சட்டமன்றம் முதல் பல்கலைக்கழகம் வரை தொடர்ந்து சர்ச்சையாகும் தமிழ்த்தாய் வாழ்த்து
சட்டமன்றம் முதல் பல்கலைக்கழகம் வரை தொடர்ந்து சர்ச்சையாகும் தமிழ்த்தாய் வாழ்த்து - வேதனையில் தமிழ் உலகம்
மாநில அரசின் கீழ் செயல்படும் பல்கலைக்கழக விழாவிலேயே தமிழ்த்தாய் வாழ்த்து கடைசியாக பாடப்பட்டது தமிழ் ஆர்வலர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
Published : July 28, 2026 at 7:02 PM IST
-BY இரா. மணிகண்டன்
திருநெல்வேலி: தமிழக சட்டமன்ற நிகழ்வுகள் தொடங்கி இன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா வரை, தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்ந்து சர்ச்சைக்குள்ளாவது குறித்து தமிழ் ஆர்வலர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
நெல்லை அபிஷேகப்பட்டியில் உள்ள புகழ்பெற்ற கல்வி நிறுவனம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகத்தின் 33வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் மொத்தம் 871 பேருக்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நேரடியாக பட்டம் வழங்கினார்.
முன்னதாக, விழாவின் தொடக்கத்தில் ஏற்கனவே பல்கலைக்கழகம் அறிவித்தபடி, 'வந்தே மாதரம்' பாடல் முதலில் பாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தேசிய கீதமும், கடைசியில் தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டது. இதுதான், தற்போது தமிழகம் முழுவதும் பேசுபொருளாகியுள்ளது.
குறிப்பாக, தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இயற்றிய மனோன்மணியம் சுந்தரனார் பிள்ளையின் பெயரை கொண்ட பல்கலைக்கழகத்திலேயே, தமிழ்த்தாய் வாழ்த்து இறுதியாக பாடப்பட்டது தமிழ் ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், அமைப்புகளும் பல்கலைக்கழகத்திற்கு கண்டனங்களை தெரிவித்திருந்தன. தமிழ்மொழி மற்றும் நாட்டின் பெருமையை கூறும் பாடல் என்பதால், அரசு விழாக்களின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது மரபு. இந்த நடைமுறையை 1970 மார்ச் 11ஆம் தேதியன்று அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி அமலுக்கு கொண்டு வந்தார். இந்தப் பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்த தமிழக அரசு, இதற்கான அரசாணையையும் வெளியிட்டது.
அப்போது முதல் பொது நிகழ்ச்சிகளிலும், அரசு விழாக்களிலும் துவக்கத்தில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்படும். நிகழ்ச்சியின் முடிவில், தேசிய கீதம் பாடப்படும். இதுதான் மரபாக இருந்து வருகிறது.
இந்த சூழலில்தான், கடந்த திமுக ஆட்சியில் 2024-ம் ஆண்டு பட்ஜெட் தாக்கலின் போது சட்டப்பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் ஒலிபரப்பானது. உடனே அன்றைய ஆளுநர் ஆர்.என். ரவி, தேசிய கீதமும் பாட வேண்டும் என வலியுறுத்தினார். ஆனால் அதை ஏற்க மறுத்த சபாநாயகர் அப்பாவு, வழக்கம் போல் தேசிய கீதம் கடைசியில் தான் பாடப்படும் என கூறினார்.
இதனைக் கண்டித்து ஆளுநர் தனது உரையை வாசிக்காமல் பாதியிலேயே கிளம்பிச் சென்றார். அப்போது இந்த சம்பவம் பெரும் சர்ச்சையாக பார்க்கப்பட்டது.
இந்நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழக தலைவர் ஜோசப் விஜய் முதலமைச்சராக பொறுபேற்ற விழாவில், 'வந்தே மாதரம்' முதலிலும், தேசிய கீதம் இரண்டாவதும், தமிழ்த்தாய் வாழ்த்து கடைசியாகவும் பாடப்பட்டது.
இது பெரும் சர்ச்சையான நிலையில், மத்திய அரசு சார்ந்த நிகழ்ச்சிகளில் 'வந்தே மாதரம்' தான் முதலில் பாடப்பட வேண்டும் என உத்தரவு போடப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டது. அதே சமயம், மாநில அரசு சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் இந்த நடைமுறையை பின்பற்ற வேண்டிய தேவை இல்லை எனவும் கூறப்பட்டது.
ஆனால், இன்று மாநில அரசின் கீழ் செயல்படும் பல்கலைக்கழக விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து கடைசியாக பாடப்பட்டது தமிழ் ஆர்வலர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பாளையங்கோட்டையை சேர்ந்த எழுத்தாளரும், ஓய்வுபெற்ற தமிழ் ஆசிரியருமான கவிஞர் செல்வமணி ஈடிவி பாரத்திடம் கூறுகையில், "இதுபோன்ற விஷயங்களை தவிர்ப்பதற்காகவே கடந்த திமுக ஆட்சியில் பல்கலைக்கழக வேந்தராக முதலமைச்சர் இருக்க வேண்டும் என முயற்சி எடுக்கப்பட்டது. முதல்வர் வேந்தராக இருந்தால்தான், தமிழ்நாடு சார்ந்த விஷயங்களுக்கு அழுத்தம் திருத்தமாக முடிவு எடுக்க முடியும்.
இப்போது, பல்கலைக்கழகங்களுக்கு ஆளுநர் வேந்தராக இருப்பதால் துணைவேந்தர்களும் அவருக்கு ஆதரவாகவே இருப்பார்கள். பல்கலைக்கழகங்கள் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் இருந்தால் தான், இதுபோன்ற பண்பாட்டு சிதைவுகள் நடைபெறாமால் தடுக்க முடியும். இதை எல்லோரும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது.
தமிழக அரசு இந்த விஷயத்தில் உறுதியாக நிற்க வேண்டும். பண்பாடு சார்ந்த விஷயம் என்பதால் துணிந்து செயல்பட வேண்டும். தமிழக அரசு சட்ட நடவடிக்கை எடுத்தாவது இந்த பிரச்சனைக்கு முடிவுக்கு கொண்டு வர வேண்டும். ஆளுங்கட்சியால் வேறு ஒன்றும் செய்ய முடியாது என்பதால்தான், குறைந்தபட்சம் விழாவை புறக்கணித்துள்ளனர்.
மனோன்மணியம் சுந்தரனார் பெயர் உள்ள பல்கலைக்கழகத்தில் கூட இந்த விஷயத்தை நிலைநிறுத்த முடியவில்லை என்றால், தமிழர்களுக்கு பெரிய வருத்தம் தான்" என அவர் கூறினார்.