DMK vs TVK: மனுவை வீதியில் வீசியதா தவெக? பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்த திமுக!
DMK vs TVK: மனுவை வீதியில் வீசியதா தவெக? பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்த திமுக!
பொதுமக்கள் அளித்த மனுவை தவெக வீதியில் வீசிச் சென்றுள்ளதாக திமுக குற்றம் சாட்டியுள்ளது.
தமிழ்நாட்டில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 6ம் தேதி நடைபெற உள்ளது. தனிப்பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி நடத்தி வரும் தவெக இந்த இரு தொகுதிகளில் கட்டாய வெற்றி பெறும் நோக்கில் பணியாற்றி வருகிறது.
ஆட்சியைப் பறிகொடுத்த திமுக வெற்றி பெற்றே தீரும் நோக்கத்தில் களத்தில் இறங்கியுள்ளது. இந்த நிலையில், திமுக தனது எக்ஸ் பக்கத்தில் தவெக பொதுமக்களின் மனுக்களை வீதியில் வீசிச் சென்றுள்ளதாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
இதுதொடர்பாக அவர்கள் பதிவிட்டுள்ளதாவது,
காலில் மிதிப்பதற்கு சமம்:
தேர்தலுக்காக ஓடோடி வந்து ரீல்ஸ் எடுத்து ஓட்டுக் கேட்கத் தெரியும் விஜய்க்கு, மக்களின் அடிமட்டப் பிரச்சினைகளைத் தீர்க்கத் திராணியில்லையா? நம்பிக்கையுடன் மக்கள் கையில் கொடுத்த மனுக்களைத் தெருக்களில் வீசி எறிவது அப்பட்டமான துரோகம்; மக்களைக் காலில் போட்டு மிதிப்பதற்குச் சமம்.
உண்மையான மக்கள் சேவையோ, சமூக அக்கறையோ எள்ளளவும் இல்லாமல், கேமராவுக்காகவும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களுக்காகவும் மட்டுமே வலம் வரும் மலிவான விளம்பர நாடகங்கள் அம்பலப்பட்டு நிற்கின்றன.
நியாயப்படுத்த முடியாது:
தங்களின் அடிப்படைத் தேவைகளுக்காகவும் வாழ்வாதாரத்துக்காகவும் ஏங்கி நிற்கும் எளிய மக்களின் குரலைக் காற்றில் பறக்கவிட்டு, இவ்வளவு துடுக்குத்தனமாகவும் பொறுப்பற்ற முறையிலும் நடந்து கொள்வதை எந்தக் காலத்திலும் நியாயப்படுத்த முடியாது.
இடைத்தேர்தலுக்கு முன்பே அந்தத் தொகுதி மக்களின் கோரிக்கைகளைக் குப்பைத் தொட்டியில் வீசும் இத்தகைய சுயநல அரசியலுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவது உறுதி!
இவ்வாறு அதில் பதிவிடப்பட்டுள்ளது.
திமுக இந்த குற்றச்சாட்டுடன் சேர்த்து வீதியில் வீசப்பட்டதாக கூறப்படும் மனுவின் புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளது. அதில் ஒரு பெண்ணின் ஆவணம் தெளிவாக உள்ளது. மற்ற காகிதங்கள் சுருட்டப்பட்டு உள்ளது.
திமுக வியூகம்:
இடைத்தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், ஆளுங்கட்சியான தவெக, எதிர்க்கட்சியான திமுக, முன்னாள் ஆளுங்கட்சியான அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், நாம் தமிழர் ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றனர்.
இந்த இடைத்தேர்தலில் தவெக-வை வீழ்த்தினால் தனிப்பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி நடத்தும் அவர்களுக்கு நெருக்கடி கொடுக்கலாம் என்று கருதுகிறது.
தலைப்பு செய்திகள்
ஃபோட்டோ கேலரி