எதிர்க்கட்சிகளின் இடையூறுகளுக்கு நடுவிலும் பார்லி.யில் மசோதாக்கள் நிறைவேற்றம்
புதுடில்லி: எதிர்க்கட்சிகள் இடையூறுகள் இருந்தாலும் பார்லிமெண்டில் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு வருவதாக பார்லி. விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறி உள்ளார்.
பார்லிமெண்டில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. அதன் காரணமாக அவையை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டு அவை ஒத்தி வைக்கப்பட்டு வருகிறது. இந் நிலையில், அவை நடவடிக்கைகளில் எதிர்க்கட்சிகள் இடையூறுகள் இருந்தபோதிலும் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு வருவதாக பார்லி. விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறி உள்ளார்.
அவர் மேலும் கூறி உள்ளதாவது;
காங். மற்றும் பிற கட்சிகள் இடையூறுகள், கூச்சல், குழப்பங்களுக்கு மத்தியில் அவையில் விவாதங்கள் குறைந்துள்ளன. இருந்த போதிலும் அவை நடவடிக்கைகள் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணம் உள்ளன. ராஜ்யசபாவின் தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்கள் அவை விவாதங்களில் பங்கேற்றனர்.
சிறப்பு அமர்வு நடத்தவேண்டும் என்ற எந்த முன்மொழிவும் இல்லை. ஏற்கனவே ஒரு கூட்டத்தொடர் நடந்து வரும் போது சிறப்பு அமர்வு குறித்து எப்படி விவாதிக்க முடியும். அவையில் சிறு மற்றும் குறு நிறுவனங்கள் தொடர்பான மசோதாவை நிறைவேற்றினோம்.
காங்கிரசும், மற்ற எதிர்க்கட்சிகளும் இடையூறுகளை ஏற்படுத்தினாலும் அவை நடவடிக்கைகள் நடக்கின்றன, மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. அவை செயல்படுவதில் எந்த குழப்பமும் இருக்கக்கூடாது.
தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இட ஒதுக்கீடு ஆகியவை முக்கிய பிரச்னைகள். ஆனால் காங்கிரஸ் பெண்களின் நியாயமானபிரதிநிதித்துவத்தை எதிர்க்க்கிறது.
இவ்வாறு கிரண் ரிஜிஜூ கூறினார்.