📅 Saturday, 26 September 2026 IST | புரட்டாசி 10, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 09, 2026 07:02 PM

எனக்கு பிள்ளைகளிடம் மனக்குறை இருக்கிறது.. அண்ணன் மகனை புகழ்ந்த இயக்குநர் இரா.சரவணன்

எனக்கு பிள்ளைகளிடம் மனக்குறை இருக்கிறது.. அண்ணன் மகனை புகழ்ந்த இயக்குநர் இரா.சரவணன்

சென்னை: தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் இரா.சரவணன். அவர் கடைசியாக இயக்கிய நந்தன் திரைப்படம் மெகா ஹிட்டானது. ரஜினிகாந்த் உள்ளிட்டோர் எல்லாம் பாராட்டி தள்ளிவிட்டார்கள். அதற்கு பிறகு சஞ்காரம் என்ற நாவலையும் எழுதினார். விரைவில் அதுவும் படமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அவரது முகநூல் பதிவு ஒன்று கவனத்தை ஈர்த்திருக்கிறது.

பத்திரிகையாளரான இரா.சரவணன் கத்துக்குட்டி படத்தை இயக்கி இயக்குநராக மாறினார். அந்தப் படம் தோல்வியைத்தான் சந்தித்தது. இருப்பினும் முதல் படத்திலேயே விவசாயம் பற்றி படத்தில் பேசியிருந்தார். அதற்கு பிறகு இயக்கிய உடன்பிறப்பே திரைப்படம் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. இறுதியாக இயக்கியதுதான் நந்தன். பட்டியலினத்தை சேர்ந்த ஒருவர் அதிகாரத்துக்கு வந்தாலும்; இந்த சமூகத்தால் ஒரு மாற்றமும் நிகழாது என்பதையும், ஏன் இந்த கெடுபிடி என்பதையும் பொட்டில் அடித்தாற்போல் பேசியிருந்தார்.

குவிந்த பாராட்டு: அந்தப் படம் வந்தபோது அனைவருமே பாராட்டி தள்ளிவிட்டார்கள். சசிகுமாரும் உயிரை கொடுத்து நடித்திருந்தார். ரசிகர்களிடம் மட்டுமின்றி செலிபிரிட்டிகளிடம் பெரிய வரவேற்பை பெற்றது. ரஜினிகாந்த் உள்ளிட்டோரும் பாராட்டினார்கள். அடுத்ததாக அவர் இயக்கவிருக்கும் படம் குறித்து விரைவில் அறிவிப்பு வரும் என்று தெரிகிறது. அநேகமாக தான் எழுதிய சஞ்காரம் நாவலையே படமாக எடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

முகநூல் பதிவு: இந்நிலையில் அவரது முகநூல் பதிவு ஒன்று கவனத்தை ஈர்த்திருக்கிறது. அவர் தன் முகநூலில், " என் மகனும் மகளும் நகரத்துவாசிகள். நல்ல நாள் பெரிய நாள் எனக் கிராமத்துக்குக் கூப்பிட்டால்கூட, "அங்க பூச்சி இருக்கும்..." எனச் சொல்லி வர மறுப்பான் மகன். மகளுக்கும் கிராமத்தின் மீது அவ்வளவு ஈர்ப்பு இல்லை. இரு பிள்ளைகளும் நகர விரும்பிகளாக மாறிப் போனதில் எனக்குப் பெரிய மனக்குறை. இதற்கான தீர்வாய் வாய்த்தவன் #நன்னிலன். என் தம்பி மகன். கிஞ்சித்தும் மாறாத கிராமத்து விதை.

அவன் ஒரு மகத்துவன்: "சென்னைக்கு வாரியாப்பா?" எனக் கேட்டால், "நான் அங்க வந்துட்டா இங்க ஆடு, கோழியெல்லாம் யார் பார்க்கிறது?" என்பான். மரங்களைக் கட்டிக்கொண்டு பேசுகிற மகத்துவன். ஆட்டுக்குக் கிளை ஒடித்தாலும், "செடிய ஒடிக்காதீங்கப்பா... அதுக்கு வலிக்கும்ல.." என்பான். கோழிகளுக்குப் பெயர் வைக்கிறான். "அஞ்சாறு முட்டை ஏன் பொரிக்கலை?" எனக் குஞ்சுத்தாய் கோழியிடம் கேள்வி கேட்கிறான்.

விதைகள் வீரியமானவை: "நல்லா சாப்பிட்டாத்தான் நல்லா வளர முடியும்..." என ஆடுகளுக்கு ஆலோசனை சொல்கிறான். நெற்று தேங்காய்களை நட்டு முளைக்க வைக்கிறான். செடி கொடிகளை அணு அணுவாக ரசிக்கிறான். "நாந்தான் உன்னை வைச்சேன். நீ என்னையவிட வளர்ந்துட்ட..." எனக் கிளைகளைப் பிடித்துக் கேட்கிறான். எப்போதுமே ஊன்றிய விதைகளைவிட தானாக விழுந்து முளைக்கிற விதைகளே வீரியமானதாக இருக்கும்.

எங்கள் தங்கமகன்: அப்படியொருவன் நன்னிலன். இன்று அவனுக்குப் பிறந்த நாள். அதுகூடத் தெரியாமல்தான் அம்மாவைப் பார்க்கக் கிராமத்திற்கு வந்திருந்தேன். நன்னிலனுக்கு வாழ்த்துச் சொல்லி, "கேக் வெட்டுவோமாப்பா?" என்றேன். "அதெல்லாம் வேணாம்பா..." என அன்போடு மறுத்துச் சிரிக்கிறான். பேச்சு முழுக்க மரம், செடி, கொடியெனவே நீள்கிறது. வேப்ப மர விதையாய், மரவள்ளிக் கிழங்காய், பூசணிக் கொடியாய், பூவரசு மரமாய் வளர்ந்து செழித்து வாழ்வாங்கு வாழடா எங்கள் தங்க மகனே" என குறிப்பிட்டிருக்கிறார்.