, கேசி ஆல்டிரிட்ஜ் 23 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.முன்னதாக, முதலில் பேட்டிங் செய்த டெர்பிஷைர் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மார்ட்டின் ஆண்டர்சன் 112 ரன்களும், புரூக் கெஸ்ட் 48 ரன்களும் எடுத்தனர். டர்ஹாம் அணியின் பந்துவீச்சில் லூக் ராபின்சன் 44 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
பென் ஸ்டோக்ஸ் சர்வதேச கிரிக்கெட்டில் 122 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 44 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு, 7,000-க்கும் அதிகமான ரன்களையும் 200-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். மேலும், அவர் இங்கிலாந்து அணிக்காக 114 ஒருநாள் போட்டிகளிலும், 43 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.