சுவா சூ காங் வீவக வீட்டில் தீ: 60 குடியிருப்பாளர்கள் வெளியேற்றம்
சுவா சூ காங்கில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக மாடி வீட்டில் செவ்வாய்க்கிமை (அக்டோபர் 6) தீ விபத்து ஏற்பட்டது.
பாதுகாப்பு கருதி அக்கட்டடத்தில் இருந்து ஏறத்தாழ 60 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர். தீ எரிந்துகொண்டிருந்த வீட்டின் வாயிற்கதவுகளை தீயணைப்பு வீரர்கள் பலவந்தமாக உடைத்து நுழைய வேண்டியிருந்தது. சுவா சூ காங் அவென்யு 1, புளோக் 807C என்ற முகவரியில் உள்ள 16வது மாடி வீட்டில் அன்றைய தினம் பகல் 1.50 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. அந்த வீட்டின் வரவேற்பறையில் இருந்த பொருள்களில் இருந்து தீ பரவியதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (எஸ்சிடிஎஃப்) ஊடகத்திடம் தெரிவித்தது.
வலுக்கட்டாயமாக வீட்டுக்குள் நுழைந்து எஸ்சிடிஎஃப் அதிகாரிகள் இரு குழாய்களைக் கொண்டி நீரைப் பீய்ச்சி அடித்துத் தீயை அணைத்துள்ளனர்.
காவல்துறையும் எஸ்சிடிஎஃப் அதிகாரிகளும் இணைந்து அந்த கட்டடத்தில் வசித்த 60 குடியிருப்பாளர்களை பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேற்றினர்.
ஏணிப்படிகளைக் கொண்ட வாகனம், அவசர உதவி வாகனம் போன்ற சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் வாகனங்கள் சம்பவ இடத்தில் காணப்பட்டன.
தீ விபத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. தீ ஏற்பட்ட காரணத்தை அறிய விசாரணை நடந்துவருவதாக எஸ்சிடிஎஃப் தெரிவித்தது.
போக்குவரத்து அமைச்சரும் சுவா சு காங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெப்ரி சியாவ், தீச் சம்பவம் குறித்த விவரங்களை நாடாளுமன்ற விவாதங்களுக்கு இடையே ஃபேஸ்புக்கில் வெளியிட்டார். எஸ்சிடிஎஃப் படையின் விரைவான செயல்பாடுகளால் குடியிருப்பாளர்கள் பாதுகாப்பாக அவர்களது இல்லங்களுக்குத் திரும்பியுள்ளனர் என்று அவர் பதிவிட்டார்.
மக்கள் கழக ஊழியர்கள், நகர மன்றம், வீவக, அடித்தள குழு ஆகிய அமைப்புகளின் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு உதவி வழங்கினர் என்றார் அமைச்சர்.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
உதவிகள் நாடுவோர் பிரிக்லாந்து, தெங்கா தொகுதி அலுவலகத்தை 6235 8165 என்ற எண்களில் அல்லது தொகுதிக்கான இணையப் பக்கத்தைப் பார்க்கும்படி அவர் கேட்டுக்கொண்டார்.