சவுதியில் தமிழ் இளைஞருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து
இலங்கைத் தமிழ் இளைஞர் அனோஜன் சிவராசா
இலங்கையின் கிழக்கு மாகாணம், கல்முனை அருகே உள்ள நற்பிட்டிமுனையை சேர்ந்தவர் அனோஜன் சிவராசா. இவர் சவுதி அரேபியாவில் கட்டுமான தொழிலாளராகப் பணியாற்றி வருகிறார். இலங்கை சார்ந்த செய்திகள், தகவல்களை சமூக வலைதளங்களில் அவ்வப்போது வெளியிட்டு வந்தார்.
சில மாதங்களுக்கு முன்பு இலங்கையின் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இந்துக்கள் கதிர்காமம் முருகன் கோயிலுக்கு புனித பாத யாத்திரையை மேற்கொண்டனர். அவர்களோடு சுப்பிரமணியம் என்று பெயரிடப்பட்ட நாயும் சென்றது. இலங்கையின் கல்முனை பகுதியில் அந்த நாயை, முஸ்லிம் இளைஞர் ஒருவர் தாக்கினார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதைத் தொடர்ந்து முஸ்லிம் இளைஞர் கைது செய்யப்பட்டார். ஜாமீனில் விடுதலையான அவர் மன்னிப்பு கோரி வீடியோவும் வெளியிட்டார்.
ஆனால், நாய் தாக்கப்பட்ட விவகாரம் இலங்கை சமூக வலைதளங்களில் பெரும் விவாதப்பொருளாக மாறியது. ஒரு தரப்பினர் இந்து கடவுள்களை விமர்சித்தும், மற்றொரு தரப்பினர் அதற்கு பதிலடி அளித்தும் சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டனர்.
சவுதி அரேபியாவில் பணியாற்றி வந்த அனோஜன் சிவராசாவும் சமூக வலைதள விவாதத்தில் பங்கேற்று பதிவுகளை வெளியிட்டு வந்தார். அப்போது நபிகள் நாயகம் குறித்து அவர் அவதூறாக விமர்சனம் செய்ததாகக் கூறப்படுகிறது.
சமூக வலைதளத்தின் மூலம் சர்ச்சைக்குரிய முறையில் முகம்மது நபி குறித்து கருத்து பதிவிட்ட சம்பவம் தொடர்பாக, அந்நாட்டில் பணிபுரிந்த இலங்கையைச் சேர்ந்த தமிழர் அனோஜன் சிவராசா என்பவர் சவுதி அரேபிய காவல் துறையால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தின் மூலம் அவருக்கு மரண தண்டனை தண்டனை விதிக்கப்பட்டது.
அனோஜன் சிவராசாவை விடுதலை செய்ய இலங்கை மற்றம் இந்தியாவில் பல்வேறு தரப்பினர் குரல் கொடுத்து வந்தனர்.
இந்நிலையில் சவுதியில் இலங்கைத் தமிழர் அனோஜனின் மரண தண்டனையை அந்நாட்டு உயர் நீதிமன்றம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கையின் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் அருண் ஹேமசந்திரா தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கை அரசின் தொடர்ச்சியான சட்ட ரீதியான முயற்சிகளைத் தொடர்ந்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒத்துழைப்பு வழங்கிய சவுதி அரேபிய அரசாங்கத்துக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.