மின் வாரியம் செயலிழந்தது போன்று தவறான தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர்: மின் வாரிய தலைவர் குற்றச்சாட்டு
சென்னை: ''தமிழக மின் வினியோ கத்தை உடனுக்குடன் மத் திய அரசின் தேசிய மின் பகிர்ந்தளிப்பு மையம் கண்காணிக்கிறது; சில இடங்களில் ஏற்படும் மின் தடையால், ஒட்டுமொத்த மின் வாரியமும் செயலிழந்து விட்டது போன்று தவறான தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர்,'' என, மின் வாரிய தலைவர் ராதா கிருஷ்ணன் தெரிவித்தார்.
சில வாரங்களாக சென்னை உட்பட பல மாவட்டங்களில், மின் சாதன பழுது உள்ளிட்ட காரணங்களால் மின் தடை ஏற்படுகிறது. இரவில் ஏற்படும் மின் தடையால், மக்கள் துாங்க முடியாமல் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
இது குறித்து, ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
மஹாராஷ்டிரா, குஜராத், உ.பி.,க்கு அடுத்து, தமிழகத்தில் தான் மின் தேவை அதிகம். தமிழக மின் தேவையை, மத்திய அரசின் தேசிய மின் பகிர்ந்தளிப்பு மையம் உடனுக்குடன் கண்காணிக்கிறது. தமிழக மின் தேவையை பூர்த்தி செய்ய போதுமான மின்சாரம் உள்ளது; பற்றாக்குறை இல்லை.
சென்னையில் 38 லட்சம் மின் இணைப்புகளுக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது. அரும்பாக்கத்தில் மழை நீர் வடிகால் பணி செய்யும்போது, மின்சாரம் செல்லும் கேபிளை பழுதாக்கி விட்டதால், அந்த இடத்தில் மின் தடை ஏற்பட்டது. சில இடங்களில் மின் சாதனம் பொருத்தப்பட்டு பல ஆண்டுகள் ஆவதால், பழுது காரணமாக மின் தடை ஏற்படுகிறது.
ஆனால், சென்னை முழுதும் மின் தடை ஏற்படுவது போன்ற தோற்றத்தை சிலர் ஏற்படுத்துகின்றனர். இது, ஊழியர்களிடம் தேவையற்ற பதற்றத்தை உருவாக்குகிறது. குறைந்த வீடுகள் இருந்த இடங்களில் தற்போது அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. அந்த இடங்களில் புதிதாக டிரான்ஸ்பார்மர், மின் வினியோக பெட்டி வைக்க, இடம் தர மறுக்கின்றனர்.
உதாரணமாக, எழும்பூர் ரித்தர்டன் சாலையில் டிரான்ஸ்பார்மர் வைக்க இடம் கிடைக்கவில்லை. இதே பிரச்னை பல இடங்களில் உள்ளது. கடந்த காலங்களிலும் கோடை காலத்தில் மின் தடை ஏற்பட்டது. பகலில் அதிகம் கிடைக்கும் சூரிய சக்தி மின்சாரம், இரவில் கிடைப்பதில்லை. காற்றாலை மின்சாரமும் திடீரென குறைந்து விடுவதால் நெருக்கடி ஏற்படுகிறது.இருப்பினும், மின் தடை புகார்களை விரைவாக பெற்று, சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.