📅 Thursday, 01 October 2026 IST | புரட்டாசி 15, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil July 15, 2026 03:31 AM

எங்கும் மணம் வீசும் ‘துபாய் சாக்லெட்’

எங்கும் மணம் வீசும் ‘துபாய் சாக்லெட்’

மத்திய கிழக்கின் சுவை மரபு கலந்த ‘துபாய் சாக்லெட்’, திசையெங்கும் மனங்களைச் சுண்டியிழுத்து வருகிறது.

உலக அளவில் பிரபலமாக இருக்கும் இந்த சாக்லெட் மீதான மோகம், தற்போது சிங்கப்பூர் உணவுச் சந்தைக்குள்ளும் நுழைந்து மக்களைத் தொற்றியுள்ளது.

புத்தாக்கமிகு சுவையின் பிறப்பிடம்

துபாயின் ‘ஃபிக்ஸ் டிசர்ட் சாக்லெட்டியர்’ (FIX Dessert Chocolatier) என்ற நிறுவனத்தைத் தொடங்கிய சாரா ஹமூதா என்பவரால் துபாய் சாக்லெட் அறிமுகம் செய்யப்பட்டது.

மொறுமொறுப்பான, வறுத்த மெல்லிய நூல்களான ‘கடாய்ஃபி’ (Kataifi), பிஸ்தா பருப்பை அரைத்துத் தயாரிக்கப்பட்ட பசை, எள்ளுப் பசையின் கலவையைப் புகுத்தி துபாய் சாக்லெட் தயாரிக்கப்படுகிறது.

இந்த சாக்லெட் மிகக் குறுகிய காலத்தில் பிரபலமடைய இணைய விளம்பரங்களும் சமூக ஊடகங்களும் முக்கியக் காரணம். ‘கான்ட் கெட் க்னாஃபே ஆஃப் இட்’ (Can’t Get Knafeh of It) என்ற சாக்லெட் 100க்கும் அதிகமான நாடுகளில் தற்போது விற்கப்பட்டு வருகிறது.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த உணவு நிபுணர்கள், இச்சுவை தங்களின் உள்ளூர் இனிப்புப் பண்டங்களுடன் இணைத்து புதுவகைக் கலவைகளைச் செய்யத் தொடங்கினர்.

சிங்கப்பூரிலும் தாக்கம்

வழக்கமான உணவு வகைகளுடன் ஒப்பிடுகையில், துபாய் சாக்லெட் பண்பாடு வியக்கத்தக்க வகையில் சிங்கப்பூர்ச் சந்தையில் நிலைத்து நிற்பதாகத் தொழில்துறை நிபுணர்கள் கருதுகின்றனர்.

துபாய் சாக்லெட் சுவையுடன் சிங்கப்பூரில் தயாரிக்கப்பட்ட முதல் குரோசண்ட்டான (croissant) ‘டெர்ட்டி துபாய் சியூவி குரோசண்ட்’ (Dirty Dubai Chewy Croissant) அறிமுகமானதை கியோங் சைக் பேக்கரி உரிமையாளர் உறுதிப்படுத்தினார்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

சிங்கப்பூரில் துபாய் சாக்லெட் அலை தொடர்வதாகக் குறிப்பிட்ட அவர், வாடிக்கையாளர்களின் வரவேற்பால் தமது உணவகத்தின் இரண்டாவது துபாய் சாக்லெட் தயாரிப்பு இந்த குரோசண்ட் என்றார்.

வாடிக்கையாளர்களின் தேவையைக் கருத்தில்கொண்டு, சிங்கப்பூரின் பிற முன்னணி உணவகங்களும் தங்களின் தயாரிப்புகளில் துபாய் சாக்லெட் சுவையைப் புகுத்தி, புதிய வணிக உத்திகளைக் கையாண்டு வருகின்றன.

அந்த வகையில், சைனாடவுனில் இந்தியத் தம்பதி நடத்தும் ‘விஸ்க்டம்’ உணவு, பானக் கடை, தமது பிரபலமான குக்கீசை அடிப்படையாகக்கொண்டு, ‘துபாய் சியூவி குக்கி’ (Dubai Chewy Cookie) என்ற தனித்துவமான தயாரிப்பை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களைக் கவர்ந்துள்ளது.

உலகப் புகழ்பெற்ற பேக்கரியான ‘லேடி எம் சிங்கப்பூர்’ (Lady M Singapore), 20க்கும் மேற்பட்ட மெல்லிய ‘க்ரெப்’ (crepe) அடுக்குகளுக்கு இடையே பிஸ்தா கிரீம், க்னாஃபே ஃபில்லிங் ஆகியவற்றைக் கொண்டுள்ள ‘துபாய் சாக்லெட் மில் க்ரெப்ஸ்’ (Dubai Chocolate Mille Crêpes) கேக் வகையைத் தயாரிக்கிறது.

பண்டிகைக் காலத்திலும் எதிரொலி

துபாய் சாக்லெட் அலையின் தாக்கம், பண்டிகைக் காலத்தில் சந்தைகளிலும் எதிரொலிக்கத் தொடங்கியிருப்பது அதன் வளர்ச்சியை எடுத்துக்காட்டுகிறது.

இந்திய உணவுக்கடையான ‘சாய் ஓ கிளாக்’, (Chai O’ Clock) ஆண்டுதோறும் தீபாவளித் சந்தையில் சிறப்புப் பண்டிகைக்கால உணவுப் பதார்த்தமாக ‘துபாய் சாக்லெட் பூரி’ (Dubai Chocolate Puri) என்ற புதுமையான சுவையை அறிமுகப்படுத்தி வருகிறது.

இந்தியப் பாரம்பரிய உணவிற்கு முற்றிலும் மாறுபட்ட இனிப்பு வகைகளைத் தீபாவளிச் சந்தையில் இடம்பெறச் செய்வது, சிங்கப்பூர் இந்தியச் சமூகமும் உலகளாவிய போக்கைப் பின்பற்றுவதைக் காட்டுகிறது.