📅 Wednesday, 23 September 2026 IST | புரட்டாசி 7, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 07, 2026 03:30 PM

DC Review: டிசி விமர்சனம்.. புரமோஷனே தேவையில்லை.. படம் பேசும்.. தேவதாஸ்

DC Review: டிசி விமர்சனம்.. புரமோஷனே தேவையில்லை.. படம் பேசும்.. தேவதாஸ்

சென்னை: ஹீரோ கேங்ஸ்டராக இருந்தால் போலீஸ் வில்லனாக இருக்கும் அதே டெம்பிளேட் கதை தான் என்றாலும், இங்கே ஹீரோவாக லோகேஷ் கனகராஜ் அறிமுகமாகியுள்ள டிசி படத்திலும் ஒவ்வொரு ஃப்ரேமிலும் உள்ள ஆழம் கடைசி வரை எந்த இடத்திலும் போர் அடிக்காமல் அதே சமயத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி கடத்திச் சென்று சம்பவம் செய்துள்ளது.

அருண் மாதேஸ்வரன் இதற்கு முன்னாடி இயக்கிய ராவான ஆக்‌ஷன் படங்களை போலவே இந்த படமும் அந்த மீட்டரை தாண்டியே உள்ள நிலையிலும், இதில் உள்ள எமோஷனல் கனெக்ட் தான் படத்தை வெற்றிப் படமாக மாற்றியுள்ளது.

ஹீரோ கேங்ஸ்டராக என்ன மோட்டிவ், போஜராஜ் டீம் தேவதாஸ் டீமை வேட்டையாட துடிக்க என்ன காரணம், காவலர்கள் உண்மையாகவே காவலராக உள்ளார்களா? சந்திரா யாரு? தேவதாஸ் உடன் அவர் எப்படி வந்து சேர்கிறார் என அனைத்து கதைகளும் ஒருங்கமைக்கப்பட்ட விதங்களும் ஆக்‌ஷன் காட்சிகளும் வசனங்களும் டிசி படத்தை எந்தளவுக்கு உயர்த்தின என்பது குறித்த விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..

டிசி கதை: தேவதாஸ் D - சந்திரா C இவர்களின் கதை தான் இந்த டிசி. அம்மாவை தாய்மாமன்களே கொலை செய்துவிட அப்பாவின் பேச்சை மீறி படிக்காமல், மாமன்களை கொன்று ஐட்டங்காரனாக மாறுகிறார் தேவதாஸ் (லோகேஷ் கனகராஜ்). புள்ளையை எப்படியாவது ஆங்கில மீடியத்தில் படிக்க வைக்க வேண்டும் என தனது சொத்தை எல்லாம் விற்று பணத்துடன் செல்லும் ஒருவரை போலீஸார் அந்த பணத்துக்கு ஆசைப்பட்டு கொலை செய்ய, அந்த போலீஸ்காரரை தேவதாஸ் தனது டீமுடன் சென்று போட்டுத் தள்ளுகிறார்.

இதன் காரணமாக போஜராஜன் தலைமையில் ஒரு போலீஸ் டீம் தேவதாஸ் மற்றும் அவனது ஆட்களை சுட்டுப் பிடிக்க வேட்டையாடுகிறது. போஜராஜன் டீமிடம் இருந்து தேவதாஸ் தப்பித்தாரா? பார்வதி (சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி) யாரு? சந்திரா (வாமிகா கபி) யாரு? இவர்கள் இருவரும் தேவதாஸ் வாழ்க்கையில் என்ன செய்தார்கள் என்பது தான் இந்த டிசி படத்தின் கதை.

படம் எப்படி இருக்கு?: ஆரம்பத்திலேயே போலீஸ் வாகனத்தை வழி மறித்து பிஸ்டல்களை திருடி லோக்கல் டானாக வேலூரில் சுற்றிக் கொண்டிருக்கின்றனர் தேவதாஸ் மற்றும் அவரது ஆட்கள். பணத்தை திருடி அப்பாவியை கொன்று போட்ட போலீஸாரை தேடிக் கண்டுபிடித்து கொலை செய்ய அங்கிருந்து சென்னைக்கு தலைமறைவாக தப்பிக்கின்றனர்.

கூலி படத்துக்குப் போட்ட செட் போன்ற மேன்ஷனில் தங்கியிருக்கும் போது பார் பாடகி பார்வதியை லோகேஷ் கனகராஜ் பார்த்து மயங்குகிறார். சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி பார்வதியாக இடைவேளை வரை வந்தாலும் அவரது நடிப்பும் ஸ்க்ரீன் பிரசன்ஸும் வேறலெவல்.

இடைவேளைக்குப் பிறகு காண்டம் உடன் விபச்சார விடுதியில் இருக்கும் சந்திராவை தேவதாஸ் சந்திக்கும் இடங்களும் சந்திராவை அங்கிருந்து காப்பாற்றிஅழைத்துச் செல்லும் இடத்தில் நடக்கும் சண்டைக் காட்சிகளும் லோகேஷ் கனகராஜின் வெறித்தனமான நடிப்பைக் காட்டுகிறது. இறுதி வரை இறுக்கமான முகத்துடன் சிரிப்பே இல்லாத முக பாவனையுடன் பெண்களை கண்டால் மட்டும் மதிக்கும் குணத்துடன் லோகேஷ் கனகராஜ் தேவதாஸ் கதாபாத்திரத்தில் மிரட்டியுள்ளார். அவரது நண்பர்களாக வரும் கிட்டி, கருப்பன் உள்ளிட்டோரும் கச்சிதமாக நடித்துள்ளனர்.

தேவதாஸை வேட்டையாடியே தீர வேண்டும் என போஜராஜன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகரும் செம ராவாகவும் ரியலாகவும் நடித்துள்ளார். தேவதாஸை சந்திரா காப்பாற்ற வரும் அந்த காட்சி தியேட்டர் பிளாஸ்ட் ஆகிறது.

பிளஸ்: அருண் மாதேஸ்வரன் ஸ்டைல் ஆக்‌ஷன், வெட்டுக்குத்து, துப்பாக்கி தோட்டா சத்தம் தெறிக்கும் படமா இது என்பதையே மறக்கடிக்கும் வகையில் படத்தின் கலரையும் ஸ்டைலையும் ஹாலிவுட் ரேஞ்சுக்கு டைட்டில் கார்டு போடும் போதே தனது பின்னணி இசையாலும் பாடல்களாலும் அனிருத் தான் எலிவேட் செய்து கடைசி வரை காப்பாற்றுகிறார். திரையில் வரவில்லை என்றாலும் இந்த படத்தின் நிஜ ஹீரோவே அனிருத் தான். பிளாஸ்ட்டிக் பூவுக்கும் துப்பாக்கிக்கும் இடையே மலரும் காதலை அவர் தனது இசை மூலம் கடத்திய விதம் தான் படத்தை வெற்றிப் படமாக மாற்றுகிறது. அருண் மாதேஸ்வரன் முந்தைய படங்களை விட இந்த படத்தை வொர்த்தாக கொடுக்க வேண்டும் என உருவாக்கிய காரணங்களும், அழுத்தமான எமோஷன் காட்சிகளும் படத்தை ரசிக்க வைக்கின்றன.

முகேஷ். ஜியின் கேமரா ஒர்க் சஞ்சனா கிருஷ்ணமூர்த்திக்கும் லோகேஷ் கனகராஜுக்கும் இடையே நடக்கும் அந்த கண்ணாடி உரையாடலிலேயே பிரம்மிப்பை ஏற்படுத்துகிறது. பிரசன்னா ஜி.கே.வின் கட்ஸ் கடைசி வரை எந்த இடத்திலும் தொய்வை ஏற்படுத்தாமல் விறுவிறுப்பைக் கூட்டியுள்ளது.

மைனஸ்: வழக்கமான பழிவாங்கல் கதையாகவும் கேங்ஸ்டர் ஹீரோ, போலீஸ் வில்லன் கதையாகவும் அமைந்தது தான் ஏமாற்றத்தை அளிக்கிறது. கதை மற்றும் திரைக்கதையில் பெரிய எழுத்து விளையாட்டுத் தெரியாமல் ஆக்‌ஷன் காட்சிகளை படமாக்கிய விதத்தில் மட்டுமே கவனத்தை செலுத்தியிருப்பது பெரிய மைனஸ் ஆக உள்ளது. ஒவ்வொரு முறையும் ஹீரோ மாட்டிக் கொள்வது ரிப்பீட் ஆவதையும் தவிர்த்து இருக்கலாம். ஆபாச வசனங்கள், அதீத ரத்தம், போலீஸ் அதிகாரிகள் என்றாலே தப்பானவர்கள் என்கிற பேட்டர்ன்கள் இந்த படத்திலும் அதீதமாகவே உள்ளது. ஏ சான்றிதழ் வாங்கினாலும் இத்தனை கெட்ட வார்த்தைகள் சென்சார் போர்டில் இருந்து எப்படி தப்பித்தது என்பதே ஆச்சர்யம் தான்.

பார்க்கலாமா? வேண்டாமா?: ஆனால், அருண் மாதேஸ்வரன் லோகேஷ் கனகராஜுக்கென்றே அளவு எடுத்து செய்த படமாக இந்த டிசி படத்தைக் கொடுத்து பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாமல் போகும் ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்திய இடத்தில் ஸ்கோர் செய்துள்ளார். வாமிகா கபி அந்த டாக்டரை கொல்லும் இடத்தில் எல்லாம் நடிப்பில் தான் ஒரு ராட்சசி என்றே நிரூபித்துக் காட்டியுள்ளார். தாராளமாக தியேட்டரில் பார்க்க வொர்த்தான சம்பவம் தான் இந்த டிசி.