📅 Friday, 12 June 2026 IST | வைகாசி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Technology June 12, 2026 01:30 PM

சுபாங் ஜெயாவில் வெளிநாட்டினரால் சட்டவிரோதமாக நடத்தப்பட்ட இரு வணிகங்களுக்கு எதிராக நடவடிக்கை

சுபாங் ஜெயாவில் வெளிநாட்டினரால் சட்டவிரோதமாக நடத்தப்பட்ட இரு வணிகங்களுக்கு எதிராக நடவடிக்கை

ஷா ஆலம், ஜூன் 12: சுபாங் ஜெயா மாநகராட்சி (MBSJ) தனது நிர்வாக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அமலாக்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தும் நோக்கில், வெளிநாட்டினரால் நடத்தப்பட்டு வந்ததாக நம்பப்படும் இரு சட்டவிரோத வணிகங்களுக்கு எதிராக அதிரடிச் சோதனைகளை மேற்கொண்டுள்ளது.

மாநகராட்சியின் முதல் கட்ட நடவடிக்கை, சுபாங் ஜெயா, ஜாலான் யூஎஸ்ஜே 4 (Jalan USJ 4) சாலை ஓரத்தில் உரிய அனுமதியின்றி நான்கு சக்கர வாகனத்தைப் பயன்படுத்தி இளநீர் விற்று வந்த வியாபாரத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டது.

அங்கு நடத்தப்பட்ட சோதனையில், எந்தவொரு வணிக உரிமமும் இன்றி அந்த வியாபாரம் நடத்தப்பட்டது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அங்கிருந்த வணிக உபகரணங்கள், விற்பனைப் பொருட்கள் மற்றும் அந்த நான்கு சக்கர வாகனம் ஆகியவை உடனடியாகப் பறிமுதல் செய்யப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட அனைத்துப் பொருட்களும் மேல் நடவடிக்கைக்காகச் சுபாங் ஜெயாவில் உள்ள டிப்போவிற்கு (Depoh TP2) கொண்டு செல்லப்பட்டன. அதோடு, சம்பந்தப்பட்ட நபர் உடனடியாக அந்த இடத்தை சுத்தம் செய்யுமாறு உத்தரவிடப்பட்டதோடு, எதிர்காலத்தில் இத்தகைய தவறுகளை மீண்டும் செய்யக்கூடாது என எச்சரிக்கப்பட்டார் என்று மாநகராட்சி தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

மற்றொரு தனித்துவமான சோதனையில், ஸ்ரீ கெம்பாங்கான், தாமான் புக்கிட் செர்டாங், ஜாலான் பிபிஎஸ் 11 (Jalan PBS 11) பகுதியில்திறந்தவெளியில் உரிமமின்றிச் செயல்பட்டு வந்த கார் கழுவும் (Car Wash) மையம் ஒன்றின் மீது மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

அந்த மையம் மாநகராட்சியின் எவ்வித அனுமதியும் இன்றி இயங்கியதோடு, அதன் உரிமையாளர் அருகிலுள்ள குடியிருப்புப் பகுதியிலிருந்து சட்டவிரோதமான முறையில் மின்சாரத்தைப் பெற்றுப் பயன்படுத்தி வந்ததும் சோதனையில் அம்பலமானது.

இதனைத் தொடர்ந்து, அந்த மையத்தின் செயல்பாடுகளை உடனடியாக நிறுத்துமாறு உத்தரவிட்ட அதிகாரிகள், கார் கழுவ பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் பறிமுதல் செய்தனர்.

பொதுமக்களின் பாதுகாப்பு, அமைதி மற்றும் சமூக நல்வாழ்வைப் பேணும் நோக்கில், உரிமமில்லாத இதுபோன்ற சட்டவிரோத வணிகங்களை ஒடுக்குவதற்கான கண்காணிப்பு மற்றும் அமலாக்க நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் எனச் சுபாங் ஜெயா மாநகராட்சி எச்சரித்துள்ளது.

மாநகராட்சியின் விதிமுறைகளை மீறும் வகையிலான செயல்பாடுகள் குறித்து ஏதேனும் தகவல்கள் தெரிந்தால், பொதுமக்கள் அதன் அதிகாரப்பூர்வ இணையத்தளம் வழியாகப் புகார் அளிக்கலாம்.

மேலும், 03-8024 7700 என்ற எண்ணில் மாநகராட்சியின் கட்டுப்பாட்டு மையத்தைத் தொடர்பு கொண்டு அல்லது 019-220 7823 என்ற வாட்ஸ்அப் எண் மூலமாக அதன் அமலாக்கத் துறைக்குப் புகார்களை அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.