📅 Sunday, 27 September 2026 IST | புரட்டாசி 11, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 10, 2026 08:00 PM

'எங்கள் மண்ணில் எங்கள் தமிழுக்கே முதலிடம்' | தமிழ்த்தாய் வாழ்த்து தனித் தீர்மானத்தால் என்ன பயன்?

'எங்கள் மண்ணில் எங்கள் தமிழுக்கே முதலிடம்' | தமிழ்த்தாய் வாழ்த்து தனித் தீர்மானத்தால் என்ன பயன்?

'எங்கள் மண்ணில் எங்கள் தமிழுக்கே முதலிடம்' | தமிழ்த்தாய் வாழ்த்து தனித் தீர்மானத்தால் என்ன பயன்?

தமிழ்நாடு சட்டப் பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்ட தனித் தீர்மானம் வெறும் ஏட்டளவில் மட்டும் இருந்துவிடாது. இது எதிர்காலத்தில் மிக முக்கிய சட்டப்பூர்வ மற்றும் அரசியல் தாக்கங்களை ஏற்படுத்தும் என சட்ட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Published : August 10, 2026 at 7:00 PM IST

-BY எஸ்.சையத் இப்ராஹிம்

சட்டப்பேரவையில் இன்று (ஆகஸ்ட் 10, 2026) ஒரு வரலாற்று சிறப்புமிக்க தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அதாவது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்வி நிலையங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்டவற்றின் நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும் என்ற தீர்மானம் தான் அது.

தமிழ்த்தாய் வாழ்த்து கடந்து வந்த பாதை

பேராசிரியர் பெ. சுந்தரம் பிள்ளை எழுதிய 'மனோன்மணீயம்' நாடக நூலின் பாயிரப் பாடலாக அமைந்தது தான் 'நீராரும் கடலுடுத்த' என தொடங்கும் இந்த தமிழ்ப் பாசுரம். பாயிரப் பாடல் என்பது ஒரு நூலின் தொடக்கத்தில் எழுதப்படும் அறிமுக உரை அல்லது பாயிர உரை வடிவப் பாடல் ஆகும். ஆங்கிலத்தில் இதனை 'Preface', 'Prologue' அல்லது 'Introduction' என்று கூறுவர்.

தமிழ் இலக்கிய மரபில், ஒரு பெரிய காப்பியமோ அல்லது நூலோ எழுதப்படும்போது, அந்த நூலின் சிறப்புகள், அதை எழுதிய ஆசிரியர், நூல் எழுதப்பட்டதற்கான நோக்கம் போன்றவற்றை அதன் தொடக்கத்திலேயே விளக்கிப் பாடுவது இலக்கணமாகும். அதன்படி தான் 'மனோன்மணீயம்' நாடக நூலில் 'நீராரும் கடலுடுத்த' என்ற பாடல் இடம் பெற்றுள்ளது.

இந்த நிலையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் ஆட்சி காலத்தில், 1970 ஆம் ஆண்டு நவம்பர் 23 அன்று 'நீராரும் கடலுடுத்த' பாடல் தமிழ்நாட்டின் அதிகாரப்பூர்வ அரசு வாழ்த்துப் பாடலாக அறிவிக்கப்பட்டது.

2021 ஆம் ஆண்டு டிசம்பர் 12 அன்று, தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை தமிழ்நாட்டின் 'மாநில கீதம்' ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டது. அதாவது தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இசைக்கப்படும் போது சரியாக 55 விநாடிகள் மாற்றுத்திறனாளிகள் தவிர அனைவரும் கட்டாயம் எழுந்து நிற்க வேண்டும் என்பது சட்டமாக்கப்பட்டது.

அண்மை சர்ச்சைகளும் கொந்தளித்த தமிழ்நாடும்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திட்டமிட்டோ அல்லது கவனக்குறைவாகவோ தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு சில அமைப்புகளால் அவமதிப்புகள் நிகழ்ந்ததாக சர்ச்சைகள் எழுந்தன. அதாவது கடந்த 2018 ஆம் ஆண்டு காஞ்சி சங்கரமடத்தின் இளைய பீடாதிபதி விஜயேந்திரர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்காத விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது. இதுதொடர்பான வழக்கில் 2021 ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, 'தமிழ்த்தாய் வாழ்த்து ஒரு பிரார்த்தனை பாடலே, தேசிய கீதம் அல்ல. அதற்கு எழுந்து நிற்பது கட்டாயமில்லை' என்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு தமிழ் ஆர்வலர்கள் மற்றும் உணர்வாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை தொடர்ந்து, தமிழ் மொழியின் பெருமையையும், தமிழர்களின் மொழி உணர்வையும் காக்கும் பொருட்டு, 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 17 அன்று, அப்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, 'நீராரும் கடலுடுத்த' என தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை தமிழ்நாட்டின் அதிகாரப்பூர்வ 'மாநிலப் பாடலாக' அறிவித்து முறையான அரசாணை (G.O. Ms. No. 1037) வெளியிட்டது.

1970 ஆம் ஆண்டு முதல் தமிழ்த்தாய் வாழ்த்து அரசு விழாக்களில் பாடப்பட்டு வந்தாலும், 'மாநிலப் பாடல்' என்ற சட்டப்பூர்வ அந்தஸ்து இந்த மாதத்தில் தான் வழங்கப்பட்டது.

இதனிடையே, சென்னை தூர்தர்ஷன் மற்றும் ஆளுநர் மாளிகை நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட போது, "திராவிட நல் திருநாடும்" என்ற மிக முக்கிய வரி விடுபட்டது. இது ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் இடையே மிகப்பெரிய அரசியல் போராக வெடித்தது.

தவெக அரசின் பதவியேற்பு விழாவில் 3-வது இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து

இந்த நிலையில் இந்த ஆண்டு மே மாதம் 10-ந் தேதி முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு பதவியேற்பு விழா நடைபெற்றது. அப்போது, வழக்கத்திற்கு மாறாக 'வந்தே மாதரம்' மற்றும் 'ஜன கண மன' ஆகியவற்றுக்கு பின்னால் மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதற்கு தமிழ் ஆர்வலர்கள் மட்டுமல்லாமல், தவெக அரசுக்கு ஆதரவு அளித்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இதனிடையே, தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை தந்த மனோன்மணீயம் சுந்தரனார் பெயரில் திருநெல்வேலியில் உள்ள பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவிலும் இதே போல தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாமிடத்திற்கு தள்ளப்பட்டது சர்ச்சையை மேலும் தீவிரப்படுத்தியது.

இதுகுறித்து அ்போது ஈடிவி பாரத் செய்தியாளரிடம் பேசிய மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர், 'கடந்த ஆண்டு இதுபோன்ற பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி என்பதால் முதலில் தேசிய கீதமும் இரண்டாவது தமிழ் தாய் வாழ்த்தும் பாடப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு சமீபத்தில் 'வந்தே மாதரம்' முதலில் பாட வேண்டும் என மத்திய அரசு வழிகாட்டுதல் வெளியிட்டிருந்தது. இதனை பின்பற்றி பட்டமளிப்பு விழாவில் முதலில் வந்தே மாதரம் பாட வேண்டும் என ஆளுநர் மாளிகையில் இருந்து கண்டிப்பான உத்தரவு வந்து இருந்தது. அதன் அடிப்படையில் தான் இந்த ஆண்டு நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் முதலில் வந்தே மாதரமும் இரண்டாவது தேசிய கீதமும் மூன்றாவதாக தமிழ் தாய் வாழ்த்தும் பாடப்பட்டது' என கூறினார்.

இதனிடையே, கடந்த 2 நாட்களுக்கு முன்பு கூட தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை தொடர்பாக, தமிழ்நாட்டை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளுநருக்கு கண்டன கடிதம் எழுதி இருந்தனர்.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல் என்ன?

அண்மையில் மத்திய உள்துறை அமைச்சகம் நாடு தழுவிய அளவில் ஒரு புதிய வழிகாட்டுதலை அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பியது. அதாவது நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அரசு விழாக்களின் தொடக்கத்தில் தேசிய பாடலான 'வந்தே மாதரம்' அல்லது தேசிய கீதமான 'ஜன கண மன' ஆகியவற்றில் ஒன்றுக்கே முதலிடம் தர வேண்டும் என்று தெரிவித்தது.

ஆனால், தமிழ்நாட்டில் பல தசாப்தங்களாக தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து, நிறைவில் தேசிய கீதம் என்ற மரபே பின்பற்றப்பட்டு வருகிறது. மத்திய அரசின் இந்த புதிய வழிகாட்டுதல் தமிழ்நாட்டின் இந்த நடைமுறையை சிதைப்பதாக அமைந்ததால், மாநில சுயாட்சிக்கு குரல் கொடுக்கும் நோக்கில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தனித் தீர்மானம்

தமிழக சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்தில், முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இந்த தனித் தீர்மானத்தை கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர், "தமிழ் என்றால் பெருமை, தமிழ் என்றால் வலிமை. 'தமிழ்' என்று சொன்ன கணமே ஒட்டுமொத்த தமிழகமும் ஒன்றுபட்டு நிற்கும். எங்களது தமிழக வெற்றிக் கழக அரசு, தமிழ்நாட்டின் மொழி மற்றும் கலாச்சார உரிமைகளில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளாது. தமிழக மண்ணில் நடைபெறும் எந்தவொரு விழாவாக இருந்தாலும், அதில் தமிழ்த்தாய் வாழ்த்தே முதலிடம் வகிக்க வேண்டும்" என்றார்.

தவெக அரசு கொண்டு வந்த தீர்மானத்திற்கு பிரதான எதிர்க்கட்சியான திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தங்களின் முழு ஆதரவை வழங்கி, குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றின.

தமிழ் ஒரு மொழி மட்டுமன்று, அது ஒரு சிந்தனை-பண்பாடு-நாகரீகம்-அதோடு தமிழ் நம் உயிர்; தமிழ் நம் உணர்வு என்பதை முழுமையாக உணர்ந்ததே நமது தமிழ்நாடு அரசு.மேலும், தமிழ் மொழியின் தொன்மை, தனித்தன்மை, பெருமை, சிறப்பு மற்றும் தமிழர்களின் உணர்வைப் போற்றிப் பாதுகாக்கும் வகையிலான இந்த…

எதிர்க்கட்சிகளுக்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் விஜய்

இதனிடையே, சட்டப்பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்த எதிர்க்கட்சிகளுக்கு முதலமைச்சர் விஜய் நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'தமிழ் மொழியின் தொன்மை, தனித்தன்மை, பெருமை, சிறப்பு மற்றும் தமிழர்களின் உணர்வை போற்றி பாதுகாக்கும் வகையிலான இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம், தமிழ்த்தாய்க்கு செலுத்தப்படும் உயரிய மரியாதையாகும். இத்தீர்மானம் நிறைவேற்றிய இந்நன்னாள் தமிழ்நாட்டின் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும். இந்தத் தீர்மானத்தை அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக ஆதரித்து நிறைவேற்றித் தந்தமைக்காக என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

தனித் தீர்மானத்தால் என்ன பலன்?

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்ட தனித் தீர்மானம் வெறும் ஏட்டளவில் மட்டும் இருந்து விடாது. இது எதிர்காலத்தில் மிக முக்கிய சட்டப்பூர்வ மற்றும் அரசியல் தாக்கங்களை ஏற்படுத்தும் என சட்ட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

அதாவது, மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல் என்பது ஒரு நிர்வாக உத்தரவு மட்டுமே (Administrative Order). ஆனால், இந்திய அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள மொழி மற்றும் கலாச்சார உரிமைகளின் படி (Linguistic and Cultural Rights) மாநில சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்படும் தீர்மானம் என்பது சட்டப்பூர்வ அந்தஸ்தை பெறுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள ஐ.ஐ.டி (IIT), என்.ஐ.டி (NIT), மத்தியப் பல்கலைக்கழகங்கள் (Central Universities) மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் (PSUs) போன்ற மத்திய அரசுக்கு சொந்தமான அல்லது கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் கூட இனி தமிழக மண்ணில் விழா நடத்தினால் தமிழ்த்தாய் வாழ்த்தை முதன்மையாகப் பாடியே தீர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

'வந்தே மாதரம்' பாடலைத் தொடக்கத்தில் கட்டாயமாக்குவதன் மூலம் மறைமுகமாக இந்தி மற்றும் சமஸ்கிருத பண்பாட்டை திணிக்க நடக்கும் முயற்சிகளை இந்தத் தீர்மானம் சட்டரீதியாக தடுத்து நிறுத்துவதாகவும் சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆளுநர் மாளிகை அல்லது தூர்தர்ஷன் நிகழ்வுகளில் நடந்தது போல தமிழ்த்தாய் வாழ்த்தின் வரிகளை திட்டமிட்டு தவிர்ப்பவர்கள் அல்லது பாடலின் வரிசையை மாற்றுபவர்கள் மீது, இனி 'சட்டமன்ற தீர்மானத்தை மீறிய குற்றத்திற்காக' அரசு மிகக் கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

தனித் தீர்மானம் போதாது - திமுக கருத்து

இதனிடையே, தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்எல்ஏவும், முன்னாள் சட்ட அமைச்சருமான ரகுபதி, இன்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஆளுநரையோ அல்லது மற்றவர்களையோ கட்டுப்படுத்துமா என்ற சந்தேகத்தை கிளப்பினார்.

அப்போது பேசிய அவர், 'தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு தான் முதலிடம் என்பதற்காக சட்ட அங்கீகாரம் கொண்டு வரப்பட வேண்டும். அதற்காக இந்த அரசு உரிய முயற்சிகள் எடுக்க வேண்டும். ஆனால், இது சந்தேகமே. ஒன்றிய அரசு என்று சொல்லவே இந்த அரசு பயப்படுகிறது' என்றும் குற்றம்சாட்டினார்.

சட்ட நிபுணர்கள் கூறுவது என்ன?

முன்னாள் அமைச்சர் ரகுபதியின் கருத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில், நமது செய்தியாளரிடம் பேசினார் வழக்கறிஞர் சிவாஜி. அப்போது அவர், 'மத்திய அரசின் நிர்வாக உத்தரவை விட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவைக்கே அதிக அதிகாரம் உள்ளது. தனித் தீர்மானம் இன்று நிறைவேறிய நிலையில், அது அரசிதழில் வெளியிடப்பட்டு, உத்தரவாக அனைத்து துறைகளுக்கும் அனுப்பப்படும்.

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் என்பதற்கு மேலும் வலு சேர்க்க தமிழ்நாடு அரசு அதற்கு உரிய சட்டவடிவம் கொடுக்க வேண்டும். அது சட்டமாக நிறைவேற்றப்பட்டால், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு தான் முதலிடம் என்பதை யாராலும் மீற முடியாது' என்றார்.

'மாநில அரசின் அதிகாரத்தில் மத்திய அரசு தலையிட முடியாது என்பதால் தான், 'வந்தே மாதரம்' தொடர்பாக நிர்வாக உத்தரவை மட்டுமே அது பிறப்பித்தது. மாநில அரசு தனது தனித் தீர்மானத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில், உடனடியாக அதனை சட்டமாக்க வேண்டும். அப்போது தான் மத்திய அரசின் நிர்வாக உத்தரவு நீர்த்துப் போகும்' என்றும் வழக்கறிஞர் சிவாஜி கூறினார்.