சுங்கச்சாவடியில் தானாகவே கட்டணம் வசூலிக்கும் தொழில்நுட்பம்: குஜராத்தில் முதல்முறை புதிய அறிமுகம்
நமது நிருபர்
குஜராத் மாநிலத்தில் வாகனங்கள் சென்று கொண்டிருக்கும் போதே, சுங்கச்சாவடியில் தானாகவே கட்டணம் வசூலிக்கும் தொழில்நுட்பம் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
சுங்கச்சாவடி கட்டணம் என்பது நெடுஞ்சாலைகள், பாலங்கள், சுரங்கப்பாதைகள் அல்லது குறிப்பிட்ட சாலைகளைப் பயன்படுத்துவதற்காக வாகன ஓட்டிகளிடம் வசூலிக்கப்படுகிறது. சாலைகளைக் கட்டுவதற்கும், பராமரிப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் ஆகும் செலவை ஈடுகட்ட கட்டணமாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அல்லது மாநில அரசின் நெடுஞ்சாலைத் துறை அல்லது தனியார் இந்த கட்டணத்தை வசூலிக்கின்றனர்.
கட்டணத்தை பாஸ்டேக் முறையில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, வாகனத்தின் கண்ணாடியில் ஒட்டப்படும் ஸ்டிக்கர் மூலம் வங்கிக்கணக்கிலிருந்து நேரடியாக செலுத்த முடியும். இந்த நடைமுறையில் நீண்ட நேரம் வரிசையில் நிற்க வேண்டிய அவசியமில்லை. தற்போது அடுத்த கட்ட நடவடிக்கையாக, குஜராத் மாநிலத்தில் உள்ள சோர்யாசி சுங்கச்சாவடியில் வாகனங்கள் சென்று கொண்டிருக்கும் போதே, சுங்கச்சாவடியில் தானாகவே கட்டணம் வசூலிக்கும் தொழில்நுட்பம் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த புதிய முறையில், சென்சார்கள், கேமராக்கள் மூலம் வாகனத்தை கண்டறிந்து தானாகவே கட்டணம் வசூலிக்கப்படும். குஜராத்தில் உள்ள NH-48 நெடுஞ்சாலையில் இந்திய முதல் தடையற்ற சுங்கச்சாவடி முறை தொடங்கப்பட்டு உள்ளது. இந்த முதல் தடையற்ற சுங்கக் கட்டண முறை அறிமுகப்படுத்துவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரிஅறிவித்தார். இந்த முறை வாகனங்கள் சுங்கச்சாவடிகளை நிறுத்தாமல் கடந்து செல்ல அனுமதிக்கிறது. நாட்டின் நெடுஞ்சாலை உள்கட்டமைப்பை டிஜிட்டல்மயமாக்குவதில் இந்த நடவடிக்கை ஒரு முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் போக்குவரத்து நெரிசலைக் குறைத்தல், பயண நேரத்தைக் குறைத்தல், எரிபொருள் சிக்கனத்தை மேம்படுத்துதல் மற்றும் வாகன புகையைக் குறைத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது, திறமையான, வெளிப்படையான மற்றும் தொழில்நுட்ப அடிப்படையிலான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதில் பிரதமர் மோடியின் தலைமையிலான அரசின் முயற்சியை பிரதிபலிக்கிறது என நிதின் கட்கரி தெரிவித்தார்