சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
விழுப்புரம் : மரக்காணம் அருகே 8-ஆம் வகுப்பு படித்து வந்த யூடியூபர் சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே 8-ஆம் வகுப்பு படித்து வந்த பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மரக்காணம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்துள்ள நடுக்குப்பம் பகுதியில் பிரபல யூடியூபரும், அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கரின் முன்னாள் மனைவி ஆர்த்தி மகன் தியோ ஆழிசை தாத்தா பாட்டி அரவணைப்பில் வளரந்து வந்தார். இவர் மரக்காணம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தார்.
தாயார் கண்டித்ததால் ஏற்பட்ட மன உளைச்சல்:
மாணவர் தியோ ஆழிசை சமீபகாலமாக சரியாக படிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், படிப்பில் கவனம் செலுத்துமாறு அவரது தாயார் ஆர்த்தி சிறுவனைக் கண்டித்ததாகத் தெரிகிறது. தாயாரின் கண்டிப்பால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான சிறுவன், வீட்டில் பின்பக்கம் உள்ள வேப்பமரத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்த குடும்பத்தினர், சிறுவன் தூக்கில் தொங்குவதைக் கண்டு பேரதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முயன்றனர். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
காவல்துறை விசாரணை மற்றும் பிரேதப் பரிசோதனை:
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த மரக்காணம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுவனின் உடலைக் கைப்பற்றினர். பின்னர், உடற்கூறாய்வு பரிசோதனைக்காக புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள மரக்காணம் காவல்துறையினர், சிறுவனின் தற்கொலைக்கு தாயார் கண்டித்தது மட்டும்தான் காரணமா அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா என்ற கோணத்தில் குடும்பத்தினரிடமும், சுற்றுவட்டாரப் பகுதியினரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பள்ளி மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட இந்த விபரீதச் சம்பவம் நடுக்குப்பம் மற்றும் மரக்காணம் சுற்றுவட்டாரப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் சோக அலையையும் ஏற்படுத்தியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ஃபோட்டோ கேலரி