📅 Monday, 21 September 2026 IST | புரட்டாசி 5, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Health September 21, 2026 06:04 PM

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் நிலவரம் என்ன? சுகாதாரத் துறை அமைச்சர் அளித்த அப்டேட்

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் நிலவரம் என்ன? சுகாதாரத் துறை அமைச்சர் அளித்த அப்டேட்

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் நிலவரம் என்ன? சுகாதாரத் துறை அமைச்சர் அளித்த அப்டேட்

நிலவேம்பு கசாயம், பப்பாளி இலைச்சாறு பிளேட்லேட் அதிகமாக்கும் என்ற கருத்து உள்ளது. அதுகுறித்து அறிவியல் ஆதாரம் கேட்டுள்ளோம் என்று அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.

Published : September 20, 2026 at 10:59 PM IST

சென்னை: தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் முழுமையாக கட்டுக்குள் உள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். உண்ணிக் காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் உடனே சிகிச்சை பெற வேண்டும் என்றும் அவர் பொதுமக்களை அறிவுறுத்தி உள்ளார்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்நாடு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கத்தின் 8 ஆம் ஆண்டு மாநில மாநாடு இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக சுகாதாரத்துறை அமைச்சர் அருண் ராஜ் மற்றும் சட்டப்பேரவைத் தலைவர் ஜே சி டி பிரபாகர் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினர்.

செவிலியர்கள் பணி நிரந்தரம்

அப்போது மேடையில் பேசிய அமைச்சர் அருண் ராஜ், "நான் மருத்துவம் பயிலும்போது எனக்கு ஊசி போட கற்றுக்கொடுத்தது செவிலியர்தான். இந்த அரசு உங்களுக்கு நலனில் உறுதியாக இருக்கும் என்பதை ஆணித்தாரமாக சொல்கிறேன் .

முதல்வர் அவர்களுக்கு செவிலியர்கள் மீது அன்பும் அக்கறையும் உள்ளது. முதலைமைச்சர் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் தான் பிறந்தார். எனவே எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு ஆய்வுக்கு சென்றபோது செவிலியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என முதமைச்சர் கூறினார்.

புதிய செவிலியர்கள் கல்லூரியில் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்கள் தகுதியின் அடிப்படையில் ஆசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள். செவிலியர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்,மாவட்ட நல சங்கங்கள் மூலம் 4724 செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். 2500 செவிலியர்களுக்கான பணி நிரந்தர அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

பணி நியமனம் தொடர்பாக யாராவது பணம் கேட்கிறார்கள் என்று புகார் வந்தால் மாவட்ட சுகாதார அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரித்தார்.

தொடர்ந்து சபாநாயகர் ஜே சி டி பிரபாகர் பேசியபோது, "சுகாதார கள நிலவரம் குறித்து செவிலியர்களுக்கு அதிகளவில் தெரியும். இந்த சட்டசபை நிகழ்வுகளை நேரலையில் ஒளிப்பரப்பிய பின் என்னிடம் சிலர், எந்தவிதமான இடையூறு இல்லாமல் நேரலை ஒளிபரப்பு தொடர வேண்டும்" என்று கேட்டுக் கொண்டனர் என்றார்.

நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ்,"​மருத்துவக் கட்டமைப்பின் மூளையாக மருத்துவர்கள் செயல்பட்டாலும், அதன் இதயமாக இருந்து நோயாளிகளுக்கு அன்பும் அரவணைப்பும் வழங்குபவர்கள் செவிலியர்கள் தான். அவர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும். ​சங்க நிர்வாகிகளை விரைவில் நேரில் அழைத்துப்பேசி, அவர்களின் கோரிக்கைகளுக்குத் தீர்வு காணப்படும்.

அரசு செவிலியர் கல்லூரிகளுக்கு ஆசிரியர்களாக B.Sc மற்றும் M.Sc நர்சிங் முடித்து அரசு மருத்துவமனைகளில் 10 முதல் 15 ஆண்டுகள் பணியாற்றிய தகுதியான செவிலியர்கள், செவிலியர் கல்லூரிகளில் ஆசிரியர்களாகப் பணியமர்த்தப்படுவார்கள்.

நிலவேம்பு கசாயம், பப்பாளி இலைச்சாறு பிளேட்லேட் அதிகமாக்கும் என்ற கருத்து உள்ளது. அதுகுறித்து அறிவியல் ஆதாரம் கேட்டுள்ளோம்.

​​மாநிலத்தில் டெங்கு காய்ச்சல் முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் பாதிப்புகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.

​2023 ஆம் ஆண்டு 56,863 பாதிப்புகள் ​2024 ஆம் ஆண்டு 46,971 பாதிப்புகள் ​2025 ஆம் ஆண்டு, 25,585 பாதிப்புகள்

​இந்த ஆண்டு (இதுவரை) 17,049 பாதிப்புகள் மட்டுமே பதிவாகியுள்ளன. அதே நேரத்தில் ​அரசு அலட்சியமாக இல்லாமல் போதிய அளவில் கொசு ஒழிப்புப் பணியாளர்களை நியமித்து, வீடு வீடாகச் சென்று மழைநீர் தேங்கும் இடங்களைக் கண்டறிந்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.

​சிகிச்சை வழிகாட்டுதல்

டெங்கு உறுதி செய்யப்பட்டால் அரசு மருத்துவமனைகளில் எந்த முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் தயாரித்து, அனைத்து அரசு மருத்துவர்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. டெங்குவினால் உயிரிழப்புகள் ஏற்படக் கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது.

இதையும் படிங்க:டெங்கு தடுப்பு நடவடிக்கை - மதுரையில் நாள்தோறும் 100 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள்

உள்ளாட்சித் துறை, மாநகராட்சி, நீர்வளத் துறை மற்றும் பொதுப்பணித் துறை ஆகிய அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து கொசு ஒழிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. முதலமைச்சர் நிலையிலும் இது தொடர்பாக ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

கொசுக்கடியில் இருந்து தப்பிக்க உடம்பில் தடவப்படும் கொசு விரட்டிகளால் பயன் உள்ளதா என்பது குறித்த ஆய்வு அக்டோபர் இரண்டாம் வாரத்தில் தொடங்கப்படும். அந்த ஆய்வின் முடிவுகள் சாதகமாக வரும் பட்சத்தில், பொது சுகாதாரத் துறையின் சார்பில் அது நடைமுறைப்படுத்தப்படும்.

​பொதுமக்களுக்குக் கோரிக்கை

​வீட்டை மட்டும் தூய்மையாக வைத்துக் கொள்வதில் பொதுமக்கள் கவனம் செலுத்தினால் போதாது. அருகில் உள்ள காலியிடங்களில் மழைநீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

​கோயம்புத்தூர் போன்ற இடங்களில் ஆய்வு செய்தபோது தேவையற்ற டயர்கள், பாத்திரங்கள் மற்றும் மூடிகளில் அதிகளவில் நீர் தேங்கியிருந்தது கண்டறியப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது. ​பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புறத்தில் மழைநீர் தேங்காமல் பராமரித்து அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

உண்ணிக் காய்ச்சல் பாதிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவர் டெங்குவினால் உயிரிழக்கவில்லை அவர் ஸ்கரப் டைபஸ் எனப்படும் உண்ணிக் காய்ச்சலால் தான் உயிரிழந்துள்ளார். ​இதன் அறிகுறிகள் காய்ச்சல், தலைவலி, வாந்தி என டெங்குவைப் போலவே இருக்கும். ஆனால், உண்ணி என்ற பூச்சி கடிக்கும் இடத்தில் சிறிய தழும்பு போன்ற அடையாளம் இருக்கும். ​மாலை நேரங்களில் பூங்காக்கள் மற்றும் செடிகள் அதிகம் உள்ள இடங்களுக்குச் செல்லும்போது கடிக்க வாய்ப்புள்ளது.

உண்ணிக் காய்ச்சலால் கடந்த ஆண்டு 5142 பேரும், இந்த ஆண்டு 4619 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இக்காய்ச்சல் பரவுவது மற்றும் அறிகுறிகள் குறித்த விழிப்புணர்வு வீடியோவை பொது சுகாதாரத் துறை விரைவில் வெளியிடும். இது போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனையை அணுகி சிகிச்சை பெற வேண்டும்" என்று அறிவுறுத்தினார்.