சட்டம் - ஒழுங்கு பிரச்சனை குறித்து முதல்வர் நாளை உரிய விளக்கம் அளிப்பார்
சட்டம் - ஒழுங்கு பிரச்சனை குறித்து முதல்வர் நாளை உரிய விளக்கம் அளிப்பார் - அமைச்சர் செங்கோட்டையன்
கடந்த திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை என்னவெல்லாம் நடைபெற்றது என்பதையும் புள்ளி விவரங்களோடு பேசி உள்ளோம் என்று அவர் கூறியுள்ளார்.
Published : June 22, 2026 at 9:25 PM IST
சென்னை: சட்டம் - ஒழுங்கு பிரச்சனை தொடர்பாக முதலமைச்சர் விஜய் நாளை உரிய விளக்கம் அளிப்பார் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய்-யின் பிறந்த நாளையொட்டி எழும்பூர் தாய், சேய் நல மருத்துவமனையில் இன்று (ஜூன் 22) பிறந்த 19 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஸ்ரீநாத், ராஜ்மோகன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.
இதையடுத்து அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "திமுக-வினரைப் போல ஒரு வார்த்தை சொன்னவுடன் எழுந்து காரசாரமாக விவாதிப்பவர்கள் நாங்கள் அல்ல. சட்டசபையில் எல்லாரும் பேசி முடித்ததற்கு பிறகு தான் நாங்கள் பதில் சொல்கிறோம். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கேள்வி கேட்கட்டும், அதன் பின்னர் உரிய விளக்கத்துடன் நீங்கள் பதில் கூறுங்கள் என்று அனைத்து அமைச்சர்களிடம் முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார். இதன்படியே நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.
சட்ட ஒழுங்கு பிரச்சனையை சரி செய்து கொண்டு தான் இருக்கிறோம். அதற்கான புள்ளி விவரங்கள் சட்டமன்றத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் என்னவெல்லாம் நடைபெற்றன என்பதையும் புள்ளி விவரங்களோடு பேசி உள்ளோம். மேலும், இந்த பிரச்சனை தொடர்பாக நாளை முதலமைச்சர் விஜய் உரிய விளக்கம் அளிப்பார்" என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "அம்மோனியா வாயு கசிவின் காரணமாக உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. நிவாரணத் தொகை உயர்த்தி தருவது தொடர்பாக முதலமைச்சர் விஜய் முடிவெடுப்பார்.
வடமாநில தொழிலாளர்கள் என்பதால் மெத்தனப்போக்கு கையாளப்படுவதாகக் கூறப்படுவது தவறு. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள்" என தெரிவித்தார்.
இறுதியாக அவரிடம் அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவாரா? என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு, "பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்" என அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்தார்.
முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் தொடர்ந்து அமைதியாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்து வரும் சூழலில், அவர் நாளை பதிலளிப்பார் அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.