📅 Friday, 02 October 2026 IST | புரட்டாசி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics July 21, 2026 06:34 PM

Exclusive: ஒன்றிணையும் சசிகலா

Exclusive: ஒன்றிணையும் சசிகலா

Exclusive: ஒன்றிணையும் சசிகலா - தினகரன்… மன்னார்குடி குடும்பத்தின் புதிய அரசியல் அத்தியாயமா?

எடப்பாடி பழனிசாமி இந்த இணைப்பை ஏற்றுக்கொள்வாரா, அல்லது தனித்த அரசியல் பாதையைத் தொடர்வாரா என்பதே அடுத்த கட்ட அரசியல் கேள்வியாக உள்ளது.

இந்த இணைப்பு வெறும் குடும்ப இணைப்பா அல்லது அ.தி.மு.க அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் நகர்வா என்பதே தற்போதைய கேள்வியாக மாறியுள்ளது.

ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்த சசிகலா, அ.தி.மு.க-வில் மிகுந்த செல்வாக்கைப் பெற்றிருந்தார். அவரது அரசியல் முடிவுகளில் முக்கிய பங்கு வகித்தவராக டிடிவி தினகரனும் அறியப்பட்டார்.

2016-ம் ஆண்டு ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க-வில் அதிகாரப் போட்டி வெடித்தது. முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்ற நிலையில், பின்னர் சசிகலா சட்டமன்றக் குழுத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் தண்டனையை உறுதி செய்ததால், 2017-ல் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறைக்குச் செல்லும் முன், எடப்பாடி பழனிசாமியை முதல்வராகவும், டிடிவி தினகரனை அ.தி.மு.க துணைப் பொதுச்செயலாளராகவும் சசிகலா நியமித்தது அப்போது மிகப்பெரிய அரசியல் நிகழ்வாக அமைந்தது.

சசிகலா சிறையிலிருந்தபோது, டிடிவி தினகரனுக்கு தேர்தல் ஆணையம் மற்றும் அ.தி.மு.க தலைமையுடன் மோதல் ஏற்பட்டது.

2017-ம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக “குக்கர்” சின்னத்தில் போட்டியிட்டு, தினகரன் பெற்ற வெற்றி, எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க-வுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்தது.

அதன் பின்னர் 2018-ல் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். 2019 மக்களவைத் தேர்தல் மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தலில் அ.ம.மு.க தனித்துப் போட்டியிட்டாலும் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெறவில்லை. இருப்பினும், தென் மாவட்டங்களில் தினகரனுக்குத் தனிப்பட்ட ஆதரவு வாக்கு வங்கி இருப்பதை அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டினர்.

2021-ல் சிறைவாசம் முடிந்து சசிகலா வெளியே வந்தார். அ.தி.மு.க-வை மீட்டெடுப்பேன், “அம்மாவின் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவேன்” என்று தொடர்ந்து கூறி வந்தார். ஆனால் நேரடியாகக் கட்சி அமைப்பில் தலையிடாமல், மாவட்ட வாரியாக நிர்வாகிகளைச் சந்தித்து தனது ஆதரவை உயிர்ப்பிக்க முயன்றார்.

இந்த காலகட்டத்தில், தினகரன் அ.ம.மு.க-வை முன்னெடுத்தாலும், சசிகலா தனித்த அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியானது.

சசிகலா நேரடியாக அ.தி.மு.க-வை மீட்டெடுக்க விரும்பினார். தினகரன் அ.ம.மு.க-வைத் தனித்த அரசியல் சக்தியாக வளர்க்க முயன்றார். கூட்டணி அரசியல், தேர்தல் உத்தி, கட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல அம்சங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்ததாகக் கூறப்பட்டது. இதன் காரணமாக, ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அரசியல் ரீதியாக இருவரும் தனித்தனியாகச் செயல்பட்டனர்.

அ.தி.மு.க தற்போது பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வரும் நிலையில், கட்சியை மீண்டும் வலுப்படுத்த சசிகலா - தினகரன் இணைப்பு அவசியம் என்ற கருத்து அ.தி.மு.க-வின் சில மூத்த நிர்வாகிகளிடமும் எழுந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2026 தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்துவிட்ட நிலையில், கட்சியின் எதிர்காலம் குறித்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. சில மூத்த நிர்வாகிகள், “ஜெயலலிதாவின் அரசியலை மீண்டும் ஒருங்கிணைக்க சசிகலா மற்றும் தினகரன் போன்றவர்கள் தேவையாக இருக்கலாம்” என்ற கருத்தை முன்வைக்கிறார்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மறுபுறம், எடப்பாடி பழனிசாமி மாவட்ட வாரியாக நிர்வாகிகளின் கட்சி பொறுப்புகளை மாற்றி வருவதும் பலவீனமாக மாறிவருகிறது.

சமீபமாகவே டிடிவி தினகரன், அ.தி.மு.க-வுடனான உறவு குறித்து முன்பைவிட மென்மையான அணுகுமுறையை வெளிப்படுத்தி வருகிறார். அ.ம.மு.க–அ.தி.மு.க இணைப்பு குறித்துக் கேட்கப்பட்டபோது, “காத்திருந்து பார்ப்போம்” என்று பதிலளித்ததோடு, அ.தி.மு.க கடினமான சூழ்நிலையில் இருக்கும்போது தாங்கள் கூட்டணியை விட்டுச் செல்லமாட்டோம் என்றும் அவர் கூறியிருந்தார்.

சசிகலா–தினகரன் இணைப்பு நடந்தால்,

முக்குலத்தோர் ஆதரவு வாக்குகளை மீண்டும் ஒருங்கிணைக்க முயற்சி நடக்கலாம். தென் மாவட்டங்களில் அ.தி.மு.க-வின் பழைய அமைப்பை உயிர்ப்பிக்க முயற்சி மேற்கொள்ளப்படலாம். ஜெயலலிதா ஆதரவாளர்களை மீண்டும் ஒரே அணியில் கொண்டு வர முயற்சி செய்யப்படலாம். அ.தி.மு.க தலைமையின் மீது கூடுதல் அரசியல் அழுத்தம் உருவாக வாய்ப்புள்ளது.

இந்த சாத்தியமான இணைப்பு எளிதாக நடைபெறும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதவில்லை. காரணம், அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா மற்றும் டிடிவி தினகரன் மீண்டும் கட்சிக்குள் வருவதை விரும்ப மாட்டார் என்பதே அரசியல் வட்டாரங்களின் பொதுவான கணிப்பாக உள்ளது. 2022-ஆம் ஆண்டு பொதுக்குழு தீர்மானங்கள் மூலம் ஒற்றைத் தலைமையை நிலைநிறுத்திய எடப்பாடி பழனிசாமி, சசிகலா குடும்பத்தின் அரசியல் செல்வாக்கை மீண்டும் கட்சிக்குள் அனுமதிக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு என்றே கூறப்படுகிறது.

அதேநேரத்தில், இந்த விவகாரத்தில் பா.ஜ.க-வின் நிலைப்பாடும் முக்கிய பங்கு வகிக்கக்கூடும். தமிழ்நாட்டில் எதிர்க்கட்சி வாக்குகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் பா.ஜ.க தொடர்ந்து ஈடுபட்டு வரும் நிலையில், அ.தி.மு.க-வின் உள்கட்டமைப்பு மாற்றங்கள் குறித்த அதன் அணுகுமுறை முக்கியத்துவம் பெறுகிறது. சசிகலா–தினகரன் இணைப்பு அ.தி.மு.க-வுடன் மீண்டும் அரசியல் உறவாக மாறும் சூழல் உருவானால், அதற்கு பா.ஜ.க ஆதரவு அளிக்குமா அல்லது தற்போதைய தலைமையுடனேயே கூட்டணியைத் தொடர விரும்புமா என்பது கவனிக்க வேண்டிய அம்சமாக உள்ளது. ஆனால் அதே சமயம், சசிகலா–தினகரன் இணைப்பு மட்டுமல்ல, எடப்பாடி பழனிசாமி மற்றும் பா.ஜ.க எடுக்கும் அடுத்தகட்ட அரசியல் முடிவுகளும் இங்கே முக்கியமானது. அதை பொறுத்தே மன்னார்குடி குடும்பத்தின் இந்த அரசியல் நகர்வு வெற்றியா, தோல்வியா என்பது தெரியும் என்று அரசியல் நோக்கர்கள் மதிப்பிடுகின்றனர்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பிரிந்து சென்ற அரசியல் பாதைகள் மீண்டும் ஒன்றாகும் அறிகுறிகள் தென்படுகின்றன. இது வெறும் குடும்ப நல்லிணக்கமா, அல்லது அ.தி.மு.க அரசியலை மறுசீரமைக்கும் பெரிய முயற்சியா என்பது இன்னும் தெளிவாகவில்லை.

ஆனால், மன்னார்குடி குடும்பத்தின் இந்த சாத்தியமான இணைப்பு, தமிழ்நாடு அரசியலில் மீண்டும் சசிகலா–தினகரன் அத்தியாயத்தை விவாதத்தின் மையமாகக் கொண்டு வந்துள்ளது.