📅 Thursday, 20 August 2026 IST | ஆவணி 4, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 20, 2026 11:02 AM

எம்.ஜி.ஆர் நாயகன் என்றால் விஜய் மாயாஜாலம்

எம்.ஜி.ஆர் நாயகன் என்றால் விஜய் மாயாஜாலம்

எம்.ஜி.ஆர் நாயகன் என்றால் விஜய் மாயாஜாலம்!

- டி.தருமராஜ்

முதல்வர் விஜய்யின் நூறு நாள் ஆட்சி கொண்டாடப்பட்டு வருகிறது. அவருக்கு 100-வது நாள் என்பது புதிது இல்லை. ஏராளமான நூறு நாள்களைத் திரைத்துறையில் கண்டிருக்கிறார். ஆனால், ஆட்சி அமைத்து நூறு நாள்களை வெற்றிகரமாகக் கடந்திருப்பது முக்கிய நிகழ்வுதான். அதனால், தமிழக வெற்றிக் கழகத்தினரும், விஜய்யின் வாக்காள ரசிகர்களும் இதைக் கொண்டாடி மகிழ்கிறார்கள். இந்த நேரம் நாம் ஒரு கேள்வியைக் கேட்க வேண்டும். `திரைப்படத்துக்கும் அரசாங்கத்துக்குமான வேறுபாட்டைத் தமிழர்கள் மறந்துபோனார்களா... தமிழக அரசியல் சினிமாபோல மாறிக் கொண்டிருக்கிறதா... சினிமா மோகத்தில் தமிழகம் சீரழிந்து வருகிறதா?’

கடந்த ஐம்பதாண்டுக்கால தமிழக அரசியலை ‘சினிமா மோகம்’ என்று விளக்குவது ஒரு ஃபேஷனாகவே இருந்து வந்திருக்கிறது. ஆனால், அதைவிடப் பெரிய அறிவுச் சோம்பல் எதுவும் இல்லை. ஏனெனில், அதில் தீர்க்கமான விமர்சனமோ, அரசியல் பார்வையோ இல்லை என்பதோடு, அதீத காழ்ப்புணர்வும் வெளிப்படுகிறது என்பதே உண்மை.

எம்.ஜி.ஆர் தொடங்கி இன்றைய முதல்வர் விஜய் வரை திரைத்துறையிலிருந்து யார் அரசியலுக்கு வந்தாலும், `அது மாபெரும் மோசடி’ என்றே சொல்லப்படுகிறது. `இந்த ஹீரோக்கள் மக்களை ஏமாற்றுகிறார்கள்’ என்கிறார்கள். இவ்வளவு சோம்பேறித்தனமான வாதத்தை பரவலாகக் கொண்டு சென்றதில் திராவிட, மார்க்சிய, தலித்தியக் கட்சிகளுக்குப் பெரும் பங்கு உண்டு. தமிழக அரசியலை அறிவுபூர்வமாகவும், கொள்கை சார்ந்தும் தாங்கள் வளர்க்க முயலும்போது, சினிமா நடிகர்கள் சீரழிவைக் கொண்டு வருகிறார்கள் என்பது அவர்களது தீர்ப்பு.

நிஜமாகவே தமிழர்கள் சினிமா மோகத்தால் சீரழிந்தவர்கள்தானா... சினிமா நம்மைச் சிந்திக்க விடாமல் செய்கிறதா?

‘சினிமாவை உண்மை என்று நம்பிய ஏமாளிகள்’ என்ற வாதத்துக்கு, காலங்காலமாய் ஒரு கதை சொல்லப்பட்டுவருகிறது. அந்தக் கதையின்படி, எம்.ஜி.ஆர் - நம்பியார் சண்டைக் காட்சியில், எம்.ஜி.ஆரின் வாள் நழுவிவிட, நிராயுதபாணியாக நின்றிருக்கிறார். இதைக் கண்டு பொறுக்காத ரசிகர் ஒருவர் தன் இடுப்புக் கத்தியை வீசி எறிய அது சினிமா திரையைக் கிழித்து விட்டதாம். இது தி.மு.க-வின் மேடைப்பேச்சில் உருவாக்கப்பட்ட ஒரு கற்பனைக் கதை. சினிமா காட்டும் கற்பனை உலகத்துக்கும், நிஜ உலகுக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் தமிழ் சினிமா ரசிகர்கள் என்பது இந்தக் கதையின் வாதம்.

ஆனால், இதற்கு நேர் எதிராகவே தமிழ் சினிமா ரசிகர்கள் காணப்பட்டார்கள். ‘கரகாட்டக்காரன்’ சினிமாவைப் பார்த்து திரையரங்கிலேயே அம்மன் அருள் வந்து ஆடியவர்கள் நம்மூரில் நிறைய பேர். அந்தப் பெண்களில் யாரும் திரையில் காட்டப்பட்ட திருவிழாவை உண்மை என்று நம்பவில்லை. ஆனால், திரையரங்கையே திருவிழாவாக மாற்ற முற்பட்டார்கள். அதன் பிறகு எல்லா அம்மன் திருவிழாக்களிலும் அந்தப் பாடல்கள் தவறாமல் பாடப்பட்டன.

சினிமாவில் வருவதைப்போல ஆடை, அலங்காரங்களைச் செய்துகொள்கிறவர்கள் நம்மிடம் அதிகம். நவீனகாலத் தமிழர்களின் காதல்கூட சினிமாவைப் பார்த்தே வளர்ந்திருக்கிறது. இளையராஜாவின் பாடல்கள் திரைப்படக் கதாபாத்திரங்களுக்குப் பயன்பட்டதைவிட நிஜ வாழ்வில் காதல் தூதாகப் பயன்பட்ட சம்பவங்களே அதிகம். அந்த வகையில், சினிமாவை நிஜம் என்று நம்பி ஏமாந்தார்கள் என்று சொல்வதைவிட, நிஜத்தில் எவ்வாறு வாழ்வது என்பதை சினிமா மூலம் தமிழர்கள் கற்றுக்கொள்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.

எம்.ஜி.ஆரின் திரைப்படங்கள் அன்றைய தமிழர்களுக்குக் கற்றுத்தந்த மிக முக்கியமான பாடம் - ஏழ்மையிலிருந்து விடுபட முடியும் என்பதுதான். அவரது எல்லாப் படங்களிலும் உதிரித் தொழிலாளர்கள் அல்லது விளிம்புநிலை மனிதர்கள் வயிறார உணவு உண்ணும் காட்சி தவறாமல் இடம்பெற்றது. `நலிந்தவர்களின் வாழ்க்கை படிப்படியாக உருமாறும்’ என்ற நம்பிக்கையை அவரது படங்கள் தொடர்ந்து உற்பத்தி செய்தன. இந்த நம்பிக்கையே திராவிட முன்னேற்றக் கழகத்தை 1967-ல் ஆட்சியில் அமர வைத்தது. அதன் பிறகு 1972-ல் எம்.ஜி.ஆர் தனித்து களம் கண்டபோதும் ஏழை பாழைகள் அதே நம்பிக்கையுடனேயே அவரைப் பதவியில் அமரவைத்தனர்.

அதுநாள் வரை எம்.ஜி.ஆரை பிரசார உத்தியாகப் பயன்படுத்திக் கொண்டிருந்த தி.மு.க., அவர் தனிக்கட்சி தொடங்கியதும் ‘தமிழர்களின் சினிமா மோகம்’ என்று பேச ஆரம்பித்தது. எம்.ஜி.ஆர் தமிழர்கள்மீது கவர்ச்சி அரசியலை நிகழ்த்துகிறார் என்பதே அவர்களின் பிரதான குற்றச்சாட்டாக இருந்தது. உண்மையில்

எம்.ஜி.ஆரின் திரைப்படங்கள், ஏதுமற்றவர்களுக்கு வாழ்க்கைமீதான நம்பிக்கையையே ஏற்படுத்தியிருந்தன.

இந்த நேரம், ‘சினிமா ஒரு கனவுத் தொழிற்சாலை’ என்றொரு புகழ்பெற்ற வாக்கியத்தை சுஜாதா உருவாக்கித் தந்தார். சினிமா மீது ஆர்வம் இருந்த அளவுக்கு, அது சமூகத்தில் ஏற்படுத்தும் விளைவுகளை உன்னிப்பாக கவனிக்கும் ஆற்றல் அன்றைக்கு யாருக்கும் இல்லை. உண்மையில் சினிமா, கனவுகளை உற்பத்தி செய்வதில்லை; கனவுகளைக் காணும் முறைகளையே கற்றுத் தருகிறது. அதன் பிரத்யேக, சிறப்பு வாய்ந்த, காட்சியும் ஒலியும் கலந்த மொழியின் மூலம் நாம் எவ்வாறு சிந்திக்க வேண்டும் என்று நமக்குச் சொல்லித்தருகிறது.

‘சினிமா ஒரு சிந்தனை முறை’ என்று 1980-களில் எழுதிய தத்துவ அறிஞர் டெல்யூஸின் கருத்தை நாம் அனுபவபூர்வமாக உணர ஆரம்பித்தது 2000-க்குப் பின்புதான். என்றைக்கு சமூக ஊடகங்கள் பெருக ஆரம்பித்தனவோ, அன்றே சினிமா வெகுஜனங்களின் மொழியாக மாற ஆரம்பித்துவிட்டது. அதுவரையில் சினிமா பேசுவதைக் கேட்கிறவர்களாக மட்டுமே இருந்த வெகுஜனம், முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற ஊடகங்களின் பெருக்கத்துக்குப் பின்பு அதைப் பேசுகிறவர்களாகவும் மாறினர். அவர்களது பேச்சு ‘ரீல்ஸ்’ என்று அழைக்கப்பட்டது. பேச்சு கண்டுபிடிக்கப்பட்ட பின்பு, மறுபடியும் ஜனநாயகபூர்வமான நவீன மொழியொன்று உருவாகத் தொடங்கியது. வெகுகாலம் கண்ணுக்குத் தெரியாதிருந்த `ஜனம்’ என்ற மக்கள் கூட்டம் அம்மொழியின் வழியாகப் புலப்படவும் தொடங்கியது.

தமிழக அரசியலில் விஜய்யின் வருகையை இத்தகைய வெகுஜனத் திரட்சியின் பின்புலத்திலேயே விளங்கிக்கொள்ள வேண்டும். பலரும் தவறாகக் கணிப்பதுபோல, விஜய் சினிமா கவர்ச்சியை மூலதனமாகக் கொண்டு மட்டுமே அரசியலுக்கு வரவில்லை. அவரது களப் பிரவேசம் தமிழ் வெகுஜன சிந்தனையோட்டத்தோடு பொருந்திப் போவதைப் பார்க்கும்போது, அவரை, ‘பல்வேறு காரணிகளின் சிக்கலான வடிவமைப்பில் வெளிப்பட்ட அதிசயம்’ என்றே வர்ணிக்கத் தோன்றுகிறது.

2000-த்துக்குப் பின் உருவான விஜய்யை ஆதரிக்கும் வெகுஜனத் தமிழ் கூட்டம், 1970-களில் எம்.ஜி.ஆரை ஆதரித்த ஏழைத் தமிழர்களிடமிருந்து பெரிதும் வேறுபட்டிருந்தது. இந்த வெகுஜனத் தமிழர்கள் ஏதுமற்றவர்களோ அல்லது நலிந்தவர்களோ இல்லை. விஜய்யை ஆதரிக்கிறவர்கள் அளப்பரிய சுயமரியாதையை வெளிப்படுத்தினர். பாரம்பர்யமான ஆபத்பாந்தவன் மனப்பான்மையோடு திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் பேசும் பேச்சுகள் இவர்களைக் காயப்படுத்தின. இலவசப் பேருந்துப் பயணத்தை ‘ஓசி பஸ்’ என்று இழிவு செய்தபோது இந்தப் புதிய தமிழ்க் கூட்டம் சங்கடத்தில் நெளிந்தது. அரசாங்கம் வழங்கும் பொருள்களில் ஆட்சியாளர்களின் படங்கள் இடம்பெற்றதை இவர்கள் அவமரியாதையாக உணர்ந்தார்கள்.

இன்னொரு பக்கம், திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரட்டை வேடமும் விஜய்யை ஆதரிக்கும் வெகுஜனங்களைப் பெரிதும் முகம் சுளிக்க வைத்தது. ஒரு பக்கம் சமூக நீதியைப் பேசும் அந்தக் கட்சி, இன்னொரு பக்கம் சாதிகளின் கூட்டமைப்பாகச் செயல்படுவதை இளைஞர்கள் அறவே வெறுத்தனர். அதிலும் குறிப்பாக, ‘எல்லா இடங்களிலும் ரத்த உறவுகளே அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்வதைக் கண்டு, திராவிடக் கட்சிகள் வர்ணாசிரம தர்மத்தின் நவீன வடிவம்’ என்றே விளங்கிக் கொண்டனர். எம்.ஜி.ஆரை ஆதரித்த தமிழர்கள் இப்படி இல்லை என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு, கலைஞர் கருணாநிதியின் மீது கோபம் இருந்ததேயொழிய, திராவிடக் கட்சிகளின் மீது அல்ல. ஏனெனில், அன்றைய தமிழர்களுக்கு திராவிடக் கட்சிகளே பெரும் நம்பிக்கையாகத் தெரிந்தன. ஆனால், விஜய் அரசியலுக்கு வந்த காலத்தில் தமிழர்களின் ஒட்டுமொத்த சிந்தனை முறையும் மாறிப்போயிருந்தது. அவர்கள் திராவிடக் கட்சிகளின் மீதான விமர்சனத்துடனேயே அரசியலை ஆரம்பிக்கிறார்கள்.

கொள்கை ஒன்றாகவும், செயல்பாடு வேறாகவும் விளங்கும் திராவிட ஆட்சியின் மீது உருவாகியிருந்த வெகுஜன அதிருப்தியை 2017-ல் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போராட்டமே நமக்கு முதலில் உணர்த்தியது. பெரியார் இறுதிவரை போதித்துவந்த சுயமரியாதையையும் பகுத்தறிவையும் கைக்கொண்ட மக்கள் கூட்டம் திரளத் தொடங்கியபோது, அதை எதிர்கொள்ளத் தெரியாமல் விழிபிதுங்கி நின்றது திராவிடக் கட்சிகளே என்பதுதான் இதில் வேடிக்கை. கலைஞர் காலத்து, எம்.ஜி.ஆர் காலத்து தமிழ்நாடு மாறிவிட்டது என்பதன் அறிகுறி இது. இதைத் திராவிடக் கட்சிகள் கடைசிவரை உணரவில்லை என்பதே உண்மை.

ஜனநாயகத்தின் மிக முக்கிய குணமான, ‘வேறுபட்ட குழுக்கள் ஒற்றை நோக்கத்துக்காக ஒன்று சேர்தல்’ என்ற இயல்பை 2017 ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் ருசிகண்ட தமிழக வெகுஜனம், அதனை 2026 தேர்தலிலும் நிகழ்த்திக் காட்டியதே விஜய்யின் வெற்றி.

விஜய்யின் அரசியல் ஆட்டத்தைக் கவனித்துப் பார்த்திருந்தால் ஒன்று தெரிந்திருக்கும். அவர் தன்னை ஒரு ஜல்லிக்கட்டுக் காளையைப் போன்றே காட்சிப்படுத்தினார். அந்தச் சீற்றம், உடல் பாவனைகள், அந்நேரம் மக்கள் அடையும் கொந்தளிப்பு என்று அத்தனையும் ஒரே விஷயத்தைத்தான் ஞாபகப்படுத்தின. 2017-ல் தமிழகம் போராடிப் பெற்ற ஜல்லிக்கட்டு நடத்தும் உரிமை இதோ கண்முன்னே காட்சியளிக்கிறது. வாடிவாசலைத் திறந்தவுடன் விஜய் அந்த நீண்ட நடைபாதையில் ‘ரேம்ப் வாக்’ சென்றபோது அவரை அணைத்துக் கொள்வதற்கு இளைஞர்கள் பாய்ந்த காட்சியே தமிழக அரசியலைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டது.

விஜய், சினிமா நடிகர்தான் என்றாலும், அவரது ஆளுமை சினிமாவால் உருவாக்கப்படவில்லை. அதேநேரம், அவர் அரசியல்வாதியும் அல்ல.

திராவிடக் கட்சிகளின் மீது நம்பிக்கை இழந்திருந்த மக்களுக்கு அவர் வலுவான பற்றுக்கோலாக இருந்தார். கடந்த அரை நூற்றாண்டாகப் புறக்கணிக்கப்பட்டிருந்த சமத்துவம், சமதர்மம், சுயமரியாதை போன்ற இலட்சியங்களை நோக்கி 2026 தேர்தல் நகரத் தொடங்கியதன் மையப்புள்ளியாக விஜய் மாறிப்போயிருந்தார் என்பதே வரலாறு.

தமிழக வெகுஜனங்களின் இறையாண்மையை மீட்டெடுக்கும் முயற்சியில் விஜய் மையக் கதாபாத்திரமாக மாறியது தமிழகப் பண்பாட்டுத் திட்டங்களில் ஒன்று. இதில் சினிமாவின் கவர்ச்சிக்கோ, பிம்ப உருவாக்கத்துக்கோ எந்தப் பங்களிப்பும் இல்லை.

இன்றைக்கு நாம் பார்த்துக்கொண்டிருப்பது, நவீன தமிழர்களின் அரசியல் நடவடிக்கை. இது எம்.ஜி.ஆர் கால அரசியலிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. இவர்கள் சமூக ஊடகங்களால் இணைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் மொழி ‘காட்சியும் ஒலியும் கலந்து காலத்தோடு நகரும் சினிமா’. திராவிடக் கட்சிகளுக்குத் தெரிந்த சினிமா அல்ல இது. ஒரு பேச்சுக்கு சொல்வதென்றால், பழைய காலத்து எம்.ஜி.ஆரோ, ஜெயலலிதாவோ இன்றைக்கு அரசியலுக்கு வந்தால், தமிழ் வெகுஜனம் அவர்களைத் தோற்கடிக்கும் என்பதே நிஜம். அவர்கள் அப்போதும் விஜய்யையே முதல்வராகத் தேர்ந்தெடுப்பார்கள்.

ஏனென்றால், திராவிடக் காலத்துத் தமிழர்கள் இன்றைக்கு இல்லை. இன்றைய தமிழர்கள் தங்களுடைய தலைவர்களை தாங்களே உருவாக்கிக்கொள்கிறார்கள். அப்படி மக்களால் உருவாக்கப்பட்டவரே விஜய். எம்.ஜி.ஆரை காளையை அணைக்கும் வீரராகக் கற்பனை செய்தால், விஜய் ‘அந்த மந்திரக் காளையே நான்தான்’ என்கிறார். இதுவே, தமிழகம் நாயக அரசியலிலிருந்து வெகுஜன அரசியலுக்கு மாறிவிட்டது என்பதன் அறிகுறி.