என் அனுபவம் தான் முதல்வர் விஜய்யின் வயது; சொல்கிறார் இபிஎஸ்
தாராபுரம்: 'அதிமுக படிப்படியாக தவெகவுக்கு வந்துவிடும் என்று முதல்வர் விஜய் கூறுவது கனவில் கூட நடக்காது. அதிமுக தான் தவெகவை வீழ்த்தும்,' என்று அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.
தாராபுரம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் பானுமதியை ஆதரித்து, கன்னிவாடியில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் இபிஎஸ் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு 2 நிமிடங்கள் அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து இபிஎஸ் பேசியதாவது; இந்த தேர்தல் எதற்கு என்று உங்களுக்குத் தெரியும். இதே மாதிரி 5 மாதத்துக்கு முன்பு அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்றார் ஒருவர். அவர் குதிரை பேரத்தில் மாற்றுக் கட்சிக்கு விலை போய், அக்கட்சியில் இங்கு போட்டியிடுகிறார். அவருக்கு தகுந்த பாடத்தைப் புகட்டுங்கள். சுமார் 7,000 பேர் அவருடைய வெற்றிக்காக உழைத்தனர். ஓட்டுப்போட்ட மக்களையும், உழைத்தவர்களையும் உதாசீனப்படுத்திவிட்டார். உங்கள் வாக்கை விற்றுவிட்டார். அவரை இத்தேர்தலில் டெபாசிட் இழக்கச் செய்யுங்கள்.
அதிமுகவை திமுகவின் கிளை என்கிறார் முதல்வர் விஜய். நாங்கள் கிளை அல்ல, நீங்கள் தான் கிளை. கருப்பு சிவப்பு சைக்கிளில் சென்று ஓட்டுப்போட்டது யார்? நீங்கள் தான். தவெக முளைச்சு மூணு இலை தான் விட்டிருக்கிறது. அதுக்குள் இத்தனை ஆர்ப்பாட்டம். அதிமுக பொன்விழா கண்ட கட்சி, 31 ஆண்டுகாலம் ஆட்சி புரிந்த கட்சி. அதிமுகவை பேச என்ன தகுதி இருக்கிறது? ஏன் காரில் போகவில்லை, சைக்கிளில் போனால்தான் மக்களுக்குத் தெரியும். அதனால் அவர் நம்மைப் பற்றி பேசுவதற்குத் தகுதியில்லை.
விஜய் சொல்கிறார், அதிமுக கொஞ்சம் கொஞ்சமாக கரைகிறதாம், இங்க வந்து பாருங்கள், எவ்வளவு பேர் இருக்கிறார்கள். உங்களைப் போல திரைப்படத்தில் இருந்து வந்தவன் அல்ல, உழைப்பால் வந்தவன். என்னைவிட உழைத்தவர்கள் எல்லாம் இங்குள்ளனர். 1974ல் கட்சியில் இணைந்து 52 ஆண்டுகாலம் அதிமுகவில் பணியாற்றி இருக்கிறேன், தவெக தலைவருக்கே 52 வயது தான். இவர் நம்மை விமர்சிக்கிறார். மேலும், அதிமுக படிப்படியாக தவெகவுக்கு வந்துவிடும் என்கிறார். கனவில் கூட நடக்காது. அதிமுக தான் தவெகவை வீழ்த்தும்.
இரண்டு நாள் முன்பு மதுராந்தகத்தில் வேட்பாளரை அறிமுகம் செய்கிறார், அவரும் ஓடிப்போனவர். அவரை வல்லவர், நல்லவர் என்கிறார் விஜய். வெட்கமாக இல்லையா? ஒரு கட்சி எம்.எல்.ஏவை ராஜினாமா செய்யவைத்து, தன் கட்சியில் இணைத்து அவருக்கே இடைத்தேர்தலில் சீட் கொடுக்கிறார் என்றால் அவருடைய யோக்கியதை என்னவென்று தெரிந்துக்கொள்ளுங்கள். இதுவா தூய கட்சி? இது தீய கட்சி. நேர்மையாகத் தேர்தலில் வென்றால் பாராட்டலாம், ஆட்சியை காப்பாற்ற வெட்கக்கேடான செயல் செய்திருக்கிறார்.
நாம் மட்டும் சொல்லவில்லை, தவெக அரசை ஆதரிக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளே சொல்கிறார்கள். அவர்கள் தவெகவை எதிர்த்து போட்டியிடவும் செய்கிறார்கள். மீண்டும் ஒரு தேர்தல் வரக்கூடாது என்று தான் ஆதரித்தனர், பல முறை எச்சரித்தனர், இதே நிலை நீடித்தால் ஆதரவு வாபஸ் பெறுவோம் என்றும் எச்சரித்துவிட்டனர்.
10 லட்சம் கோடி கடன் இருக்கும் நிலையில், 1200 கோடியில் புதிய தலைமைச் செயலகம் தேவையா? லக்சரியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். விவசாயிக்கு காலில் செருப்பில்லை, உணவில்லை, அவரோ கடன் வாங்கி தலைமைச்செயலகம் கட்டுவாராம். முதல்வர் அறை போதவில்லையாம், அங்கு தான் அண்ணா முதல் ஸ்டாலின் வரை நான் உட்பட அனைவரும் இருந்து பணியாற்றினோம். நாமக்கல் கவிஞர் மாளிகையில் 10வது மாடியில் 10 கோடியில் சொகுசு அறை கட்டிவருகிறார். 40 ஆயிரம் சதுரடி அடியில் அமைக்கிறார். அவர் கடல் காற்று வாங்குவதற்கு ஏழை மக்கள் பணத்தை விரையமாக்க வேண்டுமா..? ஒவ்வொரு ரூபாயும் மக்கள் கொடுக்கும் பணம். தவெக முதல்வர் காஸ்ட்லி முதல்வர், கோட்சூட் போட்டு வருவார், போட்டோ, வீடியோ எடுப்பார்கள், காலை 10 மணி முதல் 5 மணி வரை இருப்பார். சனி, ஞாயிறு விடுமுறை. இப்படிப்பட்ட முதல்வரை எங்குமே பார்த்ததில்லை. புதுமையான முதல்வர்.
கரன்ட் எப்போது போகும், எப்போது வரும் என்று தெரியவில்லை, அமைச்சர்கள் விழாவிலே கரன்ட் கட்டாகிறது. அப்படியென்றால் எப்படிப்பட்ட நிர்வாக கேடு என்று பாருங்கள். மின்வெட்டு அல்ல மின்பற்றாக்குறை என்கிறார் அமைச்சர் நிர்மல்குமார். அவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்துவிடலாம். எப்படி சரிசெய்யப் போகிறீர்கள்..? எல்லா மாநிலமும் மின் கொள்முதல் செய்துவிட்டனர், எங்கு விலைக்கு வாங்குவது என்று தெரியாமல் தேடிக்கொண்டிருக்கிறார்கள். சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. விலைவாசி உயர்ந்துவிட்டது. எத்தனை பொய் வழக்குப் போட்டாலும் அதிமுக வெற்றியைத் தடுக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.