சத்துணவு திட்டத்தில் புதிய உணவுகள்: முதல்வர் விஜய் அறிவுரை
சென்னை: பள்ளி மாணவர்களுக்கான சத்துணவு திட்டத்தில், உணவு தரத்தை மேம்படுத்த, முதல்வர் விஜய் அறிவுறுத்தி உள்ளார்.
சத்துணவு திட்டத்தின் கீழ், அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு, வெஜிடபிள் பிரியாணி, சாம்பார் சாதம், கருப்பு கொண்டை கடலை குழம்பு, தக்காளி சாதம், புளி சாதம், எலுமிச்சை சாதம், கருவேப்பிலை சாதம், கீரை சாதம் வழங்கப்படுகின்றன. இந்த திட்டத்தின் வழியே, 40.81 லட்சம் மாணவ, மாணவியர் பயனடைந்து வருகின்றனர்.
மேலும், காலை உணவு திட்டத்தின் கீழ், உப்புமா, கிச்சடி, பொங்கல் ஆகியவை, தொடக்க பள்ளி மாணவ, மாணவியருக்கு வழங்கப்படுகின்றன. இந்த திட்டம், வரும் செப்டம்பர் முதல் எட்டாம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில், முதல்வர் விஜய் தலைமையில், பள்ளிக் கல்வித் துறை செயல்பாடுகள் குறித்த, ஆய்வு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில், பள்ளி மாணவ, மாணவியருக்கான சத்துணவு திட்டத்தை மேம்படுத்த வேண்டும் என, அதிகாரிகளுக்கு, முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
சத்துணவு திட்டத்தில், மாணவ, மாணவியருக்கு தரமான உணவுகள் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், வீட்டு உணவு போல் தரம் இருக்க வேண்டும் என்றும், அவர் அறிவுறுத்தி உள்ளார்.
இதற்காக, உணவு பட்டியலில் மாற்றம் செய்யவும், அவர் அறிவுறுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி, புதிய உணவு பட்டியல் தயாரிப்பு குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். விரைவில், முதல்வர் இதற்கான அறிவிப்பை வெளியிடுவார் என்று, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சி.இ.ஓ., தான் பொறுப்பு கடந்த மாதம், 19ம் தேதி, துாத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் பேரூராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படவில்லை. அதற்குப் பதிலாக பிஸ்கட் வழங்கப்பட்டது. இது சர்ச்சையான நிலையில், உண்மை கண்டறிந்து, அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, பள்ளிக் கல்வி துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார். இந்நிலையில், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, தொடக்கக் கல்வி இயக்குநர் நரேஷ் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: முதல்வரின் காலை உணவு திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கு போதுமான அளவில், தினசரி தரமான உணவு வழங்கப்படுகிறதா, மாணவர்கள் உணவை முறையாக உண்கின்றனரா என்பதை தொடர்ந்து, தலைமை ஆசிரியர்கள் கவனிக்கும்படி அறிவுறுத்த வேண்டும். இனி, விளாத்திகுளத்தில் நடந்ததுபோல் சம்பவம் நடக்காமல், முதன்மை கல்வி அதிகாரிகள் பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.