எனக்கு பிடித்த டெஸ்ட் பார்ட்னர்.. வாழ்த்துக்கள் நண்பா! ரஹானே ஓய்வுக்கு கோலி, ரோகித் வாழ்த்து
எனக்கு பிடித்த டெஸ்ட் பார்ட்னர்.. வாழ்த்துக்கள் நண்பா! ரஹானே ஓய்வுக்கு கோலி, ரோகித் வாழ்த்து
மும்பை: அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் அஜிங்கியா ரஹானே அறிவித்துள்ளார். இந்திய டெஸ்ட் அணியில் ரஹானேவின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருந்தது. விராட் கோலி, ரோஹித் சர்மா, சேதேஷ்வர் புஜாரா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோருடன் இணைந்து விளையாடிய ரஹானே, இந்திய அணி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை எட்டுவதில் முக்கியப் பங்கு வகித்தார்.
விராட் கோலி விளையாட முடியாத நிலையில் ரஹானே தலைமையில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்று சாதித்தது. இந்த அறிவிப்பின் போது, கண்ணீர் விட்டு அழுதபடி, தான் கடந்து செல்ல இதுவே சரியான நேரம் என்று ரஹானே கூறினார். 38 வயதான ரஹானேவுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வரும் நிலையில், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவும் அவருக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார்.
"நாம் பல ஆண்டுகளாக ஒரே டிரஸ்ஸிங் ரூமைப் பகிர்ந்து கொண்டிருக்கிறோம். நீ அடைந்துள்ள ஒவ்வொரு வெற்றிக்கும் பின்னால் எவ்வளவு கடின உழைப்பு இருக்கிறது என்பதை நான் அறிவேன். உனது அர்ப்பணிப்பும் தொழில்முறை அணுகுமுறையும் எப்போதும் உன்னை தனித்துக் காட்டுகின்றன. ஒரு அற்புதமான வாழ்க்கைப் பயணத்திற்காக வாழ்த்துகள். எனது மனமார்ந்த வாழ்த்துகள்!" என்று ரோஹித் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக, விராட் கோலி ரஹானேவை தனக்கு "மிகவும் பிடித்த டெஸ்ட் பேட்டிங் பார்ட்னர்" என்று அழைத்திருந்தார். "ஜிங்க்ஸ் , ஒரு சிறந்த ஆட்டப் பயணத்திற்கு எனது வாழ்த்துகள் நண்பா. இந்திய கிரிக்கெட்டுக்காக நீ பல அற்புதங்களைச் செய்திருக்கிறாய். உனது இந்த நீண்ட பயணக்குறித்து நீ நிச்சயமாகப் பெருமைப்படலாம். ஸ்லிப் பகுதியில் மிகவும் பாதுகாப்பான கைகளைக் கொண்ட உன்னைப் போன்ற ஒருவருடன் பேட்டிங் செய்வது எனக்கு எப்போதும் மிகவும் பிடிக்கும். உனக்கு எப்போதும் நல்வாழ்த்துகள். கடவுள் ஆசிர்வதிக்கட்டும்" என கோலி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
2011 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் இந்திய அணிக்காக விளையாடிய ரஹானே, 85 டெஸ்ட், 90 ஒருநாள் போட்டிகள் மற்றும் 20 டி20 போட்டிகளில் களமிறங்கி மொத்தம் 8414 ரன்களைக் குவித்துள்ளார். இதில் 15 சதங்களும் 51 அரைசதங்களும் அடங்கும். மேலும், இந்திய அணியை 6 டெஸ்ட் போட்டிகளில் வழிநடத்திய அவர், அதில் 4 போட்டிகளை வென்று, 2 போட்டிகளை டிராவாக முடித்துக் கொடுத்தார். குறிப்பாக, 2020-2021 ஆம் ஆண்டு இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, முக்கிய வீரர்கள் பலரின்றி மிகவும் பலவீனமடைந்திருந்த இந்திய டெஸ்ட் அணியை வழிநடத்தி, வரலாற்றுச் சிறப்புமிக்க 2-1 பார்டர்-கவாஸ்கர் தொடரை வென்று கொடுத்தார்.